Published:Updated:

சென்னை: `படிப்பு பிசிஏ; பகுதி நேர வேலை' - கஞ்சா வழக்கில் சிக்கிய உணவு டெலிவரி உமன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கஞ்சா வழக்கில் சிக்கிய வனிதா
கஞ்சா வழக்கில் சிக்கிய வனிதா

சென்னையில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்வதைப் போல கஞ்சா பார்சலுடன் சென்ற பட்டதாரி பெண்ணை கிண்டி போலீஸார் கைது செய்தனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அதனால் போதைக்கு அடிமையானவர்கள் கூடுதல் விலை கொடுத்து மதுபானங்களை வாங்கி வருகின்றனர். அதன்காரணமாக கள்ளச் சந்தையில் மதுபானங்கள் விற்பனை ரகசியமாக நடந்துவருகிறது. அதோடு மாற்று போதையைத் தேடி சிலர் செல்லும் அவலமும் உள்ளது. சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் கஞ்சா, மாவா விற்பனை இருமடங்காக அதிகரித்துள்ளது.

கஞ்சா
கஞ்சா
Representational Image

கஞ்சா விற்பனையைத் தடுக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் போலீஸார் கஞ்சா, மாவா, கள்ளச்சந்தையில் மதுபானம் ஆகியவற்றை விற்கும் கும்பல் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதனால் சென்னையில் தினந்தோறும் கிலோ கணக்கில் கஞ்சா மற்றும் மதுபானங்களையும் போலீஸார் பறிமுதல் செய்வதோடு அதை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

போலீஸாரிடம் சிக்காமலிருக்க கஞ்சா விற்கும் புதுப் புது டெக்னிக்கை பின்பற்றி வருகின்றனர். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என்பதால் ஆங்காங்கே போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதனால் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க உணவு டெலிவரி செய்யும் பேக்கில் வைத்து கஞ்சா விற்பனை சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் சர்வசாதாரணமாக நடந்துவருகிறது. சென்னை கண்ணகி நகர் பகுதியில் உணவு டெலிவரி செய்வது போல கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை கண்ணகிநகர் போலீஸார் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஆரம்பத்தில் கைது செய்தனர்.

வனிதா மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா
வனிதா மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

அதே ஸ்டைலில் சென்னையில் கஞ்சா விற்றதாக கிண்டி போலீஸார் இளம்பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், பைக் ஆகியவற்றை கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு பறிமுதல் செய்துள்ளார்.

இதுகுறித்து கிண்டி போலீஸார் கூறுகையில், ``கிண்டி சுற்றுவட்டார பகுதியில் இளம்பெண் ஒருவர் ஆன்லைன் உணவு டெலிவரி செய்வது போல கஞ்சா விற்பதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பெண் குறித்த விவரங்களை சேகரித்தோம். விசாரணையில் அவரின் பெயர் வனிதா (32), மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வனிதா, பிசிஏ படித்து வருகிறார். மேலும், பகுதி நேரமாக உணவு டெலிவரி மற்றும் கால்டாக்ஸி டிரைவராகவும் பணியாற்றி வருகிறார். ஊரடங்கு என்பதால் கால்டாக்ஸி டிரைவர் வேலை கிடைக்கவில்லை. அதனால் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் பிரபலமான நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். வனிதாவுக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்துவருகிறார்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா
`டெலிவரி பாய், கஞ்சா விற்றது ஏன்?' -டோர் டெலிவரி செய்தபோது சிக்கிய பின்னணி

சில மாதங்களுக்கு முன் வனிதா ஓட்டிய கால்டாக்ஸியில் பெண் ஒருவர் பயணித்துள்ளார். அப்போது இருவரும் பேசி கொண்டிருந்தபோது அந்தப் பெண், வனிதாவிடம் ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய். நான் சொல்வதைக் கேட்டால் சீக்கிரத்திலேயே பணம் சம்பாதித்துவிடலாம் என்று கூறியுள்ளார். அது எப்படி என்று வனிதா கேட்க, நான் கொடுக்கும் பார்சலை குறிப்பிட்ட முகவரியில் டெலிவரி செய்தால் போதும் என்று தெரிவித்துள்ளார். பின்னர் அது என்ன பார்சல் என்று வனிதா கேட்டபோது கஞ்சா என்று கூறியுள்ளார் அந்தப் பெண்.

அதற்கு சம்மதித்த வனிதா, கஞ்சா பார்சலை அந்தப் பெண், சொல்லும் இடங்களுக்கு உணவு டெலிவரி செய்யும் பேக்கில் வைத்து கொடுத்துவந்துள்ளார். அதில் வனிதாவுக்கு வழக்கத்தைவிட நல்ல வருமானமும் கிடைத்துள்ளது. இந்தநிலையில் நேற்று கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கஞ்சா பார்சலை பெற்ற வனிதா, அதை உணவு டெலிவரி பேக்கில் வைத்து கிண்டியை நோக்கி பைக்கில் செல்லும் தகவல் எங்களுக்கு கிடைத்தது.

பறிமுதல் செய்யப்பட்ட பைக்
பறிமுதல் செய்யப்பட்ட பைக்

உடனடியாக போலீஸ் டீம் சின்னமலை பகுதியில் வனிதாவை மடக்கி சோதனை செய்தது. அப்போது அவரின் பேக்கில் சுமார் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வனிதாவை கைது செய்தோம். வனிதாவுக்கு கஞ்சா கொடுத்து அனுப்பிய பெண் குறித்து விசாரித்து வருகிறோம். வனிதாவின் செல்போனில் கஞ்சா பொட்டலங்கள் யாருக்கெல்லாம் டெலிவரி செய்ய வேண்டும் என்ற விவரமும் உள்ளது" என்றனர்.

ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பெண் ஒருவர், கஞ்சா வழக்கில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு