சென்னை: `அவனைக் கொலை செய்' - காதலியின் ஆசையை நிறைவேற்ற சிறைக்குச் சென்ற இளைஞர்!

சென்னையில் 16 வயது சிறுமியைக் காதலித்த வடமாநில இளைஞர், அவரைத் தன்னோடு தங்க வைத்திருந்தார். அதைக் கண்டித்த உறவினரைக் கொலை செய்த வழக்கில் சிறுமியும் இளைஞரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சென்னை செங்குன்றம் பாலவாயல், பெரியார்நகர், அரிசந்திரன் தெருவில் மார்டன் ரைஸ்மில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒடிசாவைச் சேர்ந்த கிருஷ்ணா (23) என்பவர் கடந்த 13-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ரைஸ்மில் காவலாளி சிவக்குமார் என்பவர் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் செங்குன்றம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் ஒடிசா மாநிலம், நபருங்காபூர் பகுதியைச் சேர்ந்த பன்விமால் என்கிற ராகுல் (25) மற்றும் அவரின் காதலியான 16 வயது சிறுமி ஆகியோருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி ஒன்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணா கொலை செய்யப்பட்டதும் ராகுலின் காதலியோடு கிருஷ்ணாவுக்குப் பழக்கம் இருந்ததாகக் கூறப்பட்டது. அதைக் கண்டித்ததால்தான் இந்தக் கொலை நடந்ததாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால், போலீஸாரின் தொடர் விசாரணையில்தான் காதலி கூறியதற்காக உறவினரைக் கிருஷ்ணா கொலை செய்தது தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட கிருஷ்ணாவின் உறவினர் பன்விமால் என்கிற ராகுல். இவரின் காதலி 16 வயது சிறுமி ஆகியோர் ரைஸ்மில்லிலேயே தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். 16 வயது சிறுமி, ராகுலுக்கு உணவு சமைத்து கொடுத்து வந்திருக்கிறார். கடந்த 13-ம் தேதி இரவு 10.30 மணியளவில் ராகுலின் காதலியான சிறுமியை சொந்த ஊருக்குச் செல்லும்படி கிருஷ்ணா கூறியிருக்கிறார். அதனால், சிறுமிக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது சிறுமியை கிருஷ்ணா அடிக்க முயன்றதாகத் தெரிகிறது.

அப்போது ராகுல் அங்கு இல்லை. அவர் வீட்டுக்கு வந்தததும் கிருஷ்ணா, தன்னை அடிக்க வந்த தகவலை சிறுமி கூறி கதறி அழுதிருக்கிறார். அதோடு, கிருஷ்ணாவைக் கொலை செய் என்று ஆவேசமாகத் தெரிவித்திருக்கிறார். `அதுதான் என்னுடைய ஆசை என சிறுமி தெரிவித்திருக்கிறார். அதனால் காதலிக்காக கிருஷ்ணாவை ராகுல் கொலை செய்துவிட்டு சிறுமியுடன் தப்பிச் சென்று விட்டார். இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராகுலை சிறையில் அடைத்திருக்கிறோம். சிறுமி, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்" என்றனர்.