Published:Updated:

சென்னை: `பைக் பஞ்சர்; துண்டு சீட்டில் செல்போன் நம்பர்'- ஏமாற்றியவரைக் காட்டிக் கொடுத்த குழந்தை

செல்போன் நம்பரை எழுதிக் கொடுத்த லோகேஷ்
செல்போன் நம்பரை எழுதிக் கொடுத்த லோகேஷ்

தனியார் கம்பெனியில் வேலைப்பார்க்கும் லோகேஷின் பைக், மதுரவாயலில் பஞ்சரானது. அப்போது அவர் சந்தித்த இளம்பெண்ணிடம் செல்போன் நம்பரை கொடுத்து பேச கூறியுள்ளார். பிறகு அவரை ஏமாற்றி கர்ப்பமாக்கிய குற்றத்துக்காக தற்போது சிறைகம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு 7-ம் தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அவரை வீட்டில் உள்ளவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் இளம்பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதைக்கேட்டதும் பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். `என் மகளுக்கு இன்னும் திருமணமாகவில்லை, அவள் கர்ப்பமாகவே இல்லையே' என்று இளம்பெண்ணின் பெற்றோர் கூறினர். மயக்கம் தெளிந்ததும் அந்தப் பெண்ணிடம் மருத்துவமனை ஊழியர்களும் அவரின் பெற்றோரும் விசாரித்தனர். அப்போது அந்தப் பெண் கூறிய தகவலைக் கேட்டு அவரின் குடும்பத்தினருக்கு தலையே சுற்றியது. இதையடுத்து மருத்துவமனையிலிருந்து மதுரவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மதுரவாயல் காவல் நிலையம்
மதுரவாயல் காவல் நிலையம்

இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் பெண்ணிடம் விசாரரித்தனர். அப்போது அவர், ``கடந்த ஓராண்டுக்கு முன் லோகேஷ் என்பவரின் பைக் எங்கள் வீட்டின் முன் பஞ்சரானது. அப்போது, அவர் என்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். உடனே நானும் தண்ணீர் கொடுத்தேன். பஞ்சர் ஒட்டியபிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு செல்வதற்கு முன் துண்டு சீட்டில் அவரின் செல்போன் நம்பரை எழுதி கொடுத்துவிட்டு சென்றார். அவரிடம் ஏன் செல்போன் நம்பரை தருகிறீர்கள் என்று அந்த பேப்பரை அவரின் கண்முன்னாலேயே கிழித்து தூக்கி போட்டுவிட்டேன். 10 நாள்களுக்கு பிறகு லோககேஷ் மீண்டும் அங்கு வந்தார். ஏன் என்னிடம் பேசுவதில்லை என்று கூறினார். அதற்கு நான், ஏன் உங்களிடம் பேச வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், நாம் நண்பர்களாக பழகுவோம் என்று மீண்டும் செல்போன் நம்பரை கொடுத்துவிட்டு சென்றார்

அதன்பிறகு இருவரும் பழகினோம். லோகேஷ், தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறியிருந்தார். திடீரென ஒருநாள் ஐலவ்யூ என்று கூறினார். அதன்பிறகு நானும் அவரை காதலித்தேன். இருவரும் பல இடங்களுக்கு பைக்கில் சென்றோம். தொடர்ந்து நாங்கள் இருவரும் நெருங்கி பழகியதால் நான் கர்ப்பம் அடைந்தேன். அந்தத் தகவலை சந்தோஷமாக லோகேஷிடம் கூறி என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினேன். அதற்கு அவர், கர்ப்பத்தை கலைத்துவிடும்படி கூறினார். நான் முடியாது என்று தெரிவித்தேன். அப்போதுதான் அவர், தனக்கு திருமணமாகிய தகவலைத் தெரிவித்தார். அதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

கர்ப்பம்
கர்ப்பம்
மாதிரிப் படம்

இதையடுத்து அவர் என்னைச் சந்திப்பதை தவிர்த்தார். என்னுடைய செல்போன் நம்பரை பிளாக் செய்து விட்டார். அதனால் லோகேஷிடன் என்னால் பேச முடியவில்லை. அவரின் முகவரியும் தெரியவில்லை. நான் கர்ப்பம் அடைந்த தகவலை வீட்டிலும் சொல்லவில்லை. எனக்கு வயிற்றில் நீர்கட்டி இருந்தது. அதனால் அதற்கு சிகிச்சை பெற செல்வதாகக் கூறி தனியாகவே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துவந்தேன். நீர் கட்டியால் வயிறு பெரியதாக இருப்பதாகக் கூறி வீட்டில் உள்ளவர்களை சமாளித்தேன்" என்று கூறினார்.

இளம்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை ஏமாற்றி கர்ப்பமாக்கிய லோகேஷை மதுரவாயல் போலீஸார் தேடினர். ஆனால் இளம்பெண்ணிடம் லோகேஷ் மற்றும் அவரின் செல்போன் நம்பரைத் தவிர வேறு எந்ததகவலும் இல்லை. அதனால் லோகேஷ் குறித்த விவரங்கள் கிடைப்பது போலீஸாருக்கு சிரமமாக இருந்தது. இருப்பினும் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், செல்போன் நம்பர் மூலம் லோகேஷின் முகவரியைக் கண்டுபிடித்தார். அதைத் தொடர்ந்து அவரின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் உனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற தகவலைத் தெரிவித்தனர். அதற்கு லோகேஷ், எனக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை சார் என்று தெரிவித்தார். அதைக்கேட்ட போலீஸார் நீ திருமணம் செய்யாமல் ஏமாற்றிய மதுரவாயல் பெண்ணுக்குதான் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் குழந்தை பிறந்திருக்கிறது என்று தெரிவித்தனர். அதைக்கேட்ட லோகேஷின் முகம் மாறியது. அவரின் சுயரூபம் லோகேஷின் மனைவிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் தெரிந்தது. தொடர்ந்து காவல் நிலையத்தில் அழைத்துவரப்பட்ட லோகேஷிடம் போலீஸார் விசாரித்தபோது குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது
கைது

இதுகுறித்து மதுரவாயல் போலீஸார் கூறுகையில், ``லோகேஷால் ஏமாற்றப்பட்ட பெண், 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவரின் குடும்பம் ஏழ்மையானது. வீட்டுக்கு ஒரே மகள். திருவள்ளூரில் செல்போன் கடை ஒன்றில் வேலைப்பார்த்து வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக அவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். லோகேஷால் ஏமாற்றப்பட்ட அந்தப் பெண், தான் கர்ப்பம் அடைந்த தகவலை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லாமல் மறைத்து விட்டார். குழந்தை பிறந்தபிறகே லோகேஷ் குறித்த விவரம் தெரியவந்துள்ளது. அதனால் லோகேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.

லோகேஷிடம் போலீஸார் விசாரித்தபோது, `மதுரவாயலில் என்னுடைய பைக் பஞ்சரானதும் அங்கு காத்திருந்தேன். அப்போதுதான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். பார்த்ததும் அவளை எனக்குப்பிடித்துவிட்டது. அவளிடம் பேச வேண்டும் என்றுதான் குடிக்க தண்ணீர் கேட்டேன். அதன்பிறகு அவளை என் வலையில் விழ வைத்தேன்' என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு