Published:Updated:

`ராணுவ புல்லட்டுகள் விற்பனைக்கு..!' -ரூ.100 கோடி மோசடிப் பணத்தில் சொகுசாக வாழும் கிராமம்

ராணுவ வாகன விற்பனைக்கான போலி ஆவணம்
ராணுவ வாகன விற்பனைக்கான போலி ஆவணம்

`மோசடி செய்து சம்பாதிக்கும் பணத்தை எங்கள் கிராம மக்களுக்கு பகிர்ந்தளித்து சொகுசாக வாழ்ந்துவந்தோம்' என்று சென்னை போலீஸாரிடம் சிக்கிய வடமாநில கொள்ளையர்கள் கூறியுள்ளனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு (சிசிபி) தொடர்ச்சியாக வந்த புகாரில், பொருள்களை விற்கவும் வாங்கவும் பயன்படுத்தப்படும் பிரபலமான இணையதளத்தில் மோசடி நடப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் புகார் தொடர்பாக விசாரித்தனர். விசாரணையில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இப்படியொரு நூதன மோசடியில் ஈடுபடுவதைப் போலீஸார் கண்டறிந்தனர்.

மோசடி வழக்கில் கைதான நபர்
மோசடி வழக்கில் கைதான நபர்

இதையடுத்து மோசடியில் ஈடுபடுவோரின் விவரங்களை போலீஸார் சேகரித்தனர். அப்போது ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரைச் சேர்ந்த நரேஷ்பால்சிங், பச்சுசிங் ஆகிய இருவர் மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது. அதனால் மோசடி கும்பலைப் பிடிக்க சென்னையிலிருந்து சிசிபி போலீஸார் ராஜஸ்தான் சென்றனர். ராஜஸ்தானில் முகாமிட்ட சென்னை போலீஸார், உள்ளூர் போலீஸார் மற்றும் இன்ஃபார்மர்கள் மூலம் மோசடி கும்பல்கள் குறித்த தகவல்கள், நடவடிக்கைகளைக் கண்காணித்தனர். பின்னர் நரேஷ் பால்சிங், பச்சுசிங் ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.

அப்போது, தீரன் படத்தில் வரும் காட்சிபோல இருவரையும் காப்பாற்ற அந்தக் கிராமமே சென்னை போலீஸாரை சுற்றிவளைத்தது. நிலைமை விபரீதமானதும் உள்ளூர் போலீஸாரின் உதவியோடு சென்னை போலீஸார் அங்கிருந்து வெளியேறினர். பின்னர், காவல் நிலையத்தில் அந்தக் கிராம மக்களோடு பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பிறகு இருவரையும் அந்த மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சென்னை போலீஸார், இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

மோசடி வழக்கில் கைதான நபர்
மோசடி வழக்கில் கைதான நபர்

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``ஒஎல்எக்ஸ் இணையதளத்தில் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் ராணுவ வீரர்களின் புல்லட்டுகள் விற்பனைக்கு உள்ளதாக இந்தக் கும்பல் விளம்பரம் செய்யும். அந்த விளம்பரத்தில் வாகனங்களின் புகைப்படங்ளை பதிவு செய்வார்கள். ராணுவ வாகனம் என்பதால் தரமாக இருக்கும் என்பதை நம்பி, விளம்பரத்தில் உள்ள செல்போன் நம்பர்களில் தொடர்பு கொண்டு பேசுபவர்களிடம் ராணுவ அதிகாரிகளைப்போல மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் பேசுவார்கள். அப்போது ராணுவத்தின் பழைய வாகனங்களை வாங்க வேண்டும் என்றால் சில விதிமுறைகள் இருப்பதாக அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கூறுவார்கள்.

`ராணுவத்தில் வேலை, இரவு உணவு தேவை!' - மர்ம நபரின் மோசடியால் கொதிக்கும் கும்பகோணம் ஹோட்டல்கள்

அதற்குச் சம்மதிப்பவர்களிடம் முதலில் பணத்தைக் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பச் சொல்வார்கள். பணம் வங்கிக் கணக்குக்கு சென்றதும் அந்தச் செல்போன் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுவிடும். அதனால் பணம் அனுப்பிய வங்கிக் கணக்கை ஆய்வு செய்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளோம். இந்தக் கும்பல் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல் கிடைத்துள்ளது. அந்தப் பணத்தை கிராம மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்துள்ளனர். அதனால்தான் அந்தக் கிராம மக்கள் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துவருகின்றனர். அந்த விசுவாசம் காரணமாக மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்ற போலீஸாரை முற்றுகையிட்டனர். கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் கைது செய்தோம்" என்றனர்.

பைக்
பைக்

தொடர்ந்து நம்மிடம் பேசிய போலீஸார், ``மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், ராணுவத்தின் இணையதளத்தில் உள்ள தகவல்களை முதலில் சேகரிப்பார்கள். பின்னர், தங்களை ராணுவத்தில் வேலை பார்ப்பது போலவும் ராணுவ வாகனத்தை விற்பதாகவும் ஓஎல்எக்ஸில் விளம்பரம் செய்வார்கள். அதை நம்பி, டீலிங் பேசுவர்களிடம் முதல்கட்ட தவணைத் தொகையை குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பச் சொல்வார்கள். பின்னர், அந்த வங்கிக் கணக்கு மூடப்பட்டுவிடும். பணம் அனுப்புபவர்களை நம்ப வைக்க வாகனம் தொடர்பாகப் போலி ஆவணங்களை அனுப்பி வைப்பார்கள். இந்தியா முழுவதும் இந்த மோசடிக் கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. தற்போது 2 பேர் சிக்கியுள்ளனர். இவர்களுக்குப் பின்னணியில் பலர் உள்ளனர். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு