சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நீலாங்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``நானும், என்னுடைய தோழியும் கடந்த 14.12.2022-ம் தேதி மாலை 7 மணிக்கு நீலாங்கரை புளூ பீச்சில் நடந்து சென்றுகொண்டிருந்தோம். அப்போது எங்களைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், என்னிடம் செல்போனைக் கேட்டு மிரட்டினர். பின்னர் என்னைத் தாக்கி கையிலிருந்த செல்போனைப் பறித்துக்கொண்டனர். அதன் பிறகு பாஸ்வேர்டை மிரட்டி வாங்கிக் கொண்டவர்கள், பின்னர் ஆன்லைன் செயலி மூலம் 40,000 ரூபாயை வேறு அக்கவுன்ட்டுக்கு மாற்றிக்கொண்டு செல்போனை தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்.

புகாரளித்த இளைஞரின் வங்கிக் கணக்கிலிருந்து எந்த வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பப்பட்டது என்ற விவரத்தை போலீஸார் கண்டறிந்தனர். அதனடிப்படையில், சென்னை பள்ளிக்கரணைப் பகுதியைச் சேர்ந்த ஊசி உதயா என்கிற உதயகுமார், விக்கி என்கின்ற விக்னேஷ் ஆகியாரிடம் போலீஸார் விசாரித்தனர். இவர்கள்மீது பள்ளிக்கரணை, நீலாங்கரை ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவர்கள்தான் அந்த இளைஞரிடமிருந்து 40,000 ரூபாயைப் பறித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் உதயகுமாரின் கூட்டாளியான தினேஷை போலீஸார் தேடிவருகின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``சென்னையிலுள்ள கடற்கரையில் இரவு நேரங்களில் தனிமையில் இருக்கும் ஜோடிகளைக் குறிவைத்து ஒரு கும்பல் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவருகிறது. இவர்களில் சிலர் தங்களை போலீஸ் என்று கூறி ஜோடிகளை மிரட்டி செல்போன், தங்க நகைகள், பணம் ஆகியவற்றைப் பறித்துச் செல்வதுண்டு. அந்த வகையில் நீலாங்கரை கடற்கரையில் ஆணும் பெண்ணும் கடற்கரையில் நடந்து சென்றபோது அவர்களை மிரட்டி செல்போன், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மூலம் 40,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்டைலில் கொள்ளை நடப்பது முதல் தடவை. ஏனென்றால் நகைகள், பணம், செல்போனைத்தான் இந்தக் கொள்ளைக் கும்பல் பறித்துச் செல்லும். பாதிக்கப்பட்ட இளைஞர் அளித்த தகவலின்படி விசாரணை நடத்தினோம்.

மேலும் இந்தக் குற்றச் சம்பவத்தில் பணப் பரிவர்த்தனை மூலம் எளிதில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டோம். எனவே, ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரைப் பகுதியில் ஜோடிகள் செல்ல வேண்டாம். அதோடு இரவு நேரங்களில் ஜோடிகள் அங்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். கடற்கரையில் நடக்கும் குற்றச் செயல்களைத் தடுக்க ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியிருக்கிறோம். கைதானவர்கள் இதே ஸ்டைலில் சில ஜோடிகளிடம் கைவரிசை காட்டியிருக்கும் தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்கவில்லை. அதனால் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம்'' என்றார்.