சென்னை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் குடியிருக்கும் 16 வயது சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே சிறுமியின் தந்தை மகளிடம் விசாரித்தபோது, பிரவீன் என்ற நபர் தன்னைக் காதலித்ததாகவும், பின்னர் அவர் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறினார். அதைக் கேட்டு சிறுமியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது குறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் பிரவீனை அழைத்து விசாரித்தபோது சிறுமி கூறிய தகவல் உண்மையெனத் தெரியவந்தது. இதையடுத்து புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரவீன் (23) மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இன்னொரு சம்பவம்!
சென்னை, வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி தரப்பில் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த குணசேகர் என்கிற ஜெயபால் (46) என்பவர் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ஜெயபாலை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் கவுன்சலிங் அளித்துள்ளோம். தொடர்ந்து இரண்டு சிறுமிகளையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறோம். இந்த இரண்டு வழக்குகளுக்கு தேவையான சாட்சிகள், ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விரைவில் குற்றப் பத்திரிகைகளையும் தாக்கல் செய்யவிருக்கிறோம்" என்றனர்.