சென்னை: தாயைத் தவறாகப் பேசிய நண்பன் - கண்களைக் குத்திக் காயப்படுத்திய டீ மாஸ்டர்!

சென்னை, மெரினா கடற்கரையில் அமர்ந்து மது அருந்திய நண்பர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது தாயைத் தவறாக பேசியதால் ஆத்திரமடைந்த இளைஞர், நண்பனின் கண்களைக் குச்சியால் குத்திச் சேதப்படுத்தியிருக்கிறார்.
தென்காசி மாவட்டம், வி.கே புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக சக்கரவர்த்தி (29). இவர் திருவான்மியூரிலுள்ள டீ ஸ்டாலில் மாஸ்டராகப் பணியாற்றிவருகிறார். அசோக சக்ரவர்த்தியின் நண்பர் பெரியபாண்டியன் (26). இவர் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள டீ ஸ்டாலில் வேலை பார்த்துவருகிறார். இருவருக்கும் ஒரே ஊர் என்பதால், சென்னையில் இருவரும் அடிக்கடி சந்தித்து நட்பை வளர்த்துவந்தனர். தேனாம்பேட்டையில் பெரியபாண்டியன் தங்கியிருந்தார். அங்கு அடிக்கடி அசோக சக்ரவர்த்தி வருவார். அப்போது இருவரும் மது அருந்துவது வழக்கம். கடந்த மாதம் இருவரும் மது அருந்தியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது பெரியபாண்டியன், அசோக சக்ரவர்த்தியை அடித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் 19.1.2021-ம் தேதி இரவு 8 மணியளவில் அசோக சக்ரவர்த்தி திருவான்மியூரிலிருந்து தேனாம்பேட்டைக்கு வந்தார். பின்னர் பெரியபாண்டியனைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இதையடுத்து இருவரும் மது அருந்த முடிவு செய்தனர். மதுவை வாங்கிக்கொண்டு சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்றனர். அங்கு இருவரும் அமர்ந்து மது அருந்தினர். போதை ஏறியதும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
அசோக சக்ரவர்த்தி, பெரியபாண்டியன் தாய் குறித்துத் தவறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அதனால், ஆத்திரமடைந்த பெரியபாண்டியன், மதுபாட்டிலை உடைத்து, அசோக சக்ரவர்த்தியின் கழுத்தில் குத்தியிருக்கிறார். அதன் பிறகும் அவருக்குக் கோபம் குறையாமல், அருகில் கிடந்த குச்சியை எடுத்து அசோக சக்ரவர்த்தியின் இரண்டு கண்களிலும் குத்தியிருக்கிறார். அதனால், வலி தாங்க முடியாமலும் கண் தெரியாமலும் அசோக சக்ரவர்த்தி கதறித் துடித்திருக்கிறார்.

இதையடுத்து அங்கிருந்து சர்வீஸ் சாலைக்கு வந்த பெரியபாண்டியன், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவலைத் தெரிவித்திருக்கிறார். உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து மெரினா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற மெரினா போலீஸார், அசோக சக்ரவர்த்தியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அசோக சக்ரவர்த்தியின் கண்களில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால், எழும்பூர் அரசு கண் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினருடன் அரசு மருத்துவர்கள் ஆலோசித்துவருகின்றனர். மேல் சிகிச்சைக்காக அசோக சக்ரவர்த்தி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார். எழும்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதித்த பிறகே அசோக சக்ரவர்த்திக்கு மீண்டும் பார்வை கிடைக்குமா என்பது தெரியவரும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பெரியபாண்டியனிடம் மெரினா போலீஸார் விசாரித்துவருகின்றனர். விசாரணைக்குப் பிறகு அவர் கைதுசெய்யப்படுவார் என போலீஸார் தெரிவித்தனர்.