சென்னை மதுரவாயல் கார்த்திகேயன் நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் வானகரம், பழனியப்பா நகர் முதல் தெருவில் பாலாஜி கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். இவர், செல்போன் நிறுவனத்துக்கு கேபிள் பதிக்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்துவருகிறார். இந்த நிலையில் பன்னீர்செல்வம், கடந்த 12.12.2022-ம் தேதி காலை நிறுவனத்துக்குச் சென்றபோது அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்புக்குழாய்கள், வெளியில் நிறுத்தியிருந்த சரக்கு வாகனம் ஆகியவை திருட்டுப்போயிருந்தன. இது குறித்து பன்னீர்செல்வம் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பன்னீர்செல்வத்திடம் வேலை பார்த்த மூன்று ஊழியர்கள் மாயமாகியிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்தபோது இரும்புக்குழாய்கள், சரக்கு வாகனத்தைத் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``இரும்புக்குழாய்களைத் திருடிய வழக்கில் திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல், வேலூர் கணக்கனியன் கிராமத்தைச் சேர்ந்த பாபு, 17 வயது சிறுவன் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் பிடித்து விசாரித்தோம். விசாரணைக்குப் பிறகு சக்திவேல், பாபு ஆகியோரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம். அவர்களிடமிருந்து சரக்கு வாகனம், இரும்புக்குழாய்களை மீட்டிருக்கிறோம். சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்திருக்கிறோம்" என்றனர்.