Published:Updated:

`மார்டன் டிரெஸ் பெண்கள்தான் இவர்கள் டார்கெட்!' - பாலியல் சீண்டலோடு வழிப்பறியும் செய்த இளைஞர்கள்

பாலியல் சீண்டலோடு வழிப்பறி
பாலியல் சீண்டலோடு வழிப்பறி

சென்னையில் மார்டன் டிரெஸ் அணிந்து தனியாகச் செல்லும் இளம்பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் இளைஞர்கள், வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டுவந்திருக்கின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கம், ஆர்மஸ் சாலையிலுள்ள கனரா வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துவிட்டு வெளியில் வந்த 24 வயதுடைய இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஒருவன் ஈடுபட்டான். அதனால் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார். அந்தச் சமயத்தில் பெண்ணின் கையிலிருந்த செல்போனைப் பறித்துக்கொண்டு அவன் தப்பித்து ஓடினான். இது குறித்து அந்தப் பெண், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர்.

சக்திவேல்
சக்திவேல்

சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் விசாரித்தபோது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, செல்போனையும் பறித்துச் சென்றது விழுப்புரம் மாவட்டம், ஆரோ பகுதியைச் சேர்ந்த கவிதாசன் என்று தெரியவந்தது. இதையடுத்து கவிதாசனை போலீஸார் கைதுசெய்து விசாரித்தபோது, அவனின் கூட்டாளியான சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சக்திவேலையும் போலீஸார் பிடித்தனர். இருவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ``சென்னை கீழ்ப்பாக்கம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியாகச் செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதோடு, அவர்களிடமிருந்து ஹேண்ட் பேக், செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்யும் சம்பவங்கள் தொடர்கதையாகின. அது தொடர்பான புகார்கள் வரத் தொடங்கியதும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. வழிப்பறி சம்பவங்கள் நடந்த இடங்களிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். கீழ்ப்பாக்கம் பகுதியில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் நீல நிற இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினோம்.

சிசிடிவி
சிசிடிவி

இந்தச் சமயத்தில் அண்ணாநகர் பகுதியில் ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, அவரின் செல்போனும் வழிப்பறி செய்யப்பட்டதாகப் புகார் வந்தது. அந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது ஒரே நபர்தான் இந்த வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. வழிப்பறி செய்யப்பட்ட செல்போனின் ஐஎம்இஐ நம்பர்களைக்கொண்டு சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியோடு சிக்னலைக் கண்டறிந்தோம். அப்போது வழிப்பறி செய்யப்பட்ட செல்போனின் சிக்னல் கோவையில் காட்டியது. உடனடியாக அந்த ஐஎம்இஐ செல்போனில் புதிதாக போடப்பட்டிருந்த செல்போன் நம்பருக்கு தொடர்புகொண்டு பேசினோம். அப்போதுதான் விழுப்புரத்தைச் சேர்ந்த கவிதாசன் என்பவர் செல்போனைக் கொடுத்த விவரத்தை கோவையைச் சேர்ந்தவர் தெரிவித்தார்.

பாலியல் சீண்டல்… மாணவியின் 7 வருட சட்டப் போராட்டம்... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து கவிதாசனைப் பிடிக்க திட்டமிட்டோம். ஆனால் அவனின் செல்போன் சிக்னல் சென்னை, விழுப்புரம், புதுச்சேரி என மாறி மாறிக் காட்டியதால் கவிதாசனைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் கவிதாசன் அடிக்கடி ஒரு செல்போன் நம்பரில் நீண்ட நேரம் பேசுவதைக் கண்டறிந்தோம். அந்த செல்போன் நம்பர் சென்னை சாந்தோம் பகுதியில் சாலைப் பணியில் ஈடுபடும் ஒருவருடையது எனத் தெரியவந்தது. அதனால் அந்த நபரைப் பிடித்தோம். அவரிடம் விசாரித்தபோது கவிதாசன் குறித்த முழுத் தகவல்களும் தெரியவந்தன. அதோடு, கவிதாசனின் கூட்டாளியான சக்திவேல் என்பவரும் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, வழிப்பறிச் சம்பவங்களிலும் ஈடுபடுவது தெரிந்தது. அதனால் கவிதாசன், சக்திவேல் இருவரையும் பிடிக்க முடிவு செய்தோம். அதற்காக சக்திவேலின் மகனுக்கு உடல்நலம் சரியில்லை என்ற நாடகத்தை அரங்கேற்றினோம். அதை நம்பிய சக்திவேல், கவிதாசனோடு நாங்கள் கூறிய மருத்துவமனைக்கு வந்தார். அப்போது இருவரையும் மடக்கிப் பிடித்தோம். அவர்களிடமிருந்து எட்டு செல்போன்களையும், பைக் ஒன்றையும் பறிமுதல் செய்தோம். இவர்கள் இருவரும் அண்ணாநகர், ஜெஜெ நகர் , கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாலியல் சீண்டல், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. ஜெஜெ நகரில் பெண் ஒருவரை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கியதோடு அவரின் பைக்கையும் பறித்துச் சென்றதும் தெரிந்தது.

கைது
கைது
representational image

கைதுசெய்யப்பட்ட கவிதாசன், அண்ணாநகரிலுள்ள கல்லூரி ஒன்றில் படித்திருக்கிறார். பிறகு புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் இரண்டு ஆண்டுகள் குடும்பம் நடத்தியிருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் கவிதாசனை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். சிறையிலிருந்து வெளியில் வந்த கவிதாசன், தனியாக வசித்துவந்திருக்கிறார். அப்போது சாலையில் தனியாக மார்டன் உடையில் செல்லும் பெண்களைப் பார்த்தால் கவிதாசனுக்கு ஆசை ஏற்பட்டு அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வாடிக்கையாகவைத்திருக்கிறார்.

அந்தச் சமயத்தில் பெண்களின் உடைமைகளையும் திருடிக்கொண்டு பைக்கில் தப்பி விடுவார். அந்தப் பணத்தில் சந்தோஷமாக இருக்கும் கவிதாசன், மீண்டும் மீண்டும் வழிப்பறி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். பாலியல் சீண்டல் காரணமாக பெண்கள் புகாரளிக்கத் தயங்கியிருக்கின்றனர். அதைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்ட கவிதாசன், இதுவரை ஏராளமான பெண்களுக்குத் தொல்லை கொடுத்துவந்திருக்கிறார். தனியாக பைக்கில் செல்லும்போது பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது சிரமமாக இருந்ததால் சக்திவேலையும் தன்னோடு கவிதாசன் பைக்கில் அழைத்துச் சென்றிருக்கிறான். சக்திவேல் பைக்கை ஓட்டினால் பின்னால் அமர்ந்திருக்கும் கவிதாசன், பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவான். அதன் பிறகு கவிதாசன் பைக்கை ஓட்டும்போது சக்திவேல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறான். இதையடுத்து இருவர் மீதும் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு