Published:Updated:

சென்னை: செயின் பறிப்பு... போராடிய ஐடி நிறுவனப் பெண் ஊழியர்! - வீட்டை மாற்றியும் சிக்கிய திருடன்

ஐடி நிறுவன ஊழியரிடம் செயினைப் பறித்த  ஜெய்சன்
ஐடி நிறுவன ஊழியரிடம் செயினைப் பறித்த ஜெய்சன்

சென்னையில் ஐடி நிறுவனப் பெண் ஊழியரிடம் தங்க செயினைப் பறிக்க முயன்ற திருடனுடன் அவர் தைரியமாகப் போராடியிருக்கிறார்.

சென்னை, சோழிங்கநல்லூர் வ.உ.சி தெருவைத் சேர்ந்தவர் ரத்தினவேலு. இவரின் மகள் சுந்தரி (22). இவர், கடந்த 31.8.2020-ல் வீட்டின் அருகேயுள்ள ஏடிஎம்-முக்குச் சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது சுந்தரியைப் பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்மநபர் ஒருவர், அவரின் கழுத்தில் கிடந்த செயினைப் பறிக்க முயன்றார். உடனே சுந்தரி, சுதாரித்துக்கொண்டு வழிப்பறித் திருடனுடன் போராடினார். `ஹெல்ப், ஹெல்ப்...’ என்றும் `திருடன்... திருடன்...’ என்றும் சுந்தரி சத்தம் போட்டார். ஆனால், யாரும் உதவிக்கு வரவில்லை.

ஜெய்சன்
ஜெய்சன்

அப்போது செயின் அறுந்தது. அதில் ஒரு பகுதி திருடனின் கையிலும் இன்னொரு பகுதி சுந்தரியின் கையிலும் சிக்கிக்கொண்டது. `கிடைத்தவரை லாபம்’ என்று கருதிய திருடன், பைக்கில் மின்னல் வேகத்தில் எஸ்கேப்பாகிவிட்டார். செயின் பறிபோனதும் சுந்தரி, கதறி அழுதபடி வீட்டுக்குள் சென்று விவரத்தைக் கூறினார். அதைக் கேட்டு வீட்டிலுள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து சுந்தரி, செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் 31-ம் தேதி புகாரளித்தார். அதன்பேரில் துரைப்பாக்கம் உதவி கமிஷனர் லோகநாதன் தலைமையில் செம்மஞ்சேரி இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தலைமைக் காவலர்கள் திருமுருகன், புஷ்பராஜ், தாமோதரன், முதல்நிலைக் காவலர்கள் வெங்கடேஸ்வரன், கண்ணன், சிங்காரவேல், காவலர் வினோத் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் அந்தப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

ஜெய்சன்
ஜெய்சன்

மேலும், தனிப்படை போலீஸார் சுந்தரியிடமும் விசாரித்தனர். அப்போது அவர் வாகனத்தின் அடையாளத்தையும் திருடன் மாஸ்க் அணிந்திருந்த தகவலையும் தெரிவித்தார். அதனடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். சுந்தரியின் வீட்டின் அருகிலுள்ள பகுதியில் எந்தவித சிசிடிவியிலும் திருடனின் உருவம் பதிவாகவில்லை. அதனால் அவர் சென்ற ஏடிஎம் பகுதியிலுள்ள சிசிடிவி-களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது சுந்தரி கூறிய அடையாளங்களுடன் ஒருவர் பைக்கில் செல்வதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த வீடியோவை சுந்தரியிடம் போலீஸார் காண்பித்தனர். அப்போது அவரும் வீடியோவிலுள்ள நபர்மீது தன்னுடைய சந்தேகத்தைக் கூறினார். வாகனப் பதிவு நம்பர் அடிப்படையில் போலீஸார் விசாரித்தபோது சென்னை செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஜெய்சன் (22) எனத் தெரியவந்தது. அங்கு சென்று விசாரித்தபோது ஜெய்சன், கண்ணகி நகரில் தங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. கண்ணகி நகருக்குச் சென்றபோது அங்கும் ஜெய்சன் இல்லை. ஆனாலும் போலீஸார் விடாமல் விசாரித்து, ஜெய்சன் சைதாப்பேட்டையில் தலைமறைவாக இருக்கும் தகவலைச் சேகரித்தனர். பின்னர் அங்கு சென்று அவரைப் பிடித்தனர்.

செயின்
செயின்

ஜெய்சனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது சுந்தரியிடம் ஜெய்சன் செயின் பறித்தது தெரியவந்தது. சுந்தரியைத் தவிர இன்னும் சிலரிடம் ஜெய்சன் வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவரிடமிருந்த தங்க நகையை போலீஸார் பறிமுதல் செய்தனர். சிறப்பாகச் செயல்பட்ட தனிப்படை போலீஸாருக்கு அடையாறு துணை கமிஷனர் விக்ரமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.

சுந்தரியிடம் கேட்டதற்கு, ``நான் பி.பி.ஏ- படித்துவிட்டு சிறுசேரியிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறேன். சம்பவத்தன்று பிற்பகல் 3 மணியளவில் ஏடிஎம் மையத்துக்கு பேலன்ஸ் மற்றும் சம்பளம் வந்துவிட்டதா என்று செக் செய்யச் சென்றேன். பின்னர் தனியாக அங்கிருந்து நடந்து வீட்டின் வாசலுக்கு வந்தபோதுதான் பைக்கில் வந்த நபர், செயினைப் பறித்தான்.

பைக்கில் செல்லும் ஜெய்சன்
பைக்கில் செல்லும் ஜெய்சன்
``திருடனாக மாறிய முன்னாள் போலீஸ்காரர்; துணிந்து போராடிய பெண்"- மோசடி வழக்கால் வேலை பறிபோனது!

நான் செயினைக் கைகளால் பிடித்துக்கொண்டேன். செயினைப் பிடித்து திருடன் இழுத்ததால் அது அறுந்துவிட்டது. ஒரு பகுதி என்னிடமும், இன்னொரு பகுதி திருடனிடமும் போய்விட்டது. போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததும், அவர்கள் திருடனைப் பிடித்து செயினை மீட்டுக் கொடுத்துவிட்டனர்'' என்றார்.

திருடனுடன் போராடிய சுந்தரிக்குக் கழுத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும், திருடனுடன் தைரியமாகப் போராடிய சுந்தரிக்கு தனிப்படை போலீஸார் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு