Published:Updated:

நம்பிக்கை துரோகம் செய்த செக்யூரிட்டி! - ரூ.2 லட்சம் கடனுக்காக ஜாக்குவார் கார் திருட்டு

ஜாக்குவார் கார்
ஜாக்குவார் கார்

சென்னையில் ஜாக்குவார் காரை ஓட்ட அனுமதியளித்த எம்.டி-க்கு நம்பிக்கை துரோகத்தை செக்யூரிட்டி செய்துள்ளார்.

சென்னை, அண்ணாநகர், 5வது அவென்யூ, ஏசி பிளாக், குடியிருப்பில் வசிப்பவர் பாலசுப்ரமணியன் (45). இவர் பிரபலமான தனியார் நிறுவனத்தில் எம்.டி.யாக உள்ளார். இவருக்குத் தனியார் நிறுவனம் சார்பில், ஜாக்குவார் என்ற சொகுசு காரை வழங்கியுள்ளது. வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், கடந்த 30.5.2020-ம் தேதி காணவில்லை. அதனால், பாலசுப்ரமணியன் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

காவலாளி ஜெயராமன்
காவலாளி ஜெயராமன்
`மறுமணத்துக்கு முன் மலர்ந்த நட்பு; நகையை இழந்த சென்னைப் பெண்!' - அதிர்ச்சி கொடுத்த 2 செல்போன்கள்

அதன்பேரில் அண்ணாநகர் போலீஸார் ஜாக்குவார் கார் திருட்டு குறித்து விசாரணை நடத்தினர். ஜாக்குவார் காரைப் பொறுத்தவரை எல்லா டிரைவர்களும் அதை ஓட்ட முடியாது என்பதால் திருடப்பட்ட காரை யாரெல்லாம் ஓட்டுவார்கள் என்ற விவரத்தை பாலசுப்பிரமணியத்திடம் போலீஸார் விசாரித்துள்ளார். பின்னர், பாலசுப்பிரமணியத்தின் டிரைவரிடம் போலீஸார் விசாரித்தபோது எங்கள் பகுதியில் காவலாளியாகப் பணியாற்றும் ஜெயராமனும் இந்த காரை சில நேரங்களில் ஓட்டுவார் என்ற தகவலைக் கூறியுள்ளார்.

மேலும் திருடப்பட்ட ஜாக்குவாரின் காரின் சாவி, சில நாள்களுக்கு முன் காணாமல் போன தகவலையும் டிரைவர் கூறியுள்ளார். கார் சாவி காணாமல் போன போதும் காவலாளி ஜெயராமன் அங்கு இருந்தார் என்றும் டிரைவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸாரின் சந்தேகப்பார்வை ஜெயராமன் மீது விழுந்தது. அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது, `ஜாக்குவார் காரைத் திருடி நான் என்ன செய்யப்போகிறேன் சார்?’ என்று போலீஸாரிடம் ஜெயராமன் கூறியுள்ளார்.

ஜாக்குவார் கார்
ஜாக்குவார் கார்

அதனால் போலீஸார், கார் திருடப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஜாக்குவார் காரை திருடிக்கொண்டு செக்யூரிட்டி ஜெயராமன் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஜெயராமனிடம் போலீஸார் காண்பித்தபோது, அவர் காரைத் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அம்பத்தூர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஜாக்குவார் காரை போலீஸார் மீட்டனர். காரைத் திருடிய வழக்கில் செக்யூரிட்டி ஜெயராமனை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து அண்ணாநகர் போலீஸார் கூறுகையில், ``வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செக்யூரிட்டி ஜெயராமனுக்குத் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். வேலைக்காகச் சென்னை வந்த ஜெயராமனுக்கு கார் ஓட்ட தெரியும். ஆனால், கிடைத்த வேலைகளைச் செய்துவந்துள்ளார். பாலசுப்பிரமணியன் தங்கியிருக்கும் குடியிருப்புப் பகுதியில் செக்யூரிட்டி ஜெயராமன் பணியாற்றியுள்ளார். அப்போது பாலசுப்பிரமணியன் காரில் செல்லும் போது அவருக்கு சல்யூட் மற்றும் காரின் கதவைத் திறந்துவிடுவது போன்ற வேலைகளைச் செய்துள்ளார்.

சிசிடிவி
சிசிடிவி

அதனால் பாலசுப்பிரமணியன், ஜாக்குவார் காரை ஓட்ட ஜெயராமனுக்கு அனுமதியளித்துள்ளார். இதையடுத்து ஜாக்குவார் காரை அவர் ஓட்டியுள்ளார். சில நேரங்களில் பாலசுப்பிரமணியத்தை ஜாக்குவார் காரில் அழைத்துக் கொண்டு ஜெயராமன் சென்றுள்ளார். முதலில் காரின் சாவியைத் திருடிய ஜெயராமன், பின்னர் தன்னுடைய 2 லட்சம் ரூபாய் கடனுக்காக காரைத் திருடியுள்ளார். பாலசுப்பிரமணியன் வைத்திருந்த நம்பிக்கைக்கு செக்யூரிட்டி ஜெயராமன் துரோகம் செய்துள்ளார்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு