Published:Updated:

கால்வாயில் குதித்த கொள்ளையர்கள்; துரத்திப் பிடித்த போலீஸார்! என்ன நடந்தது?

கைதான இளைஞர்
கைதான இளைஞர்

சென்னையில் மெடிக்கல் கடையின் ஷட்டரை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்த இளைஞர்களைப் பிடிக்கச் சென்ற போலீஸார் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு, சாரி தெருவைச் சேர்ந்தவர் முகமது இக்பால் ஹக்கீம். இவர், சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி ரோட்டில் 'சென்னை மெடிக்கல்' என்ற பெயரில் மருந்துக்கடை நடத்திவருகிறார். 3.9.2021-ம் தேதி இரவு 10:30 மணியளவில் கடையைப் பூட்டிவிட்டு முகமது இக்பால் வீட்டுக்குச் சென்றார். 4.9.2021-ம் தேதி கடையில் வேலை பார்க்கும் முகமது அன்ஸ் என்பவர் கடையைத் திறக்கவந்தார்.

பூட்டை உடைத்து கொள்ளை
பூட்டை உடைத்து கொள்ளை
Representaional Image
`வெள்ளை நிற செருப்பு'தான் க்ளூ பெண் காவலரிடம் தாலி செயினைப் பறித்த இளைஞர்கள்; சிக்கியது எப்படி?

அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த முகமது அன்ஸ், உரிமையாளர் முகமது இக்பாலுக்கு போனில் தகவல் தெரிவித்தார். உடனே முகமது இக்பால் கடைக்கு வந்து பார்த்தார். அப்போது கல்லா பெட்டியிலிருந்த பணம் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளைபோயிருந்தது. இது குறித்து முகமது இக்பால், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், தலைமைக் காவலர்கள் அழகு குமார், பென் அரவிந்த் சாம், காவலர்கள் ரெஜின், திருக்குமரன், சுந்தர்ராஜ், சண்முகராஜா ஆகியோர்கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தனர்.

மெடிக்கல் கடையில் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் மந்தைவெளிப் பகுதியில் பதுங்கியிருக்கும் ரகசிய தகவல் இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் தலைமையிலான போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக அங்கு போலீஸார் சென்றபோது இரண்டு இளைஞர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களைப் போலீஸார் விரட்டினர். அப்போது கால்வாயில் இளைஞர்கள் குதித்துத் தப்பிக்க முயன்றனர். அதைப் பார்த்த போலீஸாரும் கால்வாயில் குதித்து இளைஞர்களை மடக்கினர்.

கைது
கைது

பின்னர், பிடிபட்ட இளைஞர்களை போலீஸார் குளிக்கவைத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரித்தபோது அவர்களின் பெயர் ராஜேஷ், விஜயகுமார் எனத் தெரியவந்தது. இவர்கள்மீது கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களிடமிருந்து பணம், செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட ராஜேஷ் என்ற போண்டா ராஜேஷ், ஆவடி நந்தவனம் மேடு பகுதியைச் சேர்ந்தவன். இவன்மீது 2018-ம் ஆண்டு பைக் திருட்டு வழக்கு, 2020-ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கு, 2020-ம் ஆண்டு வழிப்பறி வழக்கு ஆகியவை நிலுவையில் உள்ளன. போண்டா ராஜேஷின் கூட்டாளியான விஜயகுமார் என்ற பிக்சோ, சென்னை மந்தவெளியைச் சேர்ந்தவன். இவன் பெசன்ட் நகரிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்துவருகிறான். இவன்மீது கொலை முயற்சி, அடிதடி வழக்கு என நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கைதான இளைஞர்
கைதான இளைஞர்

சம்பவத்தன்று இவர்கள் இருவரும் மெடிக்கல் கடையின் ஷட்டர் பூட்டை உடைக்கின்றனர். பின்னர், கடையில் போடப்பட்டிருந்த கண்ணாடிக் கதவை இவர்களால் திறக்க முடியவில்லை. கத்தரிக்கோலைக்கொண்டு கண்ணாடிக் கதவின் பூட்டை உடைக்க இருவரும் சில நிமிடங்கள் முயன்றனர். பின்னர், வாடிக்கையாளர்களுக்கு மருந்து கொடுக்க அமைக்கப்பட்டிருந்த ஓட்டை வழியாக ஒரு கொள்ளையன் உள்ளே நுழைந்தான். மற்றொருவன் வெளியில் நின்றப்படி நோட்டமிட்டிருக்கிறான். கடைக்குச் சென்ற கொள்ளையன் கல்லாவிலிருந்த பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு வெளியில் வந்திருக்கிறான். இவை அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியிருந்தன. அதனால்தான் கொள்ளையர்களை எளிதில் பிடிக்க முடிந்தது. கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது கால்வாயில் குதித்துத் தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது போலீஸாரும் ஒரு கணம்கூட யோசிக்காமல் கால்வாயில் குதித்து இருவரையும் பிடித்துவிட்டோம்" என்றனர். கொள்ளையர்கள் கால்வாயில் குதித்து தப்பிக்க முயன்றபோது தைரியமாகக் கால்வாயில் குதித்த போலீஸாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு