Election bannerElection banner
Published:Updated:

சென்னை: இன்டர்வியூவுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி! - 28 செல்போன்களுடன் சிக்கிய இளைஞர்

இளைஞர் அந்தோணி
இளைஞர் அந்தோணி

பிரபலமான வங்கியில் வேலை என இன்டர்வியூக்குச் சென்ற பெண்ணிடம் அநாகரிகமாகக் கேள்விகளைக் கேட்ட இளைஞர், 28 செல்போன்களுடன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை, தரமணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்படும் பிரபல வங்கியின் மேலாளர் ஒருவர், அடையாறு துணை கமிஷனர் விக்ரமனைச் சந்தித்து புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் `தங்களுடைய வங்கியின் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தி, மோசடி செய்ய முயல்வதாக இ-மெயில் மூலம் பெண் ஒருவர் தெரிவித்திருக்கிறார். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் விசாரணை நடத்தும்படி துணை கமிஷனர் விக்ரமன் உத்தரவிட்டார். தரமணி உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் சாலை ராம் சக்திவேல், அடையாறு காவல் சரக சைபர் க்ரைம் பிரிவின் எஸ்.ஐ ஜெயபாலாஜி, ஸ்பெஷல் டீம் தலைமை காவலர்கள் சதீஷ்குமார், ஜானி விஜய், முகிலன், கிரி, சண்முகானந்தம், முதல்நிலைக் காவலர் லோகநாதன் ஆகியோர் புகார் தொடர்பாக விசாரித்தனர்.

கைதான அந்தோணியுடன் போலீஸ் டீம்
கைதான அந்தோணியுடன் போலீஸ் டீம்

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``குறிப்பிட்ட வங்கியில் அந்தப் பெண் வேலைக்காக விண்ணப்பித்திருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணுக்கு நேர்காணலுக்கு வரும்படி அழைப்பு வந்திருக்கிறது. அதன்படி குறிப்பிட்ட முகவரிக்கு அந்தப் பெண் சென்றிருக்கிறார். அங்கிருந்தவர் அந்தப் பெண்ணிடம் வங்கி வேலை சம்பந்தப்பட்ட தகவல்களைத் தவிர்த்து உடை, உருவம் பற்றி அநாகரிகமாகக் கேள்விகளை இன்டர்வியூவில் கேட்டிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து வெளியில் வந்திருக்கிறார். பின்னர் அவர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு இமெயில் மூலம் புகாரளித்திருக்கிறார்.

அவர் அளித்த தகவலின்படி விசாரணை நடத்தினோம். விசாரணையில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்தது ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த அந்தோணி (39) என்று தெரியவந்தது. இவர் மீது கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பாலியல் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்கில் தண்டனை பெற்ற அந்தோணி, மேல்முறையீட்டில் விடுதலையாகியிருக்கிறார்.

சென்னை: வங்கி மேலாளர் என்று பேசிய மர்ம நபர்! - கிரெடிட் கார்டு விவரங்களைப் பெற்று ரூ.87,000 மோசடி
மோசடி
மோசடி

அதன் பிறகு அந்தோணி, இன்டர்வியூவுக்கு விண்ணப்பிப்பவர்களின் விவரங்களைச் சேகரித்து அவர்களிடம் போனில் பேசுவார். அப்போது பிரபல வங்கி, ஐடி கம்பெனிகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். அவரிடமிருந்து 28 செல்போன்கள், மூன்று லேப்டாப்கள், 10 வாக்கி டாக்கிகள், ஏராளமான கிரெடிட் கார்டுகள், கார், 42 சிம்கார்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். அந்தோணியால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைச் சேகரித்துவருகிறோம்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு