Published:Updated:

நடிகர் ஆர்யாவைப்போல நடித்து பணம் பறித்த இளைஞர்கள்; பகீர் பின்னணி!

நடிகர் ஆர்யாவைப்போல நடித்த முகமது அர்மான்
நடிகர் ஆர்யாவைப்போல நடித்த முகமது அர்மான்

நடிகர் ஆர்யாவைப்போல நடித்து பெண் டாக்டரிடம் பணத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

நடிகர் ஆர்யா, தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 70 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டதாக ஜெர்மனைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், சில மாதங்களுக்கு முன்பு இந்திய பிரதமர் அலுவலகத்துக்குப் பரபரப்பான புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்தும்படி தமிழக அரசுக்கு ஜெர்மன் டாக்டரின் மனு அனுப்பிவைக்கப்பட்டது. உடனடியாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் நடிகர் ஆர்யாவிடம் புகாரளித்திருப்பதால் இந்தப் புகாரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு மத்திய குற்றப்பிரிவு, சி.பி.சி.ஐ.டி போலீஸ் எனப் புகார் மனு இழுத்தடிக்கப்பட்டதால் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை.

நடிகர் ஆர்யா
நடிகர் ஆர்யா

அதன் பிறகு, ஜெர்மன் டாக்டரின் பொது அதிகாரம் பெற்ற சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. அதனால் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடிகர் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். அந்தத் தகவல் நீதிமன்றத்திலும் அறிக்கையாகச் சமர்பிக்கப்பட்டது. இந்தச் சூழலில்தான் ஆப் மூலம் நடிகர் ஆர்யாவைப்போல நடித்து ஜெர்மனி பெண் டாக்டரை ஏமாற்றிப் பணம் பறித்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இருவரைக் கைதுசெய்திருக்கின்றனர்.

இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான் என்பவர் சமூக வலைதளம் மூலம் பெண் டாக்டரிடம் நடிகர் ஆர்யா என அறிமுகமாகியிருக்கிறார். பின்னர் அவர், பெண் டாக்டரைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பணத்தையும் பறித்திருக்கிறார். அதற்கு உடந்தையாக முகமது அர்மானின் மைத்துனர் முகமது ஹூசைனி பையாக் என்பவரும் இருந்திருக்கிறார். இதையடுத்து இருவரையும் ராணிப்பேட்டை பெரும்புலிப்பாக்கத்தில் வைத்து கைதுசெய்திருக்கிறோம். ஜெர்மன் பெண் டாக்டர் இவர்கள் இருவரின் வங்கிக் கணக்குக்குத்தான் பணத்தை அனுப்பியிருக்கிறார். இருவரிடமிருந்தும் இரண்டு செல்போன்கள், லேப்டாப், ஐ பேடு ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.

சென்னை: நடிகர் ஆர்யா மீதான புகார் என்ன? - விவரிக்கும் பெண் டாக்டரின் வழக்கறிஞர்
முகமது ஹூசைனி
முகமது ஹூசைனி

பெண் டாக்டர் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``நடிகர் ஆர்யாவைப்போல நடித்து பெண் டாக்டரை ஏமாற்றியதாக முகமது அர்மான், முகமது ஹூசைனி பையாக் ஆகியோரைப் போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள்தான். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், முகமது அர்மான், முகமது ஹூசைனி ஆகியோருக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதுபோல தகவல் இருக்கிறது. மேலும், ஜெர்மன் டாக்டர் புகார் அளித்த பிறகும்கூட நடிகர் ஆர்யா, முகமது அர்மான், முகமது ஹூசைனி ஆகியோர் தன்னுடைய பெயரில் ஏமாற்றுவது குறித்து புகாரளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த வழக்குக்குத் தேவையான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறோம்" என்றனர்.

இதற்கிடையில் இன்று காலையில் ஆர்யாவின் வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார். அதேபோல நடிகர் ஆர்யாவும் ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலைப் பதிவுசெய்திருக்கிறார். நடிகர் ஆர்யா மீது பெண் டாக்டர் கொடுத்த புகாரில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு