Published:Updated:

சென்னை: போலி நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் - பெங்களூருவில் மாணவி சிக்கியது எப்படி?

கைது செய்யப்பட்ட மாணவி
கைது செய்யப்பட்ட மாணவி

போலி நீட் மதிப்பெண் சான்றிதழைச் சமர்பித்து மருத்துவக் கவுன்சலிங்கில் பங்கேற்ற மாணவியை போலீஸார் பெங்களூருவில் வைத்து கைது செய்திருக்கிறார்கள்.

மருத்துவப் படிப்புக்கான கவுன்சலிங் இந்த ஆண்டு சென்னை சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கலந்து கொண்டார். அவர் சமர்ப்பித்த நீட் மதிப்பெண் சான்றிதழை ஆய்வு செய்தபோது அது போலி எனத் தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நாடு மருத்துவக் கலந்தாய்வு குழுத் தலைவர் செல்வராஜ் சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

போலி நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்
போலி நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்
நீட் தேர்வு: தர்மபுரி, நாமக்கல்லை சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொலை! - தமிழகத்தை உலுக்கும் மரணங்கள்

சம்பந்தப்பட்ட மாணவிக்கும் அவரின் தந்தையான பல் டாக்டர் பாலச்சந்திரனுக்கு மூன்று தடவை சம்மன்கள் அனுப்பியும் அவர்கள் போலீஸாரின் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்தநிலையில் பாலச்சந்திரன், பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக பெரியமேடு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் பாலச்சந்திரனைக் கடந்த 1-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரித்தபோது புரோக்கர் ஒருவர் மூலம் போலி சான்றிதழ் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து புரோக்கரையும் மாணவியையும் போலீஸார் தேடிவந்தனர்.

இந்தநிலையில் மாணவி, பெங்களூருவில் உறவினர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் அவரைக் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரிடமும் போலி நீட் சான்றிதழ் தொடர்பாக போலீஸார் விசாரித்தனர். அப்போது மாணவி போலி நீட் தேர்வு சான்றிதழ் தயாரித்தது எப்படி என விளக்கமாக போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு மாணவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்து வந்தனர். அப்போது மாணவி, தன்னுடைய முகத்தை சால்வையால் முடியபடி தலையைக் குனிந்தநிலையில் சென்றார்.

மருத்துவக் கலந்தாய்வு
மருத்துவக் கலந்தாய்வு
`2 முறை நீட் தேர்வு எழுதினார்; மருத்துவ சீட் கிடைக்கல!' - விபரீத முடிவெடுத்த பெரம்பலூர் மாணவி

மாணவி அளித்த தகவலின்படி அடுத்தகட்ட விசாரணையில் போலீஸார் ஈடுபட்டிருக்கின்றனர். இதற்கிடையில் மாணவியின் செல்போன், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்காக தடய அறிவியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மாணவியும் அவரின் தந்தையும் கைது செய்யப்பட்டிருப்பதால், போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மாணவியை, டாக்டராக்க வேண்டும் என்று அவரின் தந்தையான டாக்டர் பாலச்சந்திரன் ஆசைப்பட்டிருக்கிறார். மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வை மாணவி எழுதியிருக்கிறார். ஆனால் அவர், 27 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் பாலச்சந்திரன் மனவேதனை அடைந்திருக்கிறார்.

அதுதொடர்பாக தன்னுடைய நண்பர்கள் சிலரிடம் பாலச்சந்திரன் கூறியிருக்கிறார். அப்போதுதான் புரோக்கர் ஒருவர் பாலச்சந்திரனை அணுகி, பணம் கொடுத்தால் போலி நீட் சான்றிதழ், போலி கவுன்சலிங் ஆர்டரைத் தயாரித்து மாணவியை மருத்துவப் படிப்பில் சேர்த்துவிடலாம் என ஐடியா கொடுத்திருக்கிறார். அதன்படி நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவியின் சான்றிதழை டவுன்லோடு செய்திருக்கின்றனர். பிறகு அந்தச் சான்றிதழிலிருந்த மாணவியின் போட்டோ மற்றும் அவரின் பதிவு நம்பருக்குப் பதிலாக அதில் மாணவியின் போட்டோ, பதிவு எண்ணை மாற்றியிருக்கிறார்கள்.

டாக்டர் பாலச்சந்திரன்
டாக்டர் பாலச்சந்திரன்

அந்த ஆவணங்களை கவுன்சலிங்கில் மாணவி சமர்ப்பித்திருக்கிறார். ஆனால் மாணவி சமர்பித்த ஆவணங்கள் போலி என்று கண்டறிந்ததும் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பிறகு மாணவியையும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் விசாரணைக்கு வரும்படி சம்மன் அனுப்பினோம். விசாரணைக்கு ஆஜராகாமல் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். ராமநாதபுரத்தில் உள்ள வீட்டைப் பூட்டி விட்டு மாணவியின் குடும்பத்தினர் தங்களுக்குத் தெரிந்தவர்களின் வீடுகளில் தங்கினர். அதில் டாக்டர் பாலச்சந்திரன் பெங்களூருக்குச் சென்றுவிட்டார். பெங்களூருவில் பாலச்சந்திரனைக் கைது செய்யும் போது மாணவி குறித்த தகவல் கிடைக்கவில்லை. அதுதொடர்பாக பாலச்சந்திரனிடமும் விசாரித்தபோது அவரும் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. இதையடுத்து பாலச்சந்திரனின் குடும்பத்தினருக்கு உதவுபவர்களின் விவரங்களைச் சேகரித்தோம். அப்போதுதான் மாணவி பெங்களூருவில் இருக்கும் தகவல் கிடைத்தது. அங்குச் சென்று அவரைக் கைது செய்து சென்னை அழைத்து வந்தோம். போலி நீட் தேர்வு சான்றிதழ் தயாரிக்க உதவியவர்கள் மீது அடுத்தக்கட்டமாக நடவடிக்கை முடிவு செய்திருக்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு