Published:Updated:

சென்னை: திருவான்மியூர் கோயில் உண்டியலில் காணிக்கை போட்டுவிட்டுத் திருடிய பெயின்டர்!

பெயின்டர் சுபாஷ்
பெயின்டர் சுபாஷ்

சென்னை திருவான்மியூர் கோயிலில் ஒரு ரூபாய் காணிக்கையைப் போட்டுவிட்டுத் திருடிய பெயின்டரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

சென்னை, திருவான்மியூரில் மருந்தீசுவரர் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலின் நடையை அக்டோபர் 15-ம் தேதி இரவு சாத்திவிட்டுச் சென்ற நிர்வாகிகள், 16-ம் தேதி அதிகாலை வழக்கம்போல வந்து கதவுகளைத் திறந்தனர். அப்போது கோயிலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு உண்டியல்கள் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உண்டியலிலிருந்த பணமும் கொள்ளைபோயிருந்தது. இது குறித்து திருவான்மியூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளைப் பதிவு செய்தனர்.

திருவான்மியூர் கோயில் திருட்டு
திருவான்மியூர் கோயில் திருட்டு

சிசிடிவி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது உண்டியல்களை உடைப்பதற்கு முன் சாமி கும்பிடும் அந்த நபர், பயபக்தியாக காணிக்கையையும் உண்டியலில் போடுவதைக் கண்டறிந்தனர். உடனடியாக சிசிடிவி மூலம் திருடனைப் பிடிக்க போலீஸார் முடிவு செய்தனர். திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் அன்புக்கரசன் தலைமையில் தலைமைக் காவலர் கோபால், காவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் திருட்டு குறித்து விசாரித்து வந்தனர். அப்போது கோயிலில் உண்டியலை உடைத்து திருடியவன் பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பதை போலீஸார் கண்டறிந்தனர்.

இதையடுத்து சுபாஷை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவரின் வீட்டில் 1,500 ரூபாய்க்கான சில்லறைகள் இருந்தன. அதையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். சுபாஷிடம் போலீஸார் விசாரித்தபோது பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இது குறித்து, ``சம்பவத்தன்று சுபாஷ், கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்றிருக்கிறார். கஞ்சா போதையில் கோயில் வளாகத்துக்குள்ளேயே தூங்கிவிட்டார். அதை யாரும் கவனிக்கவில்லை. வழக்கம்போல கோயிலைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

சென்னை: மகளுக்காகத் திருடிய தந்தை - ரூ. 3 கோடி சொத்து இருந்தும் திருடனாக மாறியது ஏன்?
உடைக்கப்பட்ட உண்டியல்
உடைக்கப்பட்ட உண்டியல்

நள்ளிரவில் கண்விழித்த சுபாஷ், கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். பெயின்டராக வேலை பார்த்துவரும் சுபாஷுக்கு கொரோனா காரணமாக வேலை இல்லை. அதனால் வருமானமின்றித் தவித்த சுபாஷ், உண்டியலைத் திருட முடிவு செய்திருக்கிறார். சாமியைக் கும்பிட்ட சுபாஷ், ஒரு ரூபாய் காணிக்கையைச் செலுத்தியிருக்கிறார். பிறகு உண்டியல்களிலிருந்த 4,500 மதிப்பிலான ரூபாய் மற்றும் சில்லறைகளை மூட்டையாகக் கட்டிய சுபாஷ், பின்பக்க மதில் சுவர் வழியாகத் தப்பியிருக்கிறார். சுபாஷின் மனைவியின் தாய் வீடு செங்கல்பட்டு, மணப்பாக்கத்தில் இருக்கிறது. கர்ப்பிணியான அவர் மனைவி, பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அந்தச் சமயத்தில்தான் சுபாஷ், கோயில் உண்டியல்களை உடைத்திருக்கிறார். கொள்ளையடித்த பணத்தில் 2,000 ரூபாயை மனைவிக்கு அனுப்பிவைத்திருக்கிறார். 1,000 ரூபாயை செலவழித்திருக்கிறார். மீதமிருந்த 1,500 ரூபாயை பறிமுதல் செய்திருக்கிறோம்" என்று போலீஸார் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு