Election bannerElection banner
Published:Updated:

சென்னை:100 கிரெடிட் கார்டுகள்; 28 செல்போன்கள்! -உலக வங்கி ஆசைகாட்டிய ஆண்டனியின் அதிர்ச்சிப் பின்னணி

ஆண்டனி
ஆண்டனி

உலக வங்கியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண்ணிடம் அநாகரிகமாகப் பேசிய பட்டதாரி ஆண்டனியை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

``Hello... Antony here... Is this Priya?" என்று ஹைஸ்டைல் ஆங்கிலத்தில் பேசும் ஆண்டனியால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியல் பெரிது. அப்படி, அவனால் பாதிக்கப்பட்ட ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தரமணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரால்... இப்போது ஆண்டனி புழல் சிறையின் கம்பிகளை தரிசித்துக்கொண்டிருக்கிறான்.

189 உறுப்பு நாடுகள், 170-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள், 130-க்கும் மேற்பட்ட இடங்களில் அலுவலகங்கள் என தனித்துவமான, உலகளாவிய கூட்டமைப்பான உலக வங்கியின் (The World Bank) தரமணி கிளையில் வேலைக்காக விண்ணப்பித்திருந்த இளம்பெண் ரம்யாவுக்கு பிப்ரவரி மாதம் அமெண்டா என்பவர் போனில் அழைத்திருக்கிறார். உலக வங்கி வேலைக்கான விஷயமாக தி.நகரிலுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு முதல் சுற்று நேர்காணலுக்கு அழைத்திருக்கிறார் அமெண்டா.

``கங்கிராஜுலேஷன்ஸ். முதல் சுற்று நேர்காணலுக்கு தேர்வாகியிருக்கிறீர்கள். வங்கியின் சீனியர் ஆபீஸர் உங்களை இன்டர்வியூ செய்வார். வெஸ்டர்ன் டிரெஸ் கோடில் வர வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். வங்கியில் வேலை, கைநிறைய சம்பளம் என்ற கனவோடு ரம்யா சென்றார். அங்கு ஏ.சி அறையில் ஆபீஸர்போல தோரணையாக அமர்ந்திருந்த ஆண்டனி, தன்னுடைய உதவியாளர் மூலம் ரம்யாவை உள்ளே அழைத்தான். ரம்யாவை உட்காரச் சொல்லிவிட்டு அவர் நீட்டிய ஃபைல்களை பார்த்தபடி இன்டர்வியூக்கான கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான்.

ஆண்டனி
ஆண்டனி

சந்தேகத்துக்கே இடமில்லாத அவனது தோரணையும், ஆங்கில உச்சரிப்பும் ரம்யாவை யோசிக்கவே விடவில்லை. ஆண்டனியின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டே வந்தார். குடும்பம் சம்பந்தமாக சில கேள்விகளையும் கேட்டிருக்கிறான். பொதுவாக பெரிய நிறுவனங்களில் குடும்பம் சம்பந்தமான பர்சனல் கேள்விகளைத் தவிர்த்துவிடுவார்கள். இதையறிந்திருந்தாலும், சமாளித்து பதில் சொன்ன ரம்யா, இன்டர்வியூவை முடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

அடுத்த சில நாள்களில் ஆண்டனியே ரம்யாவின் எண்ணுக்கு அழைக்கிறான். ``முதற்கட்ட இன்டர்வியூவில் செலக்ட் ஆகிவிட்டதால், இனி நானே நேரடியாகத் தொடர்புகொள்வேன்” என்று சொன்னவன், அடுத்தகட்ட இன்டர்வியூவுக்கு தேதியையும் சொன்னான். ``அதே தி.நகர் நட்சத்திர ஹோட்டல்தான். இந்த முறை இன்னும் மாடர்ன் டிரெஸ்ஸில் நீங்க இன்டர்வியூவுக்கு வரணும்” என்றிருக்கிறான்.

இந்தமுறை இன்னும் அகலமான புன்னகையுடன் வரவேற்ற ஆண்டனி, வேலை தொடர்பாக இரண்டொரு வார்த்தை மட்டும் பேசிவிட்டு ரம்யாவின் உடை, அங்க அளவுகள் ஆகியவற்றைப் பற்றிப் பேசியிருக்கிறான். ``இந்த பேங்க் வேலையெல்லாம் எதுக்கு... நீங்க மாடலிங்கே பண்லாமே” என்றும் பேசியிருக்கிறான். தைரியமான பெண்ணான ரம்யா சமாளித்துப் பேசி வெளியே வந்துவிட்டார்.

இரண்டு முறை இன்டர்வியூ நடந்தபோதும் ஆண்டனியின் அலுவலகத்தில் ஏழெட்டுப் பெண் உதவியாளர்கள், டிப்டாப் உடையில் ஆண்டனி, காவலுக்கு பவுன்சர்கள் என்றிருந்ததால் சந்தேகம்கொள்ளாத ரம்யா, இரண்டாவது சுற்று இன்டர்வியூவில் ஆண்டனி பேசிய தொனியிலும், நடந்துகொண்டவிதத்திலும் மனதுக்குள் நெருடலாக உணர்ந்தார். எனவே, அடுத்த நாள், ஆண்டனியின் எண்ணை ட்ரூகாலரில் சோதித்திருக்கிறார். அது ஒரு டிராவல்ஸின் பெயரைக் காட்டியிருக்கிறச்து. அபீஷியலாக இதை டீல் செயய முடிவு செய்து, சென்னை தரமணியிலிருக்கும் உலக வங்கிக்கு அழைத்து விசாரித்திருக்கிறார். எதுவும் இன்டர்வியூ நடக்கவில்லை என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு, நடந்தவற்றையும், ஆண்டனி அநாகரிகமாகப் பேசியவற்றையும் குறிப்பிட்டு வங்கியின் பெயரைச் சொல்லி இப்படி ஒரு மோசடி நடப்பதை வங்கி மேலாளருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த வங்கியின் மேலாளர், ஆண்டனி குறித்து தரமணி காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகாரளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் ரவி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சாலை ராம் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரித்து, கடந்த வாரத்தில் அவனைக் கைதுசெய்திருக்கிறார்கள்.

மோசடி
மோசடி

இது குறித்து காவல்துறை உயரதிகாரியிடம் பேசினோம். ``ஆண்டனியின் செல்போன் நம்பரைக்கொண்டு சைபர் க்ரைம் போலீஸார் அவன் இருப்பிடத்தைக் கண்டறிந்தனர். சொந்த ஊர் திருச்சி. சென்னையிலுள்ள கல்லூரியில் பி.எஸ்சி படித்திருக்கிறான். 39 வயதாகும் ஆண்டனிக்கு திருமணமாகவில்லை. ஆன்லைனில் வேலைக்காக விண்ணப்பிப்பவர்களில் பெண்களின் விவரங்களை ஹேக் செய்து சேகரித்து, பிறகு அவர்களுக்கு போன் செய்து, இன்டர்வியூ கார்டை அனுப்பி தி.நகரிலுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைப்பான். பின்னர் அந்தப் பெண்களிடம் அன்பாகப் பேசி காதல்வலை விரிப்பான். அவனை முழுமையாக நம்பும் பெண்களிடமிருந்து பேசிப் பேசி பணத்தைக் கறந்துவிட்டு தலைமறைவாகிவிடுவான்.

தி.நகர் ஸ்டார் ஹோட்டலில்தான் ஆபீஸ். இதுபோல இன்டர்வியூ நடக்கும் நாள்களில், வி.ஐ.பி எஸ்கார்ட்போல இரண்டு பவுன்சர்கள் உடனிருப்பார்கள். ஏழெட்டு பெண் உதவியாளர்களை நாள் சம்பளத்துக்கு என்று பேசி இருத்திக்கொள்வான். அவர்களில் ஒரு பெண் மட்டும் இவனுடைய காதலி. ஏற்கெனவே ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டனியிடம் பணிபுரிந்த பெண்ணொருவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகாரளித்திருந்தார். அதில் கைதாகி, மேல் முறையீடு காரணமாக அந்த வழக்கிலிருந்து அவன் விடுதலையாகியிருக்கிறான்.

எப்ஃ.ஐ.ஆர்
எப்ஃ.ஐ.ஆர்

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியுமென்பதால் வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த பெண்களையும் ஏமாற்றியிருக்கிறான். இந்த வேலைக்காகவே 28 செல்போன்கள், 42 சிம்கார்டுகள், மூன்று லேப்டாப்கள், நான்கு டேப்லெட்டுகள், 10 வாக்கி டாக்கிகள், 100 கிரெடிட் கார்டுகள், சொகுசு கார் ஆகியவற்றை ஆண்டனி பயன்படுத்திவந்திருக்கிறான்" என்றார்.

``பெண்களின் அழகை முதலில் வர்ணிக்க வேண்டும். அதன் பிறகு அவர்களைப் புகழ்ந்து நாலு வார்த்தை பேசினால் போதும். எப்படிப்பட்ட பெண்ணும் வலையில் வீழ்ந்துவிடுவார்” என்று போலீஸாரிடம் கூறியிருக்கிறான் ஆண்டனி. இவனைப் போன்றவர்களை அடையாளம் கண்டு நீதிக்கு முன் நிறுத்த இன்னும் பல ரம்யாக்கள் முன்வர வேண்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு