Published:Updated:

சென்னை: நள்ளிரவில் ஸ்கெட்ச்; ரெளடி சி.டி.மணியை மடக்கிய போலீஸ் - துப்பாக்கிச் சூட்டில் எஸ்.ஐ காயம்

நள்ளிரவில் பிரபல ரவுடி சி.டி.மணியைப் பிடிக்க சென்ற போலீஸ் எஸ்.ஐ-யின் கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன் என்கிற சி.டி.மணி (45). பிரபல ரவுடியான இவர் மீது 8 கொலை, அடிதடி, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் என மொத்தம் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஆரம்ப காலகட்டத்தில் சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை பகுதிகளில் திருட்டு சிடி-க்களை மணிகண்டன் விற்பனை செய்து வந்தார். புதுப்படங்களின் சி.டி-க்கள் தொடர்பாக போலீஸார் அடிக்கடி மணிகண்டனைக் கைது செய்ததால் அவரின் பெயர் சி.டி.மணி என பிரபலமானது. சிறையில் அடைக்கப்பட்டதால் சி.டி.மணிக்கு பிரபல தாதாக்களுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், என்கவுன்டரில் பலியான பிரபல ரவுடி திண்டுக்கல் பாண்டி என்ற கூலிப்படை தாதாவின் வலதுகரமாக சி.டி மணி வலம் வந்தார்.

பிரபல ரவுடி சி.டி மணி
பிரபல ரவுடி சி.டி மணி
`ரவுடிகள் சி.டி.மணி, காக்கா தோப்பு பாலாஜிக்கு ஸ்கெட்ச்!' 
- அண்ணா சாலையில் வெடிகுண்டு வீசிய மாணவர்

திண்டுக்கல் பாண்டி மறைவுக்குப் பிறகு தனி சாம்ராஜ்ஜியத்தை சி.டி மணி உருவாக்கினார். அதனால் அவருக்கு எதிராக சில ரவுடிகள் அணி திரண்டனர். அதன்காரணமாக சி.டி.மணி தரப்பினருக்கும் அவரின் எதிர் கோஷ்டியினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்தாண்டு சென்னை தேனாம்பேட்டை மேம்பாலத்தில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியுடன் காரில் சி.டி மணி வந்த போது எதிர்கோஷ்டியினர் வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் புதிய கமிஷ்னராக பொறுப்பேற்றிருக்கும் சங்கர் ஜிவால், ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சென்னை கூடுதல் கமிஷ்னர் கண்ணன், தென்சென்னை (பொறுப்பு) இணைக்கமிஷ்னர் பாலகிருஷ்ணன், தி.நகர் துணைக்கமிஷ்னர் ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் மேற்பார்வையிலான தனிப்படையினர் தென்சென்னையில் உள்ள ரவுடிகள் குறித்து தீவிரமாக கண்காணித்தனர்.

தனிப்படையில் உதவி கமிஷனர் மகிமைவீரன், இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ், எஸ்.ஐ-க்கள் கனகராஜ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸார் நேற்றிரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போரூர் மேம்பாலத்தில் ரவுடி சி.டி மணி காரில் செல்லும் ரகசிய தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது.

காயமடைந்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன்
காயமடைந்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன்

உடனடியாக தனிப்படை போலீஸார் சி.டி மணியைப் பிடிக்க விரைந்தனர். எஸ்.ஐ-க்கள் கனகராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோர் துணிச்சலுடன் சி.டி மணி சென்ற காரை மடக்கினர். அப்போது போலீஸாரை நோக்கி சி.டி.மணி துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்லப்படுகிறது. அதில் ஒரு குண்டு, எஸ்.ஐ- பாலகிருஷ்ணனின் கையை துளைத்தது. அதனால் அவர் கீழே விழுந்தார். இதையடுத்து போலீஸார் சி.டி மணியை மடக்கினர். அப்போது காரை விட்டு கீழே இறங்கிய அவர், மேம்பாலத்திலிருந்து குதித்தார். அதில் அவரின் இடது கால், கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் இருவரையும் போலீஸார் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் பரிசோதனையில் சி.டி மணிக்கு கை, காலில் முறிவு ஏற்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். அதைப்போல கையில் குண்டு துளைத்ததால் எஸ்.ஐ பாலகிருஷ்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறை உயரதிகாரிகளுக்கு தனிப்படை போலீஸார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சி.டி மணியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

துப்பாக்கி சூடு
துப்பாக்கி சூடு

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீஸார் கூறுகையில், ``பயங்கர ஆயுதங்களுடன் காரில் சென்று கொண்டிருந்த சி.டி மணியைப் பிடிக்கத் தனிப்படை போலீஸார் சென்றனர். அப்போது காரின் கண்ணாடியை திறக்கும்படி சி.டி.மணியிடம் போலீஸார் தெரிவித்தனர். ஆனால், காரிலிருந்தபடி சி.டி மணி, போலீஸாரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். அதனால் சுதாரித்துக் கொண்ட போலீஸார் அவரை மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது ஒரு குண்டு எஸ்.ஐ பாலகிருஷ்ணனின் கையில் துளைத்தது. தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

பிரபல ரவுடி சி.டி மணியைப் பிடிக்க சென்ற போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் எஸ்.ஐ காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு