Published:Updated:

சென்னை: `நகை, பணத்தைக் கேட்டால் ரத்தம் கக்கிச் சாவாய்!’ - பெண் மந்திரவாதி சிக்கிய பின்னணி

பெண் மந்திரவாதி நாராயணி
பெண் மந்திரவாதி நாராயணி

சென்னையில் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் தங்க நகைகள், பணத்தை வாங்கி ஏமாற்றியதாக பெண் மந்திரவாதியை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பாலவாக்கம், முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (42). இவர், கடந்த செப்டம்பர் மாதம் 12- ம் தேதி நீலாங்கரை காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தன்னை ஏமாற்றி தங்க நகைகள், பணம் ஆகியவற்றை மோசடி செய்ததாகப் புகாரளித்தார். அதன்பேரில் நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கை எஸ்.ஐ தமிழன்பன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தீ
தீ
representaional image

இது குறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ``சிவக்குமாரின் மனைவி கவிதா. இவர், கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 12- ம் தேதி அந்தப் பகுதியிலுள்ள கோயிலுக்குச் சென்றிருக்கிறார். அப்போது அவர் மீது தீப்பிடித்தது. இதில் கவிதா உயிரிழந்தார். அதனால், சிவக்குமார் மனவேதனையில் இருந்தார். அந்தச் சமயத்தில் சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த நாராயணி என்ற பெண் சிவக்குமாருக்கு அறிமுகமாகியிருக்கிறார். அவரிடம் தன்னுடைய மனைவி உயிரிழந்த தகவலை சிவக்குமார் கூறியிருக்கிறார்.

அதைக் கேட்ட நாராயணி, `உன் மனைவியின் ஆத்மா சாந்தியடையவில்லை. அதற்கு சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும்’ என சிவக்குமாரிடம் கூறியிருக்கிறார். அதை உண்மையென சிவக்குமார் நம்பிவிட்டார். இதையடுத்து நாராயணி, `உன் மனைவி அணிந்திருந்த தங்க நகைகளை ஒரு மண்டலம் பூஜை செய்ய வேண்டும்’ என்று சிவக்குமாரிடம் கூறியிருக்கிறார். அதற்கு சம்மதித்த சிவக்குமார், வீட்டிலிருந்த 11.5 சவரன் தங்க நகைகள், 1,45,000 ரூபாய் பணம் ஆகியவற்றை நாராயணியிடம் கொடுத்திருக்கிறார்.

நகைகளை வாங்கிய ரத்தன்லால்
நகைகளை வாங்கிய ரத்தன்லால்

அதை வாங்கிக்கொண்ட நாராயணி, நகைகளையும் பணத்தையும் தன்னுடைய வீட்டில் வைத்து பூஜை செய்திருக்கிறார். நாராயணி கூறிய ஒரு மண்டலம் முடிந்த பிறகு அவரிடம் நகைகள், பணத்தை சிவக்குமார் கேட்டிருக்கிறார். அதற்கு 365 நாள்கள் பூஜை செய்ததால்தான் முழுப் பலன் கிடைக்கும் என நாராயணி கூறியிருக்கிறார். அதனால், சிவக்குமாருக்கு நாராயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் சிவக்குமாரைப்போல குணசுந்தரி என்ற பெண்ணிடம் 7.5 சவரன் தங்க நகை, 1,50,000 ரூபாய், ரேவதி என்பவரிடம் 13.5 சவரன் தங்க நகை, 55,000 ரூபாய், பாலாஜி என்பவரிடம் 22 சவரன் தங்க நகை, 2,55,000 ரூபாய், புவனேஸ்வரி என்பவரிடம் 21 சவரன் தங்க நகை, 40,000 ரூபாய், மேகலா என்பவரிடம் 7 சவரன் தங்க நகை, 1,60,000 ரூபாய், அருணகிரி என்பவரிடம் 20.5 சவரன் தங்க நகை, 65,000 ரூபாய் என நாராயணி பரிகார பூஜைக்காக வாங்கிய தகவல் சிவக்குமாருக்கு தெரியவந்தது. அவர்களிடம் வாங்கிய தங்க நகைகள், பணத்தை நாராயணி திருப்பிக் கொடுக்கவில்லை.

சென்னையில் ஹூக்கா போதைக் கலாசாரம்... திடீர் ரெய்டு; 14 பேர் கைது! - பின்னணி என்ன?

இதையடுத்து சிவக்குமாரின் புகாரின் பேரில் நாராயணியை கையும் களவுமாகப் பிடிக்க வியூகம் அமைத்தோம். அதனால் காவலர் ஒருவரை, நாராயணியிடம் போனில் பேசவைத்தோம். அந்தக் காவலர், தன்னுடைய வீட்டில் பிரச்னை இருப்பதாகக் கூறினார். உடனே நாராயணி, வழக்கம்போல நகைகள், பணத்தைவைத்து பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார். அதற்கு காவலரும் சம்மதித்தார். இதையடுத்து நாராயணி, காவலர் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு காத்திருந்து அவரை மடக்கிப்பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தோம்.

பூஜைப் பொருள்கள்
பூஜைப் பொருள்கள்
representational image

அப்போது நாராயணி, 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பரிகார பூஜை, பில்லி, சூன்யம் என கட்டுக்கதைகளைக் கூறி தங்க நகைகள், பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது. அந்த நகைகளை அடகுவைத்து அதில் கிடைத்த பணத்தில் டூ வீலர், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றை வாங்கி பெண் மந்திரவாதி நாராயணி ஆடம்பரமாக வாழ்ந்துவந்திருக்கிறார். அதனால், அவரைக் கைத செய்து நகைகளையும் பணத்தையும் மீட்டிருக்கிறோம். மேலும் பெண் மந்திரவாதி, பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று கூறுபவர்களிடம் பூஜை நடந்துகொண்டிருக்கும்போது தங்க நகைகள், பணத்தைத் திருப்பிக் கேட்டால், `ரத்தம் கக்கிச் சாவாய்’ என்று கூறி மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. நாராயணியிடமிருந்து நகைகளை வாங்கிய ரத்தன்லால் என்பவரையும் கைதுசெய்திருக்கிறோம்" என்று போலீஸார் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு