சென்னையில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த சில தினங்களாக மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார். அதுகுறித்து மாணவியின் பெற்றோர், அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். மேலும், மாணவியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததும் தொடர்ந்து மகளைக் அவரின் பெற்றோர் கண்காணித்தனர். அப்போது, மாணவிக்கு நேர்ந்த கொடுமைகளை அறிந்து அவர் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அதுதொடர்பாக மாணவியின் பெற்றோர், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதுதொடர்பாக உதவி கமிஷனர் பாலமுருகன் மேற்பார்வையில் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மாணவி படிக்கும் பள்ளியின் அருகில் பானிபுரி கடை ஒன்று உள்ளது. பள்ளி முடிந்ததும் அங்கு பானிபுரி வாங்கிச் சாப்பிடுவதை அந்த மாணவி வழக்கமாக வைத்திருந்திருக்கறார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருக்கும் பல் மருத்துவக் கல்லூரி மாணவன் வசந்தகிரிஷ் (20) என்பவரும் பானிபுரி சாப்பிட வருவதுண்டு. அதனால் மாணவிக்கும் மாணவன் வசந்தகிரிஷிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து மாணவன் வசந்தகிரிஷ், தன்னுடைய வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வசந்தகிரிஷ், மாணவிக்கு போதைப் பொருளைக் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு அடிக்கடி வசந்தகிரிஷின் வீட்டுக்கு மாணவி சென்றிருக்கிறார். போதை மயக்கத்தில் மாணவியை வசந்தகிரிஷ் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் போதைப் பொருள் கேட்டு மாணவி, மாணவன் வசந்தகிரிஷிடம் அடம் பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.

அதை தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட வசந்தகிரிஷ், தன்னுடைய நண்பர்களான சினிமா துணை நடிகர் சதீஷ்குமார் (22), தனியார் கல்லூரி பகுதி நேர உதவிப் பேராசிரியர் பிரசன்னா (32), இன்னொரு நண்பர் விஷால் ஆகியோருக்கு மாணவியை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். போதை மயக்கத்தைப் பயன்படுத்தி வசந்தகிரிஷின் நண்பர்களும் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளனர். அதை தங்களின் செல்போன்களில் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளனர். இது தொடர்கதையாகியுள்ளது. அதனால் மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகே இந்தத் தகவல் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. மாணவி தரப்பில் புகாரளித்த சில மணி நேரத்திலேயே சம்பந்தப்பட்ட 4 பேரையும் கைது செய்து, செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளோம். மாணவிக்கு கவுன்சலிங், மருத்துவப் பரிசோதனை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட 4 பேர் மீதும் போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளோம். விசாரணைக்குப்பிறகு 4 பேரையும் சிறையில் அடைக்கவுள்ளோம்" என்றனர்.