Published:Updated:

`நீயே இப்படிப் பேசினால் என்ன செய்வேன்?'- ஆசிரியை தற்கொலை வழக்கில் பேராசிரியர் வாக்குமூலம்

கைதான நடராஜன்
கைதான நடராஜன்

என்னைச் சந்திக்க ஹரிசாந்தி கல்லூரிக்கு வருவார். நாங்கள் இருவரும் கல்லூரி வளாகத்தில் பேசுவோம். எங்கள் இருவரின் பழக்கம் கல்லூரியில் எங்களின் நண்பர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, கர்லம்பாக்கம், எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரின் மனைவி ராஜகுமாரி. இந்தத் தம்பதியின் மகள் ஹரிசாந்தி (32). இவர், சென்னை பெரம்பூரில் உள்ள அரசு மாநகராட்சிப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றிவந்தார். கடந்த 17-ம் தேதி, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியின் வகுப்பறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஹரிசாந்தி
ஹரிசாந்தி

18-ம் தேதி காலையில்தான் ஹரிசாந்தியின் சடலத்தைப் போலீஸார் கைப்பற்றினர். சாந்தியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் சகோதரர் மணிகண்டன் அரும்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் ஸ்ரீனிவாசலு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சங்கர் விசாரணை நடத்தினார். விசாரணையில் ஹரிசாந்தியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அரும்பாக்கம் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றிய நடராஜனைப் போலீஸார் கைது செய்தனர்.

போலீஸாரின் விசாரணையில் பேசிய நடராஜன், ``என்னுடைய சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, எம்.என் கண்டிகை, கோணசமுத்திரம். எனக்கு சிறுவயது முதல் ஹரிசாந்தியைத் தெரியும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருவரும் பி.ஹெச்டி படித்தோம். அப்போதுதான் எங்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் காதலாக மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தோம். இந்தச் சமயத்தில் ஹரிசாந்திக்கு அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தெலுங்குப் பாடப் பிரிவில் உதவி பேராசிரியையாகப் பணி கிடைத்தது. அங்கு அவர் பணியாற்றிவந்தார்.

நடராஜன்
நடராஜன்

நானும் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றிவந்தேன். வெவ்வேறு இடங்களில் பணியாற்றினாலும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். இந்தச் சமயத்தில் எனக்கும் என் உறவுக்காரப் பெண் ஒருவருக்கும் இடையே திருமணம் நடந்தது. இதனால் ஹரிசாந்தி, கடும் மனவேதனையடைந்தார்.

என் சூழ்நிலையை அவரிடம் கூறியபோது என்னைப் புரிந்துகொண்டார். கடந்த 2012-ம் ஆண்டில் ஹரிசாந்தி, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று பெரம்பூரில் உள்ள அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியைப் பணிக்குச் சென்றுவிட்டார். அவர் வேலை பார்த்த கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணியிடம் காலியாக இருந்தது.

இதனால், அந்த வேலையில் என்னைச் சேரும்படி கூறினார். அதற்காக எனக்கு அவர் சிபாரிசும் செய்தார். அதனால், எனக்கு அந்த வேலை கிடைத்தது. அடிக்கடி என்னைச் சந்திக்க ஹரிசாந்தி கல்லூரிக்கு வருவார். நாங்கள் இருவரும் கல்லூரி வளாகத்தில் பேசுவோம். எங்கள் இருவரின் பழக்கம் கல்லூரியில் எங்களின் நண்பர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

இந்தச் சமயத்தில் கடந்த 17-ம் தேதி பிற்பகலில் ஹரிசாந்தி, கல்லூரிக்கு வந்து என்னைச் சந்தித்தார். அப்போது அவர், தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். அதற்கு அவரிடம், `நான் எப்படி உன்னை திருமணம் செய்து கொள்ள முடியும். எல்லாம் தெரிந்த நீயே இப்படி பேசினால் நான் என்ன செய்வேன்' என்று கூறினேன்.

தூக்கில் தொங்கிய நிலையில் ஹரிசாந்தி
தூக்கில் தொங்கிய நிலையில் ஹரிசாந்தி

இதனால் எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஹரிசாந்தியிடம் சண்டை போடாமலிருக்க கல்லூரியிலிருந்து வெளியில் சென்றுவிட்டேன். அதன்பிறகும் அவர், எனக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தார். நானும் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தேன். ஆனால் அவர் சமாதானமாகவில்லை. தொடர்ந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி எனக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தார். அதனால் என் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டேன்.

திருவல்லிக்கேணியில் உள்ள மேன்சனுக்குச் சென்று தூங்கினேன். என் மனைவி, குழந்தைகள் சொந்த ஊரில் உள்ளனர். 18-ம் தேதி காலையில் செல்போனை ஆன் செய்தேன். அப்போது, ஹரிசாந்தி, முதல் மாடியில் உள்ள தெலுங்கு பாடப்பிரிவில் உள்ள வகுப்பறையில் தூக்குப் போடப் போவதாகத் மெசேஜ் அனுப்பியிருந்தார். அதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றேன். அங்கு அவர் கூறிய வகுப்பறைக்குச் சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். பின்னர், கல்லூரி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தேன்.

`நீ மட்டும் குடும்பம், குழந்தைகளோடு இருக்கிறாய்!' -ஆசிரியையின் விபரீத முடிவால் சிக்கிய பேராசிரியர்

போலீஸாரிடம் சிக்கிக் கொள்ளாமலிருக்க ஹரிசாந்தி எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழித்துவிட்டேன். ஆனால், ஹரிசாந்தியின் செல்போனை ஆய்வு செய்த போலீஸார் அவர் எனக்கு அனுப்பிய மெசேஜ்கள் குறித்து என்னிடம் விசாரித்தனர். அப்போது ஹரிசாந்தியை காதலித்தது முதல் அவர் இறப்பதற்கு முன் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ் வரை நடந்த எல்லாவற்றையும் போலீஸாரிடம் கூறினேன்" எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு