Published:Updated:

சென்னை: ரூ.20 லட்சத்தை அபகரிக்க கடத்தல் நாடகம்! - நண்பனுடன் தனியார் நிறுவன அதிகாரி சிக்கியது எப்படி?

கடத்தல்
கடத்தல் ( Representation Image )

உறவினரின் விபத்து இழப்பீட்டுத் தொகையை அபகரிக்க திட்டமிட்ட தனியார் நிறுவன அதிகாரி, நண்பனுடன் சிக்கினார். விசாரணையில் கடத்தல் சம்பவம் நாடகம் எனத் தெரியவந்தது.

சென்னை அம்பத்தூர், கிருஷ்ணாபுரம் உசேன் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்வரன். இவரின் மனைவி உமாவின் தங்கை சாந்தி. சாந்தியின் மகன் சண்முகம். கட்டுமான நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக சண்முகம், மனைவியைப் பிரிந்து தனியாக வசித்துவருகிறார். இந்தநிலையில் கடந்த சில தினங்களாக சண்முகத்தைக் காணவில்லை. இது தொடர்பாக சண்முகத்தின் பெரியப்பாவான வக்கீல் ராஜேஸ்வரன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் கனகராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சண்முகத்தை போலீஸார் தேடிவந்தனர்.

கடத்தல்
கடத்தல்

இந்தநிலையில், சண்முகத்தின் அம்மா சாந்திக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய மர்மநபர் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் சண்முகத்தை உயிரோடுவிடுவோம் என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் சாந்தியின் போனுக்கு சில படங்கள் வந்தன. அதில் சண்முகத்தின் கைககள் கட்டப்பட்ட நிலையில், அவரின் பிடறியில் கால்களால் மிதிப்பது போன்ற போட்டோக்கள் இருந்தன. அதைப் பார்த்த சாந்தி அதிர்ச்சியடைந்தார். சண்முகத்தின் பெரியப்பாவுக்கும் கடத்தல் கும்பல் போன் செய்து மிரட்டியது.

சண்முகத்தைக் கடத்தியவர்கள் அனுப்பிய போட்டோக்களை போலீஸாரிடம் அவரின் உறவினர்கள் கொடுத்தனர். இதையடுத்து கடத்தல் கும்பலைச் சேர்ந்தவரின் போன் நம்பர் சிக்னலை போலீஸார் ஆய்வு செய்தனர். அது, செங்கல்பட்டு மாவட்டம், கண்டிகை வெங்கடமங்கலம் மெயின் ரோடு, பொன்னியம்மன் கோயில் தெருவில் சிக்னல் காட்டியது. உடனடியாக போலீஸார் அந்த இடத்துக்குச் சென்றனர். ரவி என்பவரின் வீட்டில் சண்முகம் கடத்தி சிறைவைக்கப்பட்டிருக்கும் தகவலை உறுதிப்படுத்திய போலீஸார், வீட்டுக்குள் துப்பாக்கியோடு நுழைந்தனர்.

சென்னை: அதிகாலையில் காரில் கடத்தல்... கணவனை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
கைது
கைது

அப்போது கடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட சண்முகம், ஒருவருடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார். இதையடுத்து சண்முகம், அவரைக் கடத்தியதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய ரவி ஆகியோரைப் பிடித்து அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் கடத்தல், நாடகம் எனத் தெரியவந்தது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``சண்முகம், வேலைக்குச் சரியாகச் செல்லாமல் ஊரைச் சுற்றி வந்தார். பெரியப்பா ராஜேஸ்வரன் வீட்டின் மாடியில் தனியாகத் தங்கியிருந்தார். இந்தநிலையில், சண்முகத்தின் உறவினர் ஒருவரின் மகன் விபத்தில் உயிரிழந்தார். அதற்கு இழப்பீட்டுத் தொகையாக 20 லட்சம் ரூபாய் வந்திருக்கிறது. அந்தத் தொகையை அபகரிக்க சண்முகம், தன்னுடைய நண்பரான ரவி மூலம் கடத்தல் நாடகத்தை நடத்தியிருக்கிறார். இதையடுத்து சண்முகம், ரவி ஆகியோரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

கடத்தல் சம்பவம் நாடகம் எனத் தெரிந்ததில் சண்முகத்தின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு