Election bannerElection banner
Published:Updated:

சென்னை: ஓடும் பேருந்தில் சிதறும் சில்லறைக் காசுகள்... நகையைத் திருடும் பெண்கள்! - சிக்கியது எப்படி?

திருடிய வழக்கில் கைதான நந்தினி
திருடிய வழக்கில் கைதான நந்தினி

பேருந்தில் பயணம் செய்யும்போது சில்லறைக் காசுகளைச் சிதறவிட்டு பயணிகளின் கவனத்தை திசைதிருப்பி தங்க நகைகள், பணத்தைத் திருடிய இரண்டு பெண்களை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வரதபாளையம் பஜார் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவர் குடும்பத்தினருடன் கடந்த 9-1.2021-ம் தேதி ஆந்திராவிலிருந்து தங்க நகைகளை பாலிஷ் செய்வதற்காக சென்னை செங்குன்றத்துக்கு வந்தார். பின்னர் தடம் எண் 242 அரசு பேருந்தில் செங்குன்றத்திலிருந்து பிராட்வே பேருந்து நிலையத்துக்குச் சென்றார். பிராட்வே பேருந்து நிலையத்தில் இறங்கிய சேகர், தான் வைத்திருந்த பையைத் திறந்து பார்த்தார். அப்போது அதிலிருந்த 27 சவரன் தங்க நகைகள் திருட்டுப்போயிருந்தன. அதனால் அதிர்ச்சியடைந்த சேகர், எஸ்பிளானேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

எஃப்.ஐ.ஆர்
எஃப்.ஐ.ஆர்

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்த் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பாக சில சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு பெண்கள், சேகரின் பையைக் கொண்டு செல்லும் காட்சிகள் இடம்பிடித்திருந்தன. அதன்அடிப்படையில் அவர்கள் யார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திருப்பத்தூர் ஆதிபான் தெரு, அவ்வை நகரைச் சேர்ந்த நந்தினி (27), அதே பகுதியைச் சேர்ந்த தீபா (32) ஆகிய இருவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைதுசெய்த போலீஸார் அவர்களிடமிருந்து 24 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து எஸ்பிளானேடு போலீஸார் கூறுகையில், ``ஆந்திராவைச் சேர்ந்த சேகர், அவரின் மனைவி, தம்பி சோமசுந்தரம் ஆகியோருடன் ஜனவரி மாதம் 9-ம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டு செங்குன்றத்துக்கு காலை 9 மணியளவில் வந்திருக்கிறார். அப்போது பாலிஷ் போடுவதற்கான நகைகளை சேகர், டிராவல் பேக்கில் ஒரு பாக்ஸில் வைத்திருந்திருக்கிறார்.

Vikatan
தீபா
தீபா

செங்குன்றத்திலிருந்து மூன்று பேரும் பேருந்தில் ஏறியபோது சேகர் ஒரு சீட்டிலும், அவரின் தம்பி சோமசுந்தரம் இன்னொரு சீட்டிலும் அமர்ந்திருக்கின்றனர். சோமசுந்தரத்தின் அருகில் பெண் ஒருவர் உட்காந்திருக்கிறார். சேகர் அமர்ந்திருந்த சீட்டின் அருகில் இன்னொரு பெண் நின்றுகொண்டிருந்திருக்கிறார். பேருந்து சென்னை பிராட்வே நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது சேகரின் அருகில் நின்றுகொண்டிருந்த பெண், சில்லறைகளை டிராவல் பேக் மீது போட்டிருக்கிறார்.

அதைப் பார்த்த சேகர், சில்லறைகளை எடுத்துத் தருவதாக அந்தப் பெண்ணிடம் கூறியிருக்கிறார். அதற்கு அந்தப் பெண் வேண்டாம், நானே எடுத்துக்கொள்கிறேன் என்று கூறி டிராவல் பேக்கை பின்பக்கமாகத் தள்ளி, சில்லறைக் காசுகளை எடுத்திருக்கிறார். அதன் பிறகு சென்னை அரசு மருத்துவமனை பேருந்து நிலையத்தில் இரண்டு பெண்களும் இறங்கிச் சென்றிருக்கின்றனர். பிராட்வே பேருந்து நிலையத்துக்கு சேகரும் அவரின் மனைவி, சோமசுந்தரம் ஆகியோர் வந்து இறங்கியபோது டிராவல் பேக்கைத் திறந்து பார்த்திருக்கின்றனர். அப்போது அதில் நகைகள் வைத்திருந்த பாக்ஸைக் காணவில்லை.

சில்லறை
சில்லறை

இதையடுத்து சேகர், காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில் 10 சவரன் டாலர் செயின், ஆறு சவரனில் இன்னொரு செயின், இரண்டரை சவரனில் சின்ன நெக்லஸ், இரண்டரை சவரனில் இரண்டு வளையல்கள் என 27 சவரன் தங்க நகைகளைக் காணவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். சேகர் அளித்த தகவலின்படி அவரின் அருகில் நின்றுகொண்டிருந்த பெண் நகைகளைத் திருடிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் நந்தினி, தீபா ஆகிய இருவரைக் கைதுசெய்திருக்கிறோம். இவர்கள் இருவரும் கூட்டமாக இருக்கும் பேருந்தில் பயணம் செய்வார்கள். அப்போது சில்லறைகளை ஓடும் பேருந்துக்குள் சிதறவிடுவார்கள். அதனால் பயணிகளின் கவனம் திசை திரும்பும். அப்போது பயணிகள் வைத்திருக்கும் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றுவிடுவார்கள். நந்தினி மீது உடுமலைபேட்டை, அடையார் சிவகாஞ்சி ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. தீபா மீது சிவகாஞ்சி காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு