Published:Updated:

சென்னை: நூதன முறையில் கார்கள் திருட்டு; நம்பிச் செல்லும் டிரைவர்களுக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி!

திருட்டு
திருட்டு

சென்னையில் கார்களை முன்பதிவு செய்து, நடுவழியில் டிரைவரை ஏமாற்றிவிட்டு கார்களைக் கடத்தும் கும்பல் போலீஸாரிடம் சிக்கியிருக்கிறது.

சென்னை, பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெகன் (37). கார் டிரைவர். கடந்த 28.4.2021-ல் ஜெகனின் காரை ஆபஸ் மூலம் ஒருவர் முன்பதிவு செய்தார். அதனால் சென்ட்ரலுக்கு ஜெகன் சென்று முன்பதிவு செய்த இரண்டு பேரைக் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். நெற்குன்றம் ரெட்டி தெருவில் கார் சென்றுகொண்டிருந்தபோது ஜெகனிடம் பயணம் செய்த ஒருவர், காரை நிறுத்தும்படி கூறியிருக்கிறார். உடனே ஜெகனும் காரை நிறுத்தியிருக்கிறார். பின்னர் கடையில் பொருள்களை வாங்கிவரும்படி ஜெகனிடம் அந்த நபர் கூறியிருக்கிறார்.


கார் முன்பதிவு
கார் முன்பதிவு

இதையடுத்து காரைவிட்டுக் கீழே இறங்கி பொருள் வாங்க ஜெகன் கடைக்குச் சென்றிருக்கிறார். இந்தச் சமயத்தில் காரை எடுத்துக்கொண்டு அவர்கள் சென்றுவிட்டனர். அதைப் பார்த்த ஜெகன் அதிர்ச்சியடைந்தார். காரை விரட்டிப் பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் கார் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது. காரைப் பறிக்கொடுத்த ஜெகன் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். காரை முன்பதிவு செய்தவர்களின் செல்போன் நம்பர் அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர். அதோடு சிசிடிவி கேமரா மூலம் காரைக் கண்டறிந்தனர். இதையடுத்து காரைக் கடத்திச் சென்றவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த குலோத்துங்கன் (23), தூத்துக்குடியைச் சேர்ந்த கார்த்திக் (27) எனத் தெரியவந்தது.

கைது
கைது

போலீஸாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``குலோத்துங்கன், கார்த்திக், மருதுபாண்டி மூவரும் நண்பர்கள். இவர்கள் ஆப் மூலம் காரை வாடகைக்கு முன்பதிவு செய்வார்கள். பின்னர் காரில் செல்லும்போது டிரைவரை ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி கீழே இறக்கிவிட்டுவிட்டு காரை கடத்திச் சென்றுவிடுவார்கள். பின்னர் அந்த காரை விற்று விடுவார்கள். தற்போது குலோத்துங்கன், கார்த்திக் இருவரையும் கைதுசெய்து ஒரு காரைப் பறிமுதல் செய்திருக்கிறோம். மருதுபாண்டியைத் தேடிவருகிறோம். 9.4.2021, 8,5,2021 ஆகிய தேதிகளில் இதே ஸ்டைலில் இவர்கள் காரைக் கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது’’ என்றனர்.

சென்னை: திருட்டு புல்லட் இன்ஜினில் குட்டி கார்... சினிமா ஷூட்டிங்! - இன்ஜினீயர் சிக்கியது எப்படி?
அடுத்த கட்டுரைக்கு