Published:Updated:

`கில்லி படத்தைப் பார்த்தோம்; மிளகாய்ப் பொடியுடன் வந்தோம்!'- நண்பனுக்காக திருட வந்தவர்கள் வாக்குமூலம்

சென்னையில் கொள்ளையடிப்பது எப்படி என்று தெரியாததால் மிளகாய்ப் பொடி, கத்தியோடு 7 பேர் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டனர்.

மிளகாய்
மிளகாய்

சென்னை சௌகார்பேட்டை பகுதியில் பூக்கடை உதவி கமிஷனர் லட்சுமணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமைக் காவலர் யாகியா மற்றும் காவலர் முரளி, நவ்சத், முகமது ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 பேர் அங்கு நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களைப் போலீஸாரிடம் விசாரித்தபோது 4 பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களைப் பிடித்த போலீஸார் ஏழுகிணறு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

NAVEEN
NAVEEN

விசாரணையில் அவர்கள் ஆந்திரா, நகரியைச் சேர்ந்த நவீன் (26), புத்தூரைச் சேர்ந்த பவன் (26), கொடுங்கையூரைச் சேர்ந்த பிரகாஷ், அரக்கோணத்தைச் சேர்ந்த கோபி (25) ஆகியோர் எனத் தெரியவந்தது. இவர்களிடம் விசாரித்தபோது ஒரு நீண்ட கதையை போலீஸாரிடம் கூறியுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``எங்களிடம் சிக்கிய 4 பேரில் கோபி மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மற்ற மூன்று பேரும் முதல் முறையாக கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட வந்தது தெரியவந்தது.

சென்னை திரு.வி.க.நகரைச் சேர்ந்த மன்னன் என்பவருக்காக நகைகளை திருட வந்துள்ளனர். மன்னன் என்பவர் நகை செய்யும் தொழில் செய்துவந்துள்ளார். தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன்னன், தன்னுடைய நண்பரான ஆட்டோ டிரைவர் சுரேஷிடம் ஆலோசித்துள்ளார். சுரேஷ் கொடுத்த ஐடியா அடிப்படையில் சௌகார்பேட்டையில் குமாஸ்தா என்பவரிடம் நகைகளைக் கொள்ளையடிக்க வந்துள்ளனர்.

MANNAN
MANNAN

மன்னனின் தொழில் எதிரி குமாஸ்தா. இவர், வாரத்தில் செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் தங்க நகைகளை ஆர்டர் எடுக்க சௌகார்பேட்டைக்கு வருவார். அப்போது ஓரிடத்தில் அவரின் பைக்கை விட்டுவிட்டுச் செல்வார். அவரின் பைக்கில் எப்போதும் தங்க நகைகள் இருக்கும். மன்னன் கொடுத்த ஐடியா அடிப்படையில் குமாஸ்தாவின் பைக்கில் இருக்கும் நகைகளைக் கொள்ளையடிக்க 4 பேரும் வந்துள்ளனர். ஆனால், முதல் கொள்ளைச் சம்பவம் என்பதால் எங்களிடம் சிக்கிக்கொண்டனர்.

4 பேர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொள்ளைச் சம்பவத்துக்கு உறுதுணையாக இருந்த நன்மங்கலம் ஆசிக், பெரம்பூர் அகரத்தைச் சேர்ந்த வினோத், திரு.வி.க.நகரைச் சேர்ந்த மன்னன் ஆகியோரை கைது செய்துள்ளோம். நவீனின் அண்ணன்தான் சுரேஷ். இந்த வழக்கில் சுரேஷைத் தேடிவருகிறோம். இவர்களிடமிருந்து மிளகாய்த் தூள் பாக்கெட், கத்தி ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம்'' என்றார்.

GOPI
GOPI

கைதானவர்களிடம் எதற்காக மிளகாய்ப் பொடி கொண்டு வந்தீர்கள்? என்று விசாரித்ததற்கு `திருடும்போது சிக்கிக் கொண்டால் மிளகாய் பொடியைத் தூவிவிட்டு தப்பிவிட திட்டமிட்டிருந்தோம். மேலும், கில்லி படம் பார்த்தோம். அதில் மிளகாய்ப் பொடியைத் தூவினால் மோப்ப நாய்கூட கண்டுபிடிக்க முடியாது என்பதற்காகத்தான் அதைக் கொண்டு வந்தோம்' என்று கூறியுள்ளனர்.