Published:Updated:

தோழிக்காக திருட்டு.. சிக்கிய டாட்டூ வசந்த்! - சொகுசு விடுதியைக் காட்டிக் கொடுத்த கேமரா

டாட்டூ வசந்தபிரியன்
டாட்டூ வசந்தபிரியன்

டாட்டூ வரைவதில் பெயர் பெற்ற வசந்த், தோழிக்காக குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை, பாடி மேம்பாலம் அருகே கடந்த 11-ம் தேதி சந்தானகிருஷ்ணன் என்பவரும், அவரின் அம்மா கஜலட்சுமி என்பவரும் ஆகியோர் சென்றனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மூன்றுபேர், கஜலட்சுமியின் ஹேண்ட் பைக்கைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து கஜலட்சுமி வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

சங்கர்
சங்கர்
சென்னை: ஃபேஸ்புக்கில் பெண்கள் போட்டோ; போனில் காதல்வலை! `வழிப்பறி’ நண்பர்கள் சிக்கியது எப்படி?

கஜலட்சுமியைப் போல இன்னும் சிலர் வழிப்பறி, செயின்பறி, செல்போன் பறிப்பு என அண்ணாநகர் காவல் மாவட்ட காவல் நிலையங்களில் புகாரளித்திருந்தனர். அதனால் வழிப்பறி கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவங்கள் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வந்தனர். வில்லிவாக்கத்திலிருந்து எண்ணூர் வரை சிசிடிவி மூலம் கொள்ளையர்களைப் போலீஸார் பின்தொடர்ந்தனர்.

இந்தச் சமயத்தில் கஜலட்சுமியின் செல்போன் ஐஎம்இஐ நம்பரையும் சைபர் க்ரைம் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போதுதான் வழிப்பறி கொள்ளை கும்பல் குறித்த தகவல்கள் போலீஸாருக்கு தெரியவந்தது. போலீஸாரின் தீவிர விசாரணையில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த திருவள்ளூர் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (25) மனோஜ் (25) ஆகிய இருவர் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தி கும்பலின் தலைவனான பிரபல டாட்டூ கலைஞன் பவர் வசந்த் என்கிற வசந்த் பிரியனையும் அவனின் தோழியான மங்களதேவியையும் போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

மனோஜ்
மனோஜ்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட பவர் வசந்த், வடபழனியில் பவர் ட்ராகன் என்ற பெயரில் டாட்டூ வரையும் ஸ்டூடியோ வைத்திருக்கிறார். கையிலோ, முகத்திலோ உள்ள தழும்புகளை மறைக்க அழகாக டாட்டூ வரைவதில் பவர் வசந்த் பிரபலமானவர். அதனால் சினிமா பிரபலங்கள் பலர், இவரை தேடி வந்து டாட்டூ வரைந்திருக்கின்றனர். டாட்டூவைத் தவிர்த்து ஓவியம், தற்காப்பு கலை, யோகா ஆகியவை மூலம் பவர் வசந்த் சம்பாதித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், அவரிடம் டாட்டூ வரைந்து கொள்வதற்காக வடபழனியைச் சேர்ந்த 42 வயதான மங்கள தேவி என்பவர் வந்திருக்கிறார். பட்டதாரியான மங்கள தேவிக்கும், டாட்டூ கலைஞன் பவர் வசந்த்துக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே திருமணமான வசந்த், மங்களதேவிக்கு பரிசுகளை வாங்கிக் கொடுத்து அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மங்களதேவி
மங்களதேவி

தொழிலை சரிவர கவனிக்காததால் பவர் வசந்த்துக்கு பணத்தேவை ஏற்பட்டிருக்கிறது. அதனால் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு வழிபறி ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். வில்லிவாக்கம், அண்ணா நகர், ராஜ மங்கலம், மீஞ்சூர் மற்றும் வண்ணாரப் பேட்டை ஆகிய பகுதிகளில் குற்றச் செயல்களில் வசந்த் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதையடுத்துதான் பவர் வசந்த், மங்கள தேவி கூட்டாளிகள் மனோஜ், சங்கர் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். சிசிடிவி மூலம் வசந்த், அவரின் தோழி மங்களதேவி ஆகியோர் மாமல்லபுரத்தில் தங்கியிருந்த சொகுசு விடுதியைக் கண்டறிந்தோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு