Published:Updated:

சென்னை: சொகுசு காரில் ஆடுகளைத் திருடிய தம்பதி; போலீஸிடம் பிடிபட்டது எப்படி?!

பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார்
பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார்

சென்னையில் சொகுசு காரில் சென்று ஆணும் பெண்ணும் ஆடுகளைத் திருடி வந்தனர். அவர்களை போலீஸார் பிடித்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.

சென்னை கொரட்டூர், போத்தியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இந்திரா. இவரின் வீட்டின் முன் கட்டியிருந்த ஆடுகள், கடந்த 30-ம் தேதி அதிகாலை நேரத்தில் காணாமல் போயின. இது குறித்து இந்திரா, காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சொகுசு காரில் வந்த ஓர் ஆணும் பெண்ணும் ஆடுகளைத் திருடியது தெரியவந்தது. அவர்கள் யாரென்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஆடு திருடிய வழக்கில் கைதான அஷ்ரப்
ஆடு திருடிய வழக்கில் கைதான அஷ்ரப்

இதையடுத்து கொரட்டூர் பாடி ஜகதாம்பிகை நகரைச் சேர்ந்த பூபாலன் என்பவரின் கோழி இறைச்சிக் கடையிலிருந்து 12 நாட்டுக்கோழிகளைக் கூண்டோடு காரில் வந்த ஆணும் பெண்ணும் திருடிச் சென்றனர். இது குறித்தும் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல் எனத் தெரியவந்தது. காரின் பதிவு நம்பரை போலீஸார் ஆய்வு செய்தனர். பிறகு சிசிடிவி காட்சி அடிப்படையிலும் விசாரணை நடத்தினர்.

சிசிடிவி காட்சிகள், காரின் பதிவு நம்பர் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஆடுகள், கோழிகளைத் திருடியது கிண்டி ஈக்காட்டுத்தாங்கல், சுந்தர் நகரைச் சேர்ந்த அஷ்ரப் (38), அவரின் மனைவி லட்சுமி (35) எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் இந்தத் தம்பதியர்தான் ஆடுகள், கோழிகளை சொகுசு காரில் திருடி விற்றது தெரியவந்தது. அதனால் இருவரையும் போலீஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருட்டுக்குப் பயன்படுத்திய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Vikatan
ஆடுகளைத் திருடிய வழக்கில் கைதான லட்சுமி
ஆடுகளைத் திருடிய வழக்கில் கைதான லட்சுமி

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் அடுத்தடுத்து ஆடுகள், கோழிகள் சொகுசு காரில் திருடப்பட்டதும் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தனிப்படை போலீஸார் சிசிடிவி மூலம் விசாரணை நடத்தியபோது ஆடுகள், கோழிகளைத் திருடிய காரின் பதிவு எண் மூலம் இந்த வழக்கில் துப்பு துலங்கியது. இந்தச் சமயத்தில் ஆடுகள், கோழிகளைத் திருடப் பயன்படுத்தப்பட்ட கார், கொரட்டூர் பகுதியில் வந்தது. அப்போது வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸார், காரின் பதிவு எண்ணைப் பார்த்ததும் சந்தேகத்தின் பேரில் காரை ஓட்டி வந்த அஷ்ரப், அவரின் மனைவி லட்சுமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் இருவரும் சேர்ந்து ஆடுகள், கோழிகளைத் திருடிவந்தது தெரிந்தது. இந்தத் தம்பதியருக்கு ஆறு மாதக் குழந்தை உள்ளது. கொரோனா காலகட்டத்தில் வருமானம் இல்லாததால் இருவரும் ஆடுகள், கோழிகளைத் திருடி வந்திருக்கின்றனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு