Published:Updated:

நான்கரைக் கிலோ சிக்கன் கேட்ட கஸ்டமர்; டோர் டெலிவரி! -சிக்கிய டிராவல்ஸ் அதிபர்

சரவணன்
சரவணன்

சென்னையில் ஊரடங்கு காலகட்டத்தில் கோழிக்கறியை ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பையில் வைத்து ரகசியமாக விற்ற டிராவல்ஸ் அதிபரை போலீஸார் கைது செய்தனர்.

ஊரடங்கு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. இதுவரையில், 5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னையில் பாதிப்பின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது.

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ வல்லுநர் குழுவினருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

சிக்கன் டோர் டெலிவரி!

முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகள் மூடப்பட்டுள்ளன. அதனால் இறைச்சிக் கடைகள், மீன் கடைகள் பூட்டப்பட்டதால் அசைவப் பிரியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சிக்கன் சாப்பிட ஆசைப்படுபவர்களை குறிவைத்து சென்னையில் ஒரு கும்பல் ரகசியமாக அதை விற்பனை செய்து வந்துள்ளது. போலீஸாரிடம் சிக்கிக் கொள்ளாமலிருக்க அந்தக் கும்பல் புத்திசாலித்தனமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட்டுள்ளது.

`போன் செய்தால் டோர் டெலிவரி..!' - ஊரடங்கில் தேடிச் சென்று உணவு கொடுக்கும் இன்ஸ்பெக்டர்

சிக்கன் விற்பனை குறித்து கண்ணகிநகர் இன்ஸ்பெக்டர் வீரக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வீரக்குமார் தலைமையிலான போலீஸார், தங்களுக்கு கிடைத்த தகவலின்படி கண்ணகிநகரில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவரை பின்தொடர்ந்து சென்றனர்.

ஆன்லைன் உணவு டெலிவரி

போலீஸார் பின்தொடர்வதைக் கவனிக்காத அந்த இளைஞர், உணவு டெலிவரி செய்யும் பையிலிருந்து அரை கிலோ சிக்கனை ஆர்டர் செய்த வீட்டில் டெலிவரி செய்தார். அப்போது அங்கு வந்த போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தின் டீ சர்ட்டை அணிந்திருந்த அந்த இளைஞர் வைத்திருந்த பையில் நான்கரை கிலோ சிக்கன் இருந்தது.

பத்தில் இரண்டாகக் குறைந்த மாரடைப்பு... கொரோனா லாக்டௌனின் மறுபக்கம்!

அதைப் போலீஸார் பறிமுதல் செய்து மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட சிக்கனை அழித்தனர். இதையடுத்து கோழிக்கறியை விற்பனை செய்த இளைஞரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் கண்ணகி நகரைச் சேர்ந்த சரவணன் (35) எனத் தெரியவந்தது.

டிராவல்ஸ் அதிபர்!

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ``ஊரடங்கு காலகட்டத்தில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்வதைப் போல சிக்கனை விற்பனை செய்து வந்த சரவணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். இவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். துரைப்பாக்கத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவந்த சரவணன், சமூக ஆர்வலர் எனக்கூறிக் கொண்டு சமூகவலைதளங்களில் வீடியோக்களை பதிவு செய்துவந்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக டிராவல்ஸ் நிறுவனத்தில் வருமானம் இல்லாததால் ஆன்லைன் உணவு டெலிவரி வேலை செய்ய தொடங்கியுள்ளார். ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும்போது அசைவப் பிரியர்களிடம் சிக்கனுக்கான ஆர்டரை எடுத்துள்ளார்.

கண்ணகிநகர் காவல்நிலையம்
கண்ணகிநகர் காவல்நிலையம்
`டெலிவரி பாய், கஞ்சா விற்றது ஏன்?' -டோர் டெலிவரி செய்தபோது சிக்கிய பின்னணி

சரவணனின் செல்போனுக்கு சிக்கனுக்காக ஆர்டர் வந்ததும் தனக்கு தெரிந்த கோழிக்கடை வியாபாரி ரகுநாதனுக்கு அவர் தகவல் கொடுப்பார். உடனே அரை கிலோ எடையுள்ள பேக் சிக்கனை ரகுநாதன், சரவணனிடம் கொடுத்துவிடுவார். அதை உணவு டெலிவரி செய்வது போல சரவணனும் விற்பனை செய்துவந்துள்ளார். ஊரடங்கு நேரம் என்பதால் வழக்கமான விலையைவிட கூடுதலாகவும் சிக்கனை விற்பனை செய்துவந்துள்ளார். சரவணன் கொடுத்த தகவலின்படி வியாபாரி ரகுநாதன் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு