Published:Updated:

சென்னை:`ஃபேஸ்புக் நட்பு; ரகசிய வீடியோக்கள்!' - அதிர்ச்சியில் மாணவி

Representational image
Representational image

மாணவியைத் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, அவருக்கே தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கு, ஃபேஸ்புக் மூலம் எருக்கஞ்சேரி, எஸ்.எம். நகரைச் சேர்ந்த சுபீன்பாபு (25) என்பவர் 2016-ம் ஆண்டு அறிமுகமானார். முதலில் இருவரும் நண்பர்களாகப் பழகினர். பின்னர் இருவரும் காதலிக்கத் தொடங்கினர். அப்போது சுபீன்பாபுவும் அவரின் காதலியும் பல இடங்களுக்குச் சென்றனர். அப்போது காதலியிடம் சுபீன்பாபு, திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதை ரகசியமாக தன் செல்போனில் வீடியோவாகவும் எடுத்துவைத்திருக்கிறார்.

சுஜின் வர்கீஸ்
சுஜின் வர்கீஸ்

அந்த வீடியோக்களை தன்னுடைய நண்பரான சுஜின் வர்கீஸ் (27) என்பவரிடம் சுபீன்பாபு காட்டியிருக்கிறார். இந்தச் சமயத்தில் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி சுபீன்பாபுவிடம் அந்தப் பெண் வற்புறுத்தியிருக்கிறார். அப்போதுதான் சுபீன்பாபுவின் சுயரூபம் தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தன்னுடைய பெற்றோரிடம் விவரத்தைக் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளுக்கு ஆறுதல் கூறினர்.

பின்னர் மகளை அழைத்துக் கொண்டு தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்ற பெற்றோர், சுபீன்பாபு மற்றும் அவரின் நண்பர் சுஜின் ஆகியோர்மீது புகாரளித்தனர். இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும்படி ஜெயலட்சுமி உத்தரவிட்டார். அதன்பேரில் தாம்பரம் போலீஸார் சுபீன்பாபுவிடம் விசாரித்தனர். விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

சிறுமி பாலியல் வன்கொடுமை
சிறுமி பாலியல் வன்கொடுமை
representational image

இதுகுறித்து தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 16 வயது (2016-ம் ஆண்டு) இருக்கும்போதுதான் ஃபேஸ்புக்கில் சுபீன்பாபு அறிமுகமாகியிருக்கிறார். அப்போது அந்தச் சிறுமி பள்ளியில் படித்துக்கொண்டிருந்திருக்கிறார். சிறுமியைக் காதலிப்பதாகக் கூறிய சுபீன்பாபு, அவரை பீச், சினிமா தியேட்டார் எனப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் இருவரும் தனிமையில் இருந்தபோதுதான் அதை சுபீன்பாபு ரகசியமாக வீடியோவாக எடுத்துவைத்திருக்கிறார்.

தற்போது அந்தப் பெண் கல்லூரியில் படித்துவருகிறார். இந்தச் சமயத்தில் சுபீன்பாபுவும், அவருடைய நண்பர் சுஜின் வர்கீஸும் சேர்ந்து கல்லூரி மாணவியிடம், `உன்னுடைய வீடியோக்கள் எங்களிடம் இருக்கின்றன. அவற்றைச் சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவோம்' என்று கூறியதோடு, அநாகரிகமாகப் பேசியுள்ளனர். அதைக் கேட்டு அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். பின்னர் காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகாரளித்ததும், சுபீன்பாபு, சுஜின் வர்கீஸ் இருவரிடமும் விசாரித்தபோது அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர்.

சென்னை: மூதாட்டிக்கு அதிகாலையில் பாலியல் வன்கொடுமை! மர்ம நபரைத் தேடும் போலீஸ்
சுபீன்பாபு
சுபீன்பாபு

அவர்களிடமிருந்து மாணவி தொடர்பான வீடியோக்கள், போட்டோக்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். ஃபேஸ்புக்கில் அறிமுகமில்லாத நபர்களுடன் பழகுவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்" என்றனர்.

மாணவியைப் பாலியல்ரீதியாக மிரட்டிய சுபீன்பாபு, சுஜின் வர்கீஸ் ஆகியோர் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். அவர்களின் ஃபேஸ்புக் கணக்கு ஆகியவற்றை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கும் அவரின் பெற்றோருக்கும் மகளிர் போலீஸார் கவுன்சலிங் அளித்ததோடு, அறிவுரைகளையும் வழங்கி வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தாம்பரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு