Published:Updated:

சென்னை: வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்! - மிக்ஸி விற்க வந்த வடமாநில இளைஞரால் நேர்ந்த கொடுமை

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முகமது ஆரீப்
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முகமது ஆரீப்

சென்னை வியாசர்பாடியில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மிக்ஸி வியாபாரம் செய்துவந்தார். அப்போது இளம்பெண்ணிடம் பேச்சுக் கொடுத்த அந்த இளைஞர், வீட்டில் யாரும் இல்லாததால் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

சென்னை வியாசர்பாடி பகுதியில் கிரிஜா (28) (பெயர் மாற்றம்) என்பவர் கணவருடன் வாடகை வீட்டில் வசித்துவருகிறார். கிரிஜாவின் கணவர், பிசினஸ் செய்துவருகிறார். தொழில் நிமித்தமாக அவர் அவ்வப்போது வெளியே செல்வது வழக்கம். அதனால் கிரிஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது கிரிஜா குடியிருக்கும் பகுதியில் மிக்ஸி விற்க வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்தார். இவர், கிரிஜாவிடமும் மிக்ஸி வேண்டுமா, குறைந்த விலையில் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். அப்போது கிரிஜா, இந்தியில் பதிலளித்திருக்கிறார். உடனே மிக்ஸி விற்கும் இளைஞர், கிரிஜாவிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டிருக்கிறார்.

முகமது ஆரீப்
முகமது ஆரீப்

அப்போது வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்துகொண்ட வடமாநில இளைஞரும் கிரிஜாவின் பின்னால் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். அதைப் பார்த்து கிரிஜா அதிர்ச்சியடைந்து, `வெளியில் போ’ என இந்தியில் திட்டியிருக்கிறார். அப்போது கத்தியை எடுத்த வடமாநில இளைஞர், கிரிஜாவைக் குத்திவிடுவதாக மிரட்டியிருக்கிறார். பின்னர் கத்திமுனையிலேயே கிரிஜாவை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, `மீண்டும் வருவேன்’ என்று கூறிய இளைஞர், வீட்டைவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார்.

வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய கணவரிடம் கிரிஜா, தனக்கு நடந்த கொடுமையைக் கூறி கதறி அழுதார். அதைக் கேட்டு கிரிஜாவின் கணவர் அதிர்ச்சியடைந்தார். அப்போது கிரிஜாவிடம் யார் அந்த இளைஞர் என கணவர் விசாரித்தபோது நாளைக்கும் அவன் வருவதாகக் கூறிய தகவலைத் தெரிவித்தார். அதனால் அந்த இளைஞரை கையும் களவுமாகப் பிடிக்க கிரிஜாவின் கணவர் திட்டமிட்டார். அது தொடர்பாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்தார். வீட்டில் தனியாக கிரிஜா இருக்க, அவரின் கணவர் மற்றும் நண்பர்கள் அருகிலேயே காத்திருந்தனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இந்தச் சமயத்தில் கிரிஜாவிடம் தவறாக நடந்த இளைஞர், வீட்டுக்கு வந்தார். அதைப் பார்த்த கிரிஜாவின் கணவர் மற்றும் நண்பர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து தகவலறிந்ததும் உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் போலீஸார் இளம்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட இளைஞரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் முகமது ஆரீப் (20), செங்குன்றம் காவாங்கரையில் தங்கியிருந்து தெருத் தெருவாக வியாபாரம் செய்துவருவது தெரியவந்தது. இது தொடர்பாக எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரை விசாரிக்கும்படி உதவி கமிஷனர் அரிக்குமார் உத்தரவிட்டார்.

அதோடு முகமது ஆரீப், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன் பிறகு கிரிஜா, எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் முகமது ஆரீப் மீது பாலியல் வன்கொடுமை (376 ஐபிசி) சட்டப்பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``முகமது ஆரீப், உத்தரப்பிரதேச மாநிலம், முசாபூர் நகரைச் சேர்ந்தவர். சென்னையில் தங்கி மிக்ஸி பிசினஸ் செய்துவந்திருக்கிறார். வியாசர்பாடியில் மிக்ஸி விற்க சென்றபோது கிரிஜாவைப் பார்த்திருக்கிறார்.

கைது
கைது
Representational Image
உ.பி: துப்பாக்கி முனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! - பட்டியலினப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

அப்போது இருவரும் இந்தியில் பேசியிருக்கின்றனர். கிரிஜாவிடம் மிக்ஸி விற்பதைப்போல பேச்சுக் கொடுத்த முகமது ஆரீப் வீட்டில் யாரும் இல்லை என்பதை கிரிஜா மூலம் தெரிந்துகொண்டார். பின்னர்தான் அவர், கிரிஜாவிடம் தவறாக நடந்திருக்கிறார். கிரிஜா அளித்த தகவலின்படி முகமது ஆரீப்பை கைதுசெய்திருக்கிறோம். கிரிஜாவுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்திருக்கிறது. அதனால் அவரின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு கிரிஜா தொடர்பான விவரங்களை வெளியில் சொல்லவில்லை "என்றனர்.

மிக்ஸி விற்க தெருத் தெருவாக செல்லும் முகமது ஆரீப், வீட்டில் தனியாக இருந்த கிரிஜாவிடம் தவறாக நடந்த சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு