Published:Updated:

சென்னை: `பணத்துக்குப் பணம்; பைக்குக்கு பைக்’ - மோசடி வழக்கில் போலி பார்சல் மேலாளர் சிக்கியது எப்படி?

மோசடி வழக்கில் கைதான பிரவீனா
News
மோசடி வழக்கில் கைதான பிரவீனா

சென்னையிலிருந்து வெளிமாநிலங்களுக்கும் வெளிமாவட்டங்களுக்கும் பைக்குகளை பார்சல் அனுப்புவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் மேலாளர் பிரவீனாவும், அவருக்கு உடந்தையாக இருந்த சஞ்சய் என்பவரும் கைதுசெய்யப்பட்டனர்.

சென்னை திருவல்லிக்கேணி, பழனியம்மன் கோயில் 5-வது தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் சென்னை அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``என்னுடைய மகன் சரத்குமார், குஜராத்தில் வேலை பார்த்துவருகிறார். என்னுடைய கணவர் இறந்ததால் சரத்குமார் ஊருக்கு வந்தான். மீண்டும் அவன் வேலைக்குச் சென்றதால் அவனின் பைக்கை பார்சல் மூலம் அனுப்பத் திட்டமிட்டேன். ஆன்லைனில் பார்சல் நிறுவனத்தின் மேலாளர் ரெஜினா என்பவரின் செல்போனில் கடந்த 27.8.2021-ம் தேதி பேசினேன்.

பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள்
பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள்

அப்போது அவர் கூகுள் பே மூலம் 9.440 ரூபாய் அனுப்பும்படியும் வண்டியை எடுத்துச் செல்ல வாகனம் ஒன்றையும் அனுப்பிவைத்தார். அதன்படி வீட்டுக்கு வந்த ஒருவர், வண்டியை எடுத்துச் சென்றார். அதன் பிறகு மேலாளர் ரெஜினாவிடம் கேட்டபோது அவர் பைக்கை அனுப்பிவிட்டோம் என்று பதிலளித்தார். ஆனால் வண்டி போய்ச் சேரவில்லை. அதனால் ரெஜினாவை செல்போனில் தொடர்புகொண்டபோது அவரின் போன் சுவிட்ச் ஆஃப் என பதில் வந்தது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பேகம் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 406, 420, 468, 471 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து அண்ணாசதுக்கம் போலீஸார் கூறுகையில், ``தனலட்சுமி என்பவர் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்தினோம். அப்போது தனலட்சுமியிடம் பார்சல் நிறுவனத்தின் மேலாளர் என அறிமுகமான ரெஜினாவின் செல்போன் சிக்னல், அவரின் வங்கிக் கணக்கு உள்ளிட்டவை மூலம் விசாரணை நடத்தி ரெஜினாவின் இருப்பிடத்தைக் கண்டறிந்தோம். ரெஜினாவின் உண்மையான பெயர் பிரவீனா. இவர் புழல் பகுதியில் குடியிருந்துவருகிறார். இவர் தன்னை பார்சல் நிறுவன மேலாளர் என இணையதளத்தில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு பதிவு செய்துவைத்திருக்கிறார். மேலும் தன்னுடைய செல்போன் நம்பரையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

சஞ்சய்
சஞ்சய்

அந்த நம்பரில் தொடர்புகொள்பவர்களிடம் ரெஜினா, கூகுள் பே மூலம் பணத்தை வாங்கிக்கொள்வார். பிறகு பைக்குகளை அனுப்புவர்களின் இருப்பிடத்துக்கே சென்று எடுத்துக்கொள்வார். அதற்கான ரசீதுகளையும் ரெஜினா கொடுப்பார். பைக்குகளை எடுத்து சஞ்சய் மூலம் சோழவரத்திலுள்ள குடோனில் பதுக்கி வைத்துக்கொள்வார். பைக், பொருள்கள் குறிப்பிட்ட காலத்தில் சேரவில்லை எனத் தெரிந்த பிறகு ரெஜினாவை தொடர்புகொண்டால் அவரின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கும். அதன் பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவரும். தனலட்சுமியைப்போல இன்னும் சிலரை ரெஜினா என்ற பெயரில் பிரவீனா ஏமாற்றியது தெரியவந்தது. அவரிடமிருந்து நான்கு பைக்குகளை பறிமுதல் செய்திருக்கிறோம். இந்த வழக்கில் பிரவீனா, சஞ்சய் ஆகியோரைக் கைதுசெய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. பைக் உள்ளிட்ட பொருள்களை அனுப்பும்போது கவனமாக பொதுமக்கள் செயல்பட வேண்டும்" என்றனர்.