Published:Updated:

`காட்டிக்கொடுத்த காற்றாடிகள்!' - ஊரடங்கில் போலீஸிடம் சிக்கிய சென்னை சிறுவர்கள் #Lockdown

பறிமுதல் செய்த காற்றாடி
பறிமுதல் செய்த காற்றாடி

சென்னையில் ஊரடங்கில் வீட்டுக்குள் இருக்க முடியாத சிறுவர்கள், இளைஞர்கள் மொட்டை மாடியில் நின்று காற்றாடிகளைப் பறக்க விட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து காற்றாடிகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய பொருள்களை வாங்க மட்டும் மக்கள் வெளியில் வர அனுமதியளிக்கப் பட்டுள்ளது. ஆனால், தேவையில்லாமல் வாகனங்களில் ஊரைச் சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மாஞ்சா நூலில் சிக்கி குழந்தை இறந்தது எப்படி? - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி
காற்றாடி
காற்றாடி
ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்த சிறுவர்கள், இளைஞர்கள் காற்றாடிகளைப் பறக்க விட்டுள்ளனர். அவர்களைப் பிடித்து மாஞ்சா நூல், காற்றாடிகளைப் பறிமுதல் செய்துள்ளோம். இவர்களுக்கு காற்றாடிகள், மாஞ்சா நூல்களை விற்பனை செய்தவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்
போலீஸ்

இந்தநிலையில், வீட்டுக்குள் இருக்க முடியாத சிறுவர்கள், மொட்டை மாடியில் நின்று போட்டிபோட்டு மாஞ்சா நூல் மூலம் காற்றாடிகளைப் பறக்க விட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அண்ணாசாலை மசூதி அருகே தனியார் டிவி சேனல் ஊழியர் புவனேஷ், பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது காற்றாடிகளைப் பறக்க விடப் பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல், புவனேஷின் கழுத்துப்பகுதியில் சிக்கி அறுத்தது. அதனால் நிலைதடுமாறி அவர் நடுரோட்டில் விழுந்தார்.

அவரின் கழுத்து அறுபட்டு ரத்தம் கொட்டியது. அவ்வழியாகச் சென்றவர்கள் புவனேஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரின் கழுத்துப் பகுதியில் 14 தையல்கள் போடப்பட்டன. இதையடுத்து சென்னையில் தடையை மீறி மாஞ்சா நூல் மூலம் காற்றாடிகளைப் பறக்க விட்டவர்களை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்தனர். சைதாப்பேட்டை பகுதியில் காற்றாடிகள் பறப்பதை போலீஸார் பார்த்தனர்.

காற்றாடிகள்
காற்றாடிகள்
Vikatan

உடனடியாக போலீஸ் டீம், காற்றாடிகள் பறக்கும் இடங்களுக்குச் சென்றனர். அப்போது சைதாப்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள் போட்டிபோட்டு காற்றாடிகளைப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தனர். மொட்டை மாடியில் நின்ற அவர்களை போலீஸார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அவர்களிடமிருந்து காற்றாடிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

குமரன் நகர், திருவல்லிக்கேணி பகுதியிலும் காற்றாடிகள் பறக்கும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் மாஞ்சா நூல் மூலம் காற்றாடிகளைப் பறக்க விட்டவர்களைப் பிடித்தனர். சைதாப்பேட்டை பகுதியில் சிறுவர்கள், இளைஞர்கள் என 6 பேர் சிக்கினர். குமரன்நகர், திருவல்லிக்கேணி பகுதியில் 5 பேர் சிக்கினர். அவர்களைக் கைது செய்த போலீஸார், இனிமேல் மாஞ்சா நூல் மூலம் காற்றாடிகளைப் பறக்கவிடக் கூடாது என எச்சரித்தனர்.

மாஞ்சா நூல்
மாஞ்சா நூல்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னையில் காற்றாடிகளைப் பறக்க விட பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதனால் மாஞ்சா நூல் மற்றும் காற்றாடிகளைப் பறக்க விட தடை உள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்த சிறுவர்கள், இளைஞர்கள் காற்றாடிகளைப் பறக்க விட்டுள்ளனர். அவர்களைப் பிடித்து மாஞ்சா நூல், காற்றாடிகளைப் பறிமுதல் செய்துள்ளோம். இவர்களுக்கு காற்றாடிகள், மாஞ்சா நூல்களை விற்பனை செய்தவர்கள் குறித்து விசாரித்துவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு