Published:Updated:

சென்னை: தவறவிட்ட`வைஃபை' ஏடிஎம் கார்டு; பணத்தை இழந்த இளைஞர்! - பயன்படுத்தியவர் சிக்கியது எப்படி?

ஏடிஎம்  கார்டு மோசடி
ஏடிஎம் கார்டு மோசடி

ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை எடுக்காமல் மறந்து சென்ற இளைஞரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணத்தை எடுத்தவரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை கோயம்பேடு ,சின்மயா நகரைச் சேர்ந்தவர் மனோகர் (32). இவர் அண்ணநகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் ``நான் சில தினங்களுக்கு முன் சின்மயா நகரிலுள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்று பணம் எடுத்தேன். அதன் பிறகு ஏடிஎம் இயந்திரத்திலிருந்து கார்டை எடுக்காமல் மறந்து வந்துவிட்டேன். பிறகு சென்று பார்த்த போது கார்டு அங்கு இல்லை. இந்தநிலையில், என்னுடைய ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 25,000 ரூபாய் வரை எடுக்கப்பட்டதாக எனக்கு எஸ்.எம்.எஸ் வந்தது. எனவே, என்னுடைய ஏடிஎம் கார்டை பயன்படுத்துபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் அண்ணநகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் சம்பவம் நடந்த ஏடிஎம் மையத்துக்குச் சென்று சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

ஏடிஎம் கார்டு
ஏடிஎம் கார்டு

மேலும் அந்த ஏடிஎம் கார்டு எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்ற விவரங்களையும் சேகரித்தனர். அப்போது கீழ்ப்பாக்கத்திலுள்ள பெட்ரோல் பங்க்கில் ஏடிஎம் கார்டு பயன்படுத்தப்பட்ட தகவல் போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்குக்கு போலீஸார் சென்று ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது இளைஞர் ஒருவர் பெட்ரோல் போட்டுவிட்டு வைஃபை வசதியுள்ள ஏடிஎம் கார்டை பயன்படுத்திய தகவலை ஊழியர்கள் தெரிவித்தனர். பெட்ரோல் பங்க்கிலுள்ள சிசிடிவி கேமரா மூலம் சம்பந்தப்பட்ட இளைஞர், ஒட்டி வந்த வாகனத்தின் பதிவு நம்பரை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ஏடிஎம் கார்டை பயன்படுத்தியது கரூரைச் சேர்ந்த மணிகண்டன் (39) எனத் தெரியவந்தது. அவர் புரசைவாக்கத்திலுள்ள விடுதியில் தங்கியிருப்பதும் தெரிந்தது.

அங்கு சென்ற போலீஸார் மணிகண்டனைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சின்மயா நகரிலுள்ள ஏடிஎம் இயந்திரத்திலிருந்த கார்டை எடுத்துப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார். சௌகார்பேட்டையிலுள்ள நகைபட்டறையில் வேலை பார்க்கும் மணிகண்டனுக்கு கொரோனா ஊரடங்கில் போதிய வருமானம் இல்லை. அதனால், ஏடிஎம் இயந்திரங்களில் கார்டை மறந்துவிட்டுச் செல்லும் கார்டுகளைச் சேகரிக்கும் மணிகண்டன், அதில் wifi வசதியுள்ள கார்டைப் பயன்படுத்திவந்தது விசாரணையில் தெரியவந்தது.

சென்னை: `ஏடிஎம் கொள்ளைக் கும்பலின் தலைவன் யார்?!’ - நடித்துக் காட்டியதை வீடியோ எடுத்த போலீஸ்
கைது
கைது

இதையடுத்து மனோகரின் ஏடிஎம் கார்டை மணிகண்டனிடமிருந்து பறிமுதல் செய்த போலீஸார் அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். wifi வசதியுள்ள ஏடிஎம் கார்டுகளுக்கு ரகசிய நம்பர் தேவையில்லை. ஸ்வைப்பில் இயந்திரத்தின் அருகே wifi கார்டை வைத்தால் போதும். எனவே wifi வசதியுள்ள கார்டுகளைத் தவறவிட்டால் உடனடியாக அதைச் சம்பந்தப்பட்ட வங்கி மூலம் பிளாக் செய்ய வேண்டும் என்று சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு