Published:Updated:

`ஒரு வீட்டின் விலை ரூ.4 லட்சம்!' - பலரை ஏமாற்றிய போலி வீட்டு வசதி வாரிய அதிகாரி சிக்கியது எப்படி?

அதிகாரியாக நடித்த சரோஜா
News
அதிகாரியாக நடித்த சரோஜா

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் அதிகாரியாகப் பணியாற்றுவதாகக் கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண்ணை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் முனியசாமி (44). இவர், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 3.12.2021-ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ``என் தம்பி அருணுக்குத் தெரிந்த கிருஷ்ணன் என்பவர் எனக்குக் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமானார். அப்போது கிருஷ்ணன், தன்னுடைய மனைவி சரோஜா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் அதிகாரியாக இருப்பதாகக் கூறினார். மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்படும் ஒரு வீட்டின் விலை 4 லட்சம் ரூபாய் என்றும், வீடுகள் தேவைப்பட்டால் தன்னைத் தொடர்புகொள்ளுங்கள் என்றும் கிருஷ்ணன் தெரிவித்தார்.

கைதான சரோஜா, ஆறுமுகம், வெங்கடேசன்
கைதான சரோஜா, ஆறுமுகம், வெங்கடேசன்

அதன்படி நான், எனக்கு ஒரு கடை, இரண்டு குடியிருப்புகள் தேவை என்று கிருஷ்ணனிடம் கூறினேன். அதற்காக 12 லட்சம் ரூபாயை சரோஜாவிடம் கொடுத்தேன். அப்போது அவர் என்னையும், என் மனைவி முருகேஸ்வரியையும் போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறி ஈக்காட்டுதாங்கலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு எங்களை போட்டோ எடுத்தார்கள். பிறகு 28.8.20217-ம் ஆண்டு எனக்கும் என் மனைவிக்கும் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டதாகக் கூறி அதற்கான ஆர்டரை சரோஜா கொடுத்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காண்பித்தபோது அது போலி எனத் தெரியவந்தது. அது குறித்து சரோஜாவிடம் கேட்டபோது ஆள்வைத்து அவர் என்னை மிரட்டினார். எனவே என்னை ஏமாற்றிய சரோஜா மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். என்னைப்போல இன்னும் சிலரையும் இவர்கள் ஏமாற்றியதாகத் தகவல் உள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் உதயசூரியன் ஐ.பி.சி 420, 468, 471 ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.

கைது
கைது

விசாரணையில் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சரோஜா, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம், ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைதுசெய்து போலீஸார் சிறையில் அடைத்தனர். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெகதீஸ் என்பவரை போலீஸார் தேடிவருகின்றனர்.