Published:Updated:

`தவறு நடக்கிறது; பணம் சம்பாதிக்கிறீர்கள்!' -போலீஸுக்கு சவால்விட்ட சமூக சேவகருக்கு நேர்ந்த சோகம்

சமூக சேவகர் தேவேந்திரன்
சமூக சேவகர் தேவேந்திரன்

`மதுவிலக்கு போலீஸார், என்னிடம் மன்னிப்பு கேட்கணும். இல்லையென்றால் அம்பத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிடுவோம்' என போலீஸுக்கு சவால் விடுத்தார் சமூக சேவகர் ஒருவர்.

சென்னை அம்பத்தூர் டன்லப் மைதானத்தில் சிலர் மதுபானம் விற்பதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் சோதனை நடத்தினர். ஆனால் யாரும் சிக்கவில்லை. இந்தநிலையில், 23.5.2020-ல் TN SOCIAL ACTIVITIES ORG என்ற வாட்ஸ்அப் குரூப்பில், தேவேந்திரன் என்பவர் பேசிய ஆடியோ வெளியானது.

தேவேந்திரன்
தேவேந்திரன்
`இன்னும் மூன்றே நாள்கள்தான் டுயூட்டி' - கொரோனாவால் சென்னை அரசு தலைமைச் செவிலியருக்கு நேர்ந்த துயரம்

அந்த ஆடியோவில், `சார், வணக்கம். நான் தமிழ்நாடு தகவல் உரிமை சமூக ஆர்வலர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தேவேந்திரன் பேசுகிறேன். அம்பத்தூர் காவல் மாவட்ட, சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, கலால் பிரிவு போலீஸார், ஏன் என்கிட்ட வாரீங்க. நாங்கள் எதற்காவது உங்ககிட்ட வந்திருக்கிறோமா. நல்ல விஷயங்களுக்குத்தான் வருகிறேன். கெட்ட விஷயங்களுக்கு வருவதில்லை. சட்டம் ஒழுங்கு பிரிவிலும் குற்றப்பிரிவிலும் பல தவறுகளைச் செய்கிறீர்கள். அதன்மூலம் பணம் சம்பாதிக்கிறீர்கள். ஊரடங்கு நேரத்தில் ஒயின் ஷாப்பை உடைத்து மது விற்பனை நடந்துவருகிறது. அதில் 90 சதவிகிதம் கமிஷனை போலீஸார் வாங்கிக் கொள்கிறீர்கள்.

டன்லப் மைதானத்தில் பேசிக் கொண்டிருந்த எங்களை மதுவிலக்குப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நாதமுனி, சோதனை செய்கிறார். அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அம்பத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிடுவோம். (இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் மற்றும் சக போலீஸாரை அவதூறாகப் பேசுகிறார்). என்னை என்ன செய்ய முடியும். நாளைக்கு என் மீது கேஸ் போடு. நான் என்ன உங்கிட்ட பிச்சை எடுத்தா சாப்பிடுகிறேன்' என்பதோடு முடிவடைகிறது.

வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்

இந்த ஆடியோ தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பில் சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். இந்தநிலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீஸாருக்கு ஆவடியை அடுத்துள்ள பருத்திப்பட்டு மேம்பாலம் பகுதியில் தேவேந்திரன், பைக்கில் மதுபானங்களை விற்கும் ரகசிய தகவல் கிடைத்தது. ஏற்கெனவே போலீஸாருக்கு தேவேந்திரன் சவால் விடுத்திருந்ததால் இந்தத் தடவை போலீஸார் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டனர்.

தேவேந்திரனைப் பிடிக்கச் செல்லும்போதே அதை வீடியோவாக எடுக்கவும் திட்டமிட்டிருந்தனர். தேவேந்திரன், தன்னுடைய பைக்கிலிருந்து மதுபானங்களை எடுத்து விற்பனை செய்யும் காட்சிகளை முதலில் போலீஸார் வீடியோவாக எடுத்தனர். பின்னர் அவரைப் பிடிக்க போலீஸார் சென்றனர். அப்போது, போலீஸாரைப் பார்த்ததும் தேவேந்திரன் தப்பி ஓட முயன்றனர். போலீஸாரும் அவரை விரட்டினர். அப்போது மேம்பாலத்திலிருந்து தேவேந்திரன் குதித்தார். இதில் அவரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

Representational Image
Representational Image

இதையடுத்து போலீஸார் தேவேந்திரனைப் பிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். தேவேந்திரனின் வலது கையில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப்பிறகு தேவேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரிடமிருந்து 35 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஆர்.டி.ஐ மூலம் தகவல்களை திரட்டும் தேவேந்திரன், தன்னை ஒரு சமூக ஆர்வலர் என அடையாளப்படுத்தி வந்துள்ளார். சென்னை அயப்பாக்கம், நாராயணபுரத்தில் குடியிருந்துவருகிறார். திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் தேவேந்திரன் மீது 2017-ம் ஆண்டில் 2 வழக்குகள் பதிவாகியுள்ளன. மதுபானம் விற்ற வழக்கில் தேவேந்திரனின் மகன் கோபிநாத்தை தேடிவருகிறோம். அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரிலும் தேவேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

அம்பத்தூர் காவல் நிலையம்
அம்பத்தூர் காவல் நிலையம்

தேவேந்திரன் தரப்பில் பேசியவர்கள், ``போலீஸார் திட்டமிட்டுப் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். தேவேந்திரன் மீது நடவடிக்கை எடுத்த போலீஸாருக்கு எதிரான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதை விரைவில் வெளியிட உள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு