Published:Updated:

சென்னை: சிறார் வன்கொடுமை... 14 வயது சிறுமியைத் தாயாக்கிய இளைஞர்; போக்சோவில் கைதுசெய்த போலீஸ்!

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

சென்னையில் சிறுமியுடன் குடும்பம் நடத்திய கறிக்கடையில் வேலை செய்த இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை மாதவரம் காவல் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியரின் 14 வயது சிறுமியை, 4.5.2020-ம் தேதி முதல் காணவில்லை. அதனால் சிறுமியின் அம்மா, மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தியதில் சிறுமி, வீட்டின் அருகிலுள்ள கறிக்கடைக்கு அடிக்கடி சென்றிருக்கிறார்; அப்போது அங்கு வேலை பார்த்த அரவிந்த கிருஷ்ணா (24) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிந்தது.

குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை
குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை

சிறுமியை அரவிந்த கிருஷ்ணா காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். பின்னர் அவரைத் திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்திருக்கின்றனர். தற்போது சிறுமிக்கு ஒரு மாத கைக்குழந்தை இருப்பது தெரியவந்தது. சிறுமியைத் திருமணம் செய்த அரவிந்த கிருஷ்ணாவைப் பிடித்த போலீஸார் அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் சிறுமி அளித்த தகவலின்படி அரவிந்த கிருஷ்ணா மீது போக்சோ சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார். கைதான அரவிந்த கிருஷ்ணா, பெரம்பூரைச் சேர்ந்தவர். போலீஸார், குழந்தைகள் நல அமைப்பு ஆணையம் இணைந்து 14 வயது சிறுமிக்கும் அவரைத் திருமணம் செய்துகொண்ட அரவிந்த கிருஷ்ணாவுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

குழந்தைத் திருமணம்
குழந்தைத் திருமணம்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``14 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த அரவிந்த கிருஷ்ணா மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சிறுமியைத் திருமணம் செய்த அரவிந்த கிருஷ்ணா, தலைமறைவாகவே வாழ்ந்திருக்கிறார். குழந்தை திருமணத் தடை சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சிறுமிக்குக் கைக்குழந்தை இருப்பதால் அவரை காப்பகம் அல்லது பெற்றோரிடம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கிறோம்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு