Published:Updated:

`எங்கள் ஊரே திருடும்; ஒரு டீமுக்கு 3 பேர்!' -சென்னை போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த `ஆட்டோ ராணி' அகிலா

அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தனிப்படை போலீஸாரை அங்கிருந்து புறப்படவிடாமல் தடுத்துள்ளனர். நிலைமை விபரீதமானதும் ஆந்திர மாநில போலீஸாரின் உதவியை சென்னை தனிப்படை போலீஸார் நாடியுள்ளனர்.

ஆட்டோ ராணி அகிலா
ஆட்டோ ராணி அகிலா

சென்னையில் ஆட்டோவில் பயணிக்கும் மூன்று பெண்கள், மூதாட்டிகளின் கவனத்தை திசைதிருப்பி கொள்ளைச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து சென்னையில் உள்ள பல காவல் நிலையங்களுக்குப் புகார்கள் வந்தன.

கடந்த 3-ம் தேதி மதியம் 12.30 மணியளவில் பொன்னியம்மன்மேடு, பிரகாஷ் நகரைச் சேர்ந்த ஜூலியா ஜெயராஜ் (82) என்ற மூதாட்டியை பெரம்பூர் சர்ச் ரோடு பகுதியில் ஆட்டோவில் பயணித்த 3 பெண்கள் ஏமாற்றி 3 சவரன் தங்கச் செயினைத் திருடினர்.

ஆட்டோ
ஆட்டோ

ஜூலியா ஜெயராஜ் கொடுத்த புகாரின்பேரில் துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் பரணிகுமார், கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் ஆட்டோ ராணிகள் 3 பேர் குறித்து தீவிரமாக விசாரித்தபோது, அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் தனிப்படை போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர்கள் பரணிகுமார், கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீஸார் ஆந்திராவுக்குச் சென்றனர்.

அங்கு அவர்களுக்குக் கடும் சவால்கள் காத்திருந்தன. அதையெல்லாம் சமாளித்து ஆட்டோவில் பயணித்து மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி நகைகளை கொள்ளையடித்த அகிலா (28) என்ற பெண்ணை மட்டும் போலீஸார் கைதுசெய்து சென்னைக்கு அழைத்துவந்துள்ளனர்.

`நம்ப வைப்பார்கள்; கைவரிசை காட்டுவார்கள்!' -சென்னையைப் பதறவைக்கும் `ஆட்டோ ராணிகள்'

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஆட்டோவில் பயணிக்கும்போது மூதாட்டிகள் அணிந்திருக்கும் தங்கச் செயின்கள் ஒரே ஸ்டைலில் கொள்ளையடிக்கப்பட்டன. அதாவது, மூதாட்டிகள் ஆட்டோவில் பயணிக்கும்போது உங்களின் செயின் அறுந்துவிழுவதைப் போல உள்ளது என்று ஒரு பெண் கூறுவார். இன்னொருபெண், மூதாட்டிக்கு செயினைக் கழற்ற உதவுவார். அடுத்த பெண், மூதாட்டியின் செயினை அவர் வைத்திருக்கும் பையில் வைக்க ஹெல்ப் பண்ணுவார்.

அதன்பிறகு அந்த மூன்று பெண்களும் மூதாட்டியின் பையிலிருக்கும் செயினைத் திருடிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடும் பெண்களைப் பிடிக்க வியூகம் அமைக்கப்பட்டது. புகார் கொடுத்த மூதாட்டிகள் கொடுத்த தகவலின்படி சில விவரங்களைச் சேகரித்தோம். அப்போது அவர்கள் தெலுங்கில் பேசியதை மூதாட்டிகள் குறிப்பிட்டனர். இதனால் ஆந்திராவைச் சேர்ந்த பெண்கள் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

உடனடியாக ஆந்திராவிலிருந்து சென்னைக்குக் கொள்ளையடிக்க வருவோர்களின் விவரங்களை ரகசியமாகச் சேகரித்தோம். அப்போது, ஆந்திர மாநிலம் சித்தூர் குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிக்கும் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு தனிப்படை போலீஸார் சென்றனர். அந்தக் கிராமத்துக்குச் சென்றபோது ஊரே திரண்டுவிட்டது. அவர்களைச் சமாளித்து ஜூலியா ஜெயராஜிடம் தங்கச் செயினைப் பறித்த அகிலா (28) என்பவரைப் பிடித்தோம்.

அகிலா
அகிலா

இந்தத் தகவல் பரவியதும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தனிப்படை போலீஸாரை அங்கிருந்து புறப்படவிடாமல் தடுத்துள்ளனர். நிலைமை விபரீதமானதும் ஆந்திர மாநில போலீஸாரின் உதவியை சென்னை தனிப்படை போலீஸார் நாடியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஆந்திர மாநில போலீஸார், சென்னை போலீஸாரையும் அகிலாவையும் அங்கிருந்து லோக்கல் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்துள்ளனர். பின்னர் அந்தக் கிராம மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பிறகே அகிலாவை அந்தக் கிராம மக்கள் சென்னைக்கு அழைத்துவர சம்மதித்துள்ளனர்.

சென்னைக்கு அழைத்துவரப்பட்ட அகிலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். அகிலா மீது 4 மாநில காவல்துறையில் வழக்குகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக கொள்ளைச் சம்பவங்களில் அகிலா மற்றும் அவரின் கூட்டாளிகள் ஈடுபட்டுவருகின்றனர். அகிலாவிடம் கேட்டபோது, `எங்கள் ஊரே திருடும், ஒரு டீமுக்கு 3 பெண்கள் இருப்பார்கள்' எனக் கூறியுள்ளார்.

`சீசனுக்கு ஏற்ப கெட்அப்; மூன்று மனைவிகள்!'- போலி ஐயப்ப பக்தரின் அதிர்ச்சிப் பின்னணி

மேலும் அவர், `சமீபத்தில் பெரம்பூர் சர்ச் ரோட்டில் மட்டும்தான் நான், கனகா, அலமேலு ஆகியோர் கொள்ளையடித்தோம். சென்னையில் நடந்த இதர கொள்ளைச் சம்பவங்களுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை' என்று கூறியுள்ளார்.

அகிலாவின் கூட்டாளிகள் அலமேலு, கனகா ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தேடிவருகிறோம். அகிலாவிடமிருந்து 2 சவரன் தங்கச் செயினைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர் விரிவாக.