Published:Updated:

`வெள்ளை நிற செருப்பு'தான் க்ளூ பெண் காவலரிடம் தாலி செயினைப் பறித்த இளைஞர்கள்; சிக்கியது எப்படி?

செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள்
செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள்

சென்னையில் பெண் காவலர் உட்பட 15-க்கும் மேற்பட்டவர்களிடம் செயின்களைப் பறித்த இளைஞர்களைப் போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை சேத்துப்பட்டு, 4-வது தெரு, பிருந்தாவனம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவரின் மனைவி கவிதா (31). இவர் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றிவருகிறார். இவர் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ விடுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்தார். கடந்த 18.8.2021-ம் தேதி பெண் காவலர் கவிதா, இரவுப் பணிக்குச் செல்ல தனக்கு தெரிந்த காவலர் ஒருவரின் பைக்கில் எம்.எல்.ஏ விடுதிக்குச் சென்றுகொண்டிருந்தார். பைக்கின் பின்னால் கவிதா அமர்ந்திருந்தார்.

 செயின் பறிப்பு
செயின் பறிப்பு

திருவல்லிக்கேணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவானந்தா சாலையில் இரவு 10:45 மணியளவில் மெட்ரோ வாட்டர் எதிரில் வலதுபுறம் திரும்பும்போது கவிதா சென்ற பைக்கின் பின்னால் இன்னொரு பைக்கில் வந்தவர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் கவிதா அணிந்திருந்த ஏழு சவரன் தாலி செயின், நான்கு சவரன் தங்க செயின் ஆகியவற்றைப் பறித்தனர். இதில் கவிதா அணிந்திருந்த மொத்தம் ஒன்பது சவரன் தங்க செயின் கொள்ளையனின் கையில் சிக்கியது. இரண்டு சவரன் தங்க செயின் அறுந்து விழுந்ததால் அது தப்பியது. இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கவிதா, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் சாமிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதையடுத்து பெண் காவலர் கவிதாவிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்த மறுநாள் அண்ணா சாலை, தர்கா பகுதியில் சாந்தி என்பவரிடமிருந்து நான்கு சவரன் தங்க செயினை பைக்கில் வந்த இளைஞர்கள் பறித்துச் சென்றனர். இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல் என்பதை சிசிடிவி மூலம் போலீஸார் கண்டறிந்தனர். இது தவிர எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளிலும் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. அதனால் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கர், எழும்பூர் உதவி கமிஷனர் ரகுபதி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார், சம்பவம் நடந்த இடங்களிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

சிசிடிவி
சிசிடிவி

எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணா நகர் வழியாக குமரன் நகர் வரை செயின் பறிப்பு திருடர்கள் பைக்கில் செல்வதை போலீஸார் சிசிடிவி மூலம் கண்டறிந்தனர். ஆனால் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க முடியவில்லை. அவர்களின் பைக் பதிவு எண்ணைக்கொண்டு விசாரித்தபோது அவை திருட்டு பைக்குகள் எனத் தெரியவந்தது. பெரும்பாலான சிசிடிவி-க்களின் பதிவில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞன் ஒருவன் தன்னுடைய காலில் வெள்ளை நிற செருப்பு அணிந்திருப்பதையும் போலீஸார் கண்டறிந்தனர். அந்த அடையாளத்தை வைத்து போலீஸார் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களைத் தேடிவந்தனர். சிந்தாரிப்பேட்டை பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பைக்கில் மூன்று பேர் வந்தனர். அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தபோது அவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் எனத் தெரியவந்தது. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் கூறுகையில், ``செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த கிருபா (19), ஆவடியை சேர்ந்த பால் சிவா (எ) சிவகுமார் (20), அயனாவரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் எனத் தெரிந்தது. அவர்களில் கிருபா, பால் சிவாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம். சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்திருக்கிறோம். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். இதற்காக விலையுயர்ந்த பைக்குகளையும் திருடியிருக்கின்றனர். கைதான கிருபா மீது அண்ணா நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சென்னை: ஒரே பைக், கூடவே பயணம்; நண்பனிடம் ஆள்வைத்து செயின் பறிப்பு! - கூட்டாளிகளுடன் சிக்கிய பின்னணி

போலீஸாரிடம் சிக்காமலிருக்க இவர்கள், திருடிய பைக்குகளை ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் இடங்களில் நிறுத்திவைத்திருந்தனர். பின்னர் அவற்றில் நகரப் பகுதிக்கு வந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு, அதே இடத்தில் நிறுத்திவிடுவார்கள். மேலும் செயின்களையும் ஒரே இடத்தில் விற்காமல் பல இடங்களில் விற்றுப் பணமாக்கியிருக்கிறார்கள். அந்தப் பணத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை வாங்கி, விருப்பம்போல வாழ்ந்திருக்கின்றனர். சிசிடிவி மூலம் தங்களின் அடையாளங்களைக் கண்டுபிடிக்காமலிருக்க அனைத்தையும் மறைத்திருக்கின்றனர். குறிப்பாக வெள்ளை நிற செருப்பையும் சுடுகாட்டுப் பகுதியில் மறைத்துவைத்திருந்தனர். இவர்களிடமிருந்து 16 சவரன் தங்க செயின்கள், ஐந்து விலை உயர்ந்த பைக்குகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். வழிப்பறிச் சம்பவங்களில் இன்னும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது. அவர்களையும் தேடிவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு