Published:Updated:

புயல் கரையைக் கடந்த இரவில் கொள்ளை; காதலிக்குப் பரிசு - ரூ.13 லட்சத்தைப் பங்கு பிரித்த கொள்ளையர்கள்

கடையில் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி

சென்னையிலுள்ள கடையில் கொள்ளையடித்த பணத்தைப் பங்கு பிரித்த கொள்ளையர்கள், ஆளாளுக்குத் தங்களின் காதலிகளுடன் டூயட் பாடியிருக்கிறார்கள். அதில் ஒரு கொள்ளையன், காதலியை பெங்களூருக்கு அழைத்துச் சென்று டூயட் பாடியிருக்கிறான்.

புயல் கரையைக் கடந்த இரவில் கொள்ளை; காதலிக்குப் பரிசு - ரூ.13 லட்சத்தைப் பங்கு பிரித்த கொள்ளையர்கள்

சென்னையிலுள்ள கடையில் கொள்ளையடித்த பணத்தைப் பங்கு பிரித்த கொள்ளையர்கள், ஆளாளுக்குத் தங்களின் காதலிகளுடன் டூயட் பாடியிருக்கிறார்கள். அதில் ஒரு கொள்ளையன், காதலியை பெங்களூருக்கு அழைத்துச் சென்று டூயட் பாடியிருக்கிறான்.

Published:Updated:
கடையில் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி

சென்னை செங்குன்றம், மொண்டியம்மன் நகர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், அந்தப் பகுதியில் ஸ்ரீ அம்மன் சாப்ட்ரானிக்ஸ் அண்ட் ஹார்டுவேர்ஸ் மற்றும் நெட் ஓர்க்ஸ் என்ற பெயரில் கடை நடத்திவருகிறார். இவரின் மனைவி சரண்யா. அவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இந்த நிலையில் சரண்யா பெயரில் இடம் வாங்க செந்தில்குமார் முடிவு செய்தார். அதற்காகச் சில ஆண்டுகளாக செந்தில்குமாரும் சரண்யாவும் பணம் சேர்த்து வந்தனர். இடத்தைப் பத்திரப்பதிவு செய்ய காலதாமதமானதால் வீட்டில் பணத்தை வைத்தால் பாதுகாப்பில்லை என்று கருதிய செந்தில்குமார், கடந்த 9.12.2022-ம் தேதி 13 லட்சம் ரூபாயை கடையின் மேஜை டிராயரில் வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார்.

மாரிமுத்து
மாரிமுத்து

கடந்த 10.12.2022-ம் தேதி காலை 9:30 மணியளவில் கடையைத் திறக்க செந்தில்குமார் வந்தார். அப்போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கடைக்குள் இருந்த 13 லட்சம் ரூபாய், செல்போன் ஆகியவை கொள்ளைபோயிருந்தன. அதனால் அதிர்ச்சியடைந்த செந்தில்குமார், செங்குன்றம் குற்றப்பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்கு பதிவுசெய்து விசாரித்தார். மாண்டஸ் புயலன்று இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்ததால் மின்வெட்டு காரணமாக பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை. அதனால் இந்த வழக்கு போலீஸாருக்குச் சவாலானது. இதையடுத்து செங்குன்றம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக், அமிர் அலிஜின்னா, காவலர்கள் மகேஷ், வல்லரசு, கிருஷ்ணமூர்த்தி, மருதுபாண்டி, ராஜா ஆகியோர்கொண்ட தனிப்படை போலீஸார் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்தனர். அப்போது கடையிலிருந்த சிசிடிவி இன்வெர்ட்டரில் வேலை செய்ததால் கொள்ளைக் காட்சிகள் அங்கு பதிவாகியிருந்தன.

சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது மகேந்திரன் என்ற பழைய குற்றவாளி எனத் தெரியவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆவடியில் நடந்த ஷட்டர் கொள்ளைச் சம்பவத்தில் மகேந்திரன் கைதாகி சிறைக்குச் சென்றுவிட்டு ஒன்பது நாள்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியில் வந்திருந்தான். மேலும் மகேந்திரன், மாற்றுத்திறனாளி. அதனால் அவன் கடைக்குள் நடந்து வரும் காட்சியைப் பார்த்ததும் போலீஸார் உடனடியாக மகேந்திரனை அடையாளம் கண்டனர். மகேந்திரனின் வீடு செங்குன்றம் திருவள்ளூர் தெருவில் இருப்பதைக் கண்டறிந்த போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர். பின்னர் பணத்துடன் தலைமறைவாக இருந்த மகேந்திரனை போலீஸார் பிடித்து விசாரித்தபோது இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது 17 வயது சிறுவன் எனத் தெரியவந்தது. அவனையும் போலீஸார் பிடித்து பணத்தைப் பறிமுதல் செய்தனர். சிறுவனை போலீஸார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். மகேந்திரன் அளித்த தகவலின்படி அவனின் கூட்டாளிகளான குரங்கு தாஸ், தயாளன், மாரிமுத்து, மாரிச்செல்வம் ஆகியோரை போலீஸார் கைதுசெய்து அவர்களிடமிருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

குரங்கு தாஸ்
குரங்கு தாஸ்

கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த பணத்தை அவர்கள் எப்படியெல்லாம் செலவழித்ததும், செலவழிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது.

இது குறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ``இந்தக் கொள்ளை சம்பவத்துக்கு மகேந்திரன் என்பவன்தான் மூளையாகச் செயல்பட்டிருக்கிறான். இவன் மீது ஒன்பது திருட்டு வழக்குகள் உள்ளன. சம்பவத்தன்று கோடம்பாக்கத்தில் மகேந்திரனின் கூட்டாளிகள் ஆட்டோ ஒன்றைத் திருடியிருக்கிறார்கள். பின்னர் அந்த ஆட்டோவில் அவர்கள் மதுரவாயலுக்கு வந்து கொள்ளை குறித்து திட்டமிட்டிருக்கிறார்கள். அதன் பிறகு மகேந்திரன் தலைமையில் கொள்ளைக் கும்பல், செங்குன்றம் பகுதியிலுள்ள கடைகளை நோட்டமிட்டிருக்கிறது. அப்போது மாண்டஸ் புயல் காரணமாக ஊரே மின்வெட்டில் இருட்டாக இருந்திருக்கிறது. அதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்ட இந்தக் கொள்ளைக் கும்பல் செந்தில்குமாரின் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்றிருக்கிறது. கடைக்குள் மாற்றுத்திறனாளி மகேந்திரனும், 17 வயது சிறுவனும் மட்டும் சென்று கல்லா பெட்டியிலிருந்த பணத்தை எடுத்திருக்கிறார்கள். லட்சக்கணக்கில் பணமிருந்ததால் கொள்ளையர்கள் சந்தோஷமடைந்திருக்கிறார்கள்.

பின்னர் பணத்தை மகேந்திரன், தன்னுடைய கூட்டாளிகளுக்கு பங்கு போட்டுக் கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டான். மூன்று லட்சம் ரூபாய் கிடைத்த சந்தோஷத்தில் 17 வயது சிறுவன், தன்னுடைய காதலிக்கு போன் செய்து விவரத்தைத் தெரிவித்திருக்கிறான். அதோடு அவள் நீண்டகாலமாக ஆசையாகக் கேட்ட விலை உயர்ந்த செல்போன் ஒன்றையும் வாங்கிக் கொடுத்திருக்கிறான். இன்னொரு கொள்ளையனான குரங்கு தாஸ், தன்னுடைய காதலிக்கு போன் செய்து பெங்களூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் 3,000 ரூபாய் வாடகைக்கு அறை எடுத்த குரங்குதாஸ், காதலியுடன் பெங்களூரில் டூயட் பாடியிருக்கிறான். இவர்களைத் தவிர மற்ற கொள்ளையர்கள் லட்சக்கணக்கில் கிடைத்த பணத்தை வைத்து போதையில் திளைத்திருக்கிறார்கள். கொள்ளை நடந்த சில மணி நேரத்திலேயே ஒவ்வொருவராக கைது செய்துவிட்டோம். இதுவரை 7.5 லட்சம் ரூபாய், ஆட்டோ ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். மீதமுள்ள தொகையையும் விரைவில் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

மகேந்திரன்
மகேந்திரன்

கைதான கொள்ளையர்கள் ஒவ்வொருவரும் சென்னையில் பல்வேறு இடங்களில் குடியிருந்து வருகின்றனர். இருந்தாலும் இவர்கள் அனைவரும் இரவு நேரங்களில் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சந்தித்துக்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். மகேந்திரன், ஷட்டர் பூட்டுகளை சத்தமில்லாமல் உடைப்பதில் கில்லாடி. அதனால்தான் அவனின் தலைமையில் இந்தக் கொள்ளைக் கும்பல் செயல்பட்டு வந்திருக்கிறது" என்றனர்.

இந்த வழக்கில் கைதான தாஸ் என்பவனை ஏன் `குரங்கு தாஸ்’ என்று அழைக்கிறார்கள் என்று போலீஸாரிடம் கேட்டதற்கு, ரயில் விபத்தில் சிக்கிய தாஸ், வயிற்று பிழைப்புக்காக குரங்குகளை வைத்து யாசகம் பெற்று வந்திருக்கிறான். அதனால்தான் அவனை `குரங்கு தாஸ்’ என்று சக கொள்ளையர்கள் அழைத்திருக்கிறார்கள். அதேபோல 17 வயது சிறுவன், செம சேட்டைக்காரன். அதனால்தான் அவனின் பெயரோடு வாண்டு என்று கொள்ளைக் கும்பல் அடைமொழி வைத்திருக்கிறது. இந்தக் கொள்ளைக் கும்பலின் தலைவனான மகேந்திரனுக்கு செல்போன் ஒன்றையும் பரிசாக வாங்கிக் கொடுத்திருக்கிறான் கொள்ளையன் ஒருவன். இவ்வாறு ஒவ்வொரு கொள்ளையரும் கிடைத்த பணத்தை வைத்து ஆடம்பரமாகச் செலவழிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் அடுத்தடுத்து அவர்கள் போலீஸாரிடம் சிக்கிவிட்டனர்.