Published:Updated:

மாதுளை ஜூஸில் மயக்க மருந்து; பாலியல் தொல்லை! -`நாங்களும் நல்லவுங்கத்தான்' படத்தின் ஹீரோ கைது

நடிகர் விஜய் ஹரீஸ்
நடிகர் விஜய் ஹரீஸ்

`புதுப்பட ஹீரோ விஜய் ஹரீஸ் கொடுத்த பழச்சாறைக் குடித்ததும் நான் மயங்கிவிட்டேன்' என்று மாணவி கண்ணீர்மல்க புகாரளித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலைய வளாகத்தில் செயல்படும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்குச் சில நாள்களுக்கு முன் இளம் பெண் ஒருவர் வந்தார். துணை கமிஷனர் ஜெயலட்சுமியைச் சந்தித்த அவர், தன்னை கல்லூரி மாணவி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் அந்த மாணவி பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

அந்த மனுவில், ``நான், வடசென்னையில் குடியிருந்துவருகிறேன். கல்லூரியில் படித்துவரும் எனக்கு, தோழி ஒருவர் மூலம் அண்ணாநகரைச் சேர்ந்த சூரியகாந்த் என்பவரின் மகன் விஜய் ஹரீஸ் (25) என்பவர் அறிமுகமானார்.

மாதுளை ஜூஸில் மயக்க மருந்து; பாலியல் தொல்லை! -`நாங்களும் நல்லவுங்கத்தான்' படத்தின் ஹீரோ கைது
representational image

இருவரும் போனில் பேசிவந்தோம். இந்தச் சமயத்தில் விஜய் ஹரீஸ் என்னைக் காதலிப்பதாகக் கூறினார். அதற்கு நானும் சம்மதித்தேன். இந்தச் சமயத்தில் கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்கு என்னை வரும்படி விஜய் ஹரீஸ் கூறினார். அதன்படி நான் அங்கு சென்றேன். அப்போது அந்த வீட்டில் விஜய் ஹரீஸ், எனக்கு மாதுளம் பழச்சாறைக் கொண்டு அன்பாக உபசரித்தார்.

அதைக் குடித்ததும் எனக்கு மயக்கம் ஏற்பட்டது. அப்போது விஜய் ஹரீஸ் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். மேலும், அவர் என்னை ஆபாசமாகப் படம் எடுத்துள்ளார். மயக்கம் தெளிந்தபிறகு விஜய் ஹரீஸிடம் ஏன் இப்படி நடந்து கொண்டாய் என்று கூறி தகராறு செய்தேன். அதற்கு அவர், நாம் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம் என்று கூறி சமாதானப்படுத்தினார். இதையடுத்து அங்கிருந்து வீட்டுக்கு வந்துவிட்டேன்.

representational image
representational image

இந்தச் சமயத்தில் அவரின் விருப்பத்தின்படி நான் நடக்கவில்லை என்றால் என்னுடைய புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக விஜய் ஹரீஸ் மிரட்டி வருகிறார். மேலும் இந்தத் தகவலை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் கூறி மிரட்டுகிறார். எனவே, விஜய் ஹரீஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரையடுத்து துணை கமிஷனர் ஜெயலட்சுமி, பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரித்தார். பின்னர், இதுதொடர்பாக வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கும்படி திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுகுணாவுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, திருவொற்றியூர் போலீஸார், வழக்குப்பதிந்து விஜய் ஹரீஸிடம் விசாரித்தனர். அப்போது அவர், விருகம்பாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த சம்பவத்தைக் கூறினார். பின்னர் விஜய் ஹரீஸின் செல்போனையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அதன்பிறகு விஜய் ஹரீஸைக் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

representational image
representational image

இதுகுறித்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் கூறுகையில் ``மாணவி அளித்த புகாரின்பேரில் விஜய் ஹரீஸைக் கைது செய்துள்ளோம். விஜய் ஹரீஸ், `நாங்களும் நல்லவுங்கத்தான்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இவரின் தந்தை சூர்ய காந்த், சீவலப்பேரி பாண்டி, கிழக்கு சீமையிலே ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார்" என்றனர்

அடுத்த கட்டுரைக்கு