Published:Updated:

சென்னை: கள்ளச் சந்தையில் கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து; மடக்கிப்பிடித்த போலீஸார்!

கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை விற்றவர்கள்
கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை விற்றவர்கள்

சென்னையில் கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடிய ரெம்டெசிவிர் மருந்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்தை வாங்கச் சிலர் ஆர்வம் காட்டிவந்தனர். அதனால் போலீஸார் 'ஸ்பெஷல் டீம்' அமைத்து கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை செய்தவர்களைக் கையும் களவுமாக பிடித்து, சிறையில் அடைத்தனர். ரெம்டெசிவிர் மருந்து அரசு மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்பட்டாலும், தட்டுப்பாடு காரணமாக கள்ளச் சந்தையில் விற்கப்பட்டது. அதனால் அது நேரிடையாக மக்களிடம் விற்காமல் மருத்துவமனைகளுக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதோடு அந்த மருந்தை கள்ளச் சந்தையில் விற்பவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து
கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து

தற்போது கறுப்பு பூஞ்சை நோயின் பாதிப்பு அதிகரித்துவருகிறது. அதனால் இந்த நோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்து தட்டுபாடாக உள்ளது. அதைப் பயன்படுத்தி ஒரு கும்பல் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு கறுப்பு பூஞ்சைக்கான மருந்து விற்கப்படுவதாக சென்னை அண்ணாசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகனுக்கு போலீஸ் இன்ஃபார்மர் மூலம் ரகசியத் தகவல் கிடைத்தது. இது குறித்து துணை கமிஷனர் பகவலன், உதவி கமிஷனர் சரவணன் ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. எஸ்.ஐ பால்ராஜ், தலைமைக் காவலர் சுஜாதா, காவலர்கள் லிவிங்ஸ்டன் நவாஸ், கலைவாணன், சரவணன், பொன்னுசாமி, நல்லேஸ்வரன் ஆகியோர்கொண்ட தனிப்படை போலீஸார் மஃப்டியில் எல்.ஐ.சி கட்டடம் அருகே காத்திருந்தனர்.போலீஸார் விரித்த வலையில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் சிக்கிக்கொண்டனர்.

இது குறித்து அண்ணசாலை போலீஸார் கூறுகையில், ``போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகனுக்கு போலீஸ் இன்ஃபார்மர் மூலம் கடந்த 11-ம் தேதி ஒரு ரகசியத் தகவல் கிடைத்தது. இன்ஃபார்மரின் உறவினர் ஒருவர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருந்தை வாங்க முயன்றபோது சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் உம்முகுல்சம் (26) என்ற பெண்ணிடம் கறுப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தக்கூடிய மருந்து கிடைக்கும் எனத் தகவல் கிடைத்தது. உடனடியாக உம்முகுல்சம்மை போனில் தொடர்புகொண்ட போலீஸ் இன்ஃபார்மர், தனக்கு மருந்து வேண்டும் எனக் கேட்டார். அதற்கு உம்முகுல்சம், 'தற்போது தன்னிடம் மருந்து இல்லை. ஆனால் என்னுடய தோழி பௌசானாவிடம் மருந்து இருக்கிறது' என்ற விவரத்தைக் கூறினார்.

கறுப்பு பூஞ்சை
கறுப்பு பூஞ்சை

இதையடுத்து இன்ஃபார்மர் மூலம் கள்ளச்சந்தையில் கறுப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தும் மருந்தை விற்பனை செய்தவர்களைக் கூண்டோடு பிடிக்க இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் திட்டமிட்டார். அதன்படி பௌசானாவிடமிருந்து ஒரு மருந்து குப்பியை 40,000 ரூபாய்க்கு வாங்க போலீஸ் இன்ஃபார்மர் ஒப்புக்கொண்டார். மருந்துக் குப்பிகளை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் அருகில் வைத்து வாங்கிக்கொள்வதாக போலீஸ் இன்ஃபார்மர் கூறினார். அதற்கு உம்முகுல்சம், பௌசானா ஆகியோர் 'ஓகே' என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் வருவதற்கு முன், மஃப்டியில் போலீஸ் டீம் எல்.ஐ.சி அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டனர். மருந்து ஆய்வாளர் முரளி கிருஷ்ணன் என்பவரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டார்.

கறுப்பு பூஞ்சை சிகிச்சைக்கும் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்குமா? - பதில் அளிக்கும் வல்லுநர்

மருந்தைக் கொண்டு வருபவர்களுக்காக போலீஸாரும் மருந்து ஆய்வாளரும் பாரிமுனையிலிருந்து சைதாப்பேட்டைக்கு செல்லும் அண்ணாசாலையில் காத்திருந்தனர். அப்போது ஆட்டோவில் பௌசானாவும் அவரின் தோழி உம்முகுல்சமும் வந்திருக்கிறங்கினர். அவர்களைப் பின்தொடர்ந்து புல்லட் பைக்கில் இரண்டு பேர் வந்தனர். போலீஸ் இன்ஃபார்மருக்கு போன் செய்த உம்முகுல்சம், எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர் தன்னுடைய அடையாளங்களைச் சொன்னபடியே ஆட்டோவின் அருகே சென்றார். அப்போது பணத்தைப் பெற்றுக்கொண்ட உம்முகுல்சம், கவர் ஒன்றை போலீஸ் இன்ஃபார்மரிடம் கொடுத்தார். அதை வாங்கக்கொண்ட அவர், அருகில் நின்றுகொண்டிருந்திருந்த மருந்து ஆய்வாளர் முரளிகிருஷ்ணனிடம் கொடுத்தார்.

கைது
கைது

பின்னர் மருந்து ஆய்வாளர் முரளி கிருஷ்ணன், கவரைப் பிரித்துப் பார்த்தபோது உள்ளே கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துக் குப்பிகள் இருந்தன. உடனே முரளி கிருஷ்ணன், கண் சைகை மூலம் மஃப்டியிலிருந்த போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஆட்டோவில் வந்த பெண்கள், புல்லட்டில் வந்த இரண்டு ஆண்கள் ஆகிய நான்கு பேரை மடக்கிப்பிடித்து அருகிலுள்ள அண்ணாசாலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றோம். விசாரணையில் பௌசானா, அவரின் தோழி உம்முகுல்சம், இவர்களுக்கு உதவியாக விவேக், ராஜேஷ் ஆகியோர் வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து எட்டு மருந்துக் குப்பிகளைப் பறிமுதல் செய்தோம். அதன் மதிப்பு 80,000 ரூபாய். கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்கப் பயன்படுத்திய புல்லட்டையும் பறிமுதல் செய்திருக்கிறோம். அவர்களிடம் விசாரித்துவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு