Published:Updated:

சென்னை: `செல்போனுக்கு வந்த முகம் சுளிக்கவைக்கும் வீடியோக்கள்!’ - இளைஞரைச் சிக்கவைத்த தாய், மகள்

Representational Image
Representational Image

சென்னையில் 55 வயதாகும் பெண்ணின் செல்போனுக்கு, தொடர்ந்து ஆபாச வீடியோக்கள் வந்தன. அவற்றை அனுப்பியவரை வீட்டுக்கே வரவழைத்து அந்தப் பெண்ணும், அவரின் மகளும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், `எனக்கு 2 மகள்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இளைய மகளுக்கு 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக என் மகள் பிரிந்து என்னுடன் வாழ்ந்துவருகிறார்.

Representational image
Representational image

இந்தநிலையில் ஆகஸ்ட் 4-ம் தேதியிலிருந்து என்னுடைய செல்போன் நம்பருக்கு மர்மநபர் ஒருவர் பேசித் தொல்லை கொடுத்துவருகிறார். மேலும், ஆபாச வீடியோக்கள், படங்களை அனுப்பினார். அதனால் என் மகள் மனமுடைந்தார். என் மகளுக்கு செல்போன் மூலம் தொல்லை கொடுத்த மர்மநபர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்தப் பெண்ணுக்கு வந்த செல்போன் நம்பர்களையும் அவர் காவல்நிலையத்தில் கொடுத்தார்.

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு வழக்கு பதிவு செய்து விசாரித்தார். சப்-இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரனும் மர்மநபர் குறித்த தகவல்களைச் சேகரித்துவந்தார். இந்தநிலையில் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு மர்மநபர் போனில் பேசினார். அப்போது, `நீங்கள் வீட்டுக்கு வாருங்கள். உங்களைச் சந்திக்க வேண்டும்’ என்று கூறி வலைவிரித்திருக்கிறார் அந்தப் பெண். அந்த வலையில் மர்மநபர் சிக்கிக்கொண்டார். அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அந்த மர்மநபர் வந்தார். அப்போது அவரை அக்கம்பக்கத்தினர் உதவியோடு தாயும் மகளும் பிடித்தனர். பின்னர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

சூளைமேடு காவல் நிலையம்
சூளைமேடு காவல் நிலையம்

காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து சூளைமேடு காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது,ம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``புகார் கொடுத்த பெண்ணின் செல்போன் நம்பருக்கு ஆபாச வீடியோ, ஆபாசப் படங்களை அனுப்பியவர் குறித்து காவல் நிலையத்துக்கு புகார் வந்ததும், சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியோடு விசாரணை நடத்திவந்தோம்.

இதற்கிடையில் பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் சிக்கியதும் அவரிடம் விசாரித்தோம். விசாரணையில் அவர் பெயர் விமல்ராஜ் (29) எனத் தெரியவந்தது. திருத்தணி தாலுகா, ஓரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஐடிஐ படித்துவிட்டு ஆன்லைன் டெலிவரிபாயாக வேலை பார்த்துவருகிறார். இவருக்குத் திருமணமாகி குழந்தையும் உள்ளது. தற்போது விமல்ராஜின் மனைவி கர்ப்பிணியாக உள்ளார். இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்னர் விமல்ராஜின் ஃபேஸ்புக் கணக்குக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது.

விமல்ராஜ்
விமல்ராஜ்
சென்னை: `முறிந்த காதல்; வில்லங்க ஃபேஸ்புக் பதிவுகள்!’ - இன்ஜினீயரால் பாதிக்கப்பட்ட 100 பெண்கள்

அந்த மெசேஜ் பெண்ணின் பெயரில் இருந்தது. அதற்கு விமல்ராஜும் பதிலளித்துள்ளார். முகம் பார்க்காமலேயே இருவரும் தங்களின் பர்சனல் தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். பின்னர் அந்தரங்கத் தகவல்களையும் பகிர்ந்துள்ளனர். அப்போது அந்தப் பெண், `ஃபேஸ்புக் மெசஞ்சரில் ஃப்ரீயாகப் பேச முடியவில்லை. அதனால் என்னுடைய செல்போனுக்கு தனிப்பட்ட உங்களின் போட்டோஸ், வீடியோக்களை அனுப்புங்கள்’ என்று கூறி அரும்பாக்கம் பெண்ணின் செல்போன் நம்பரை விமல்ராஜுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

அந்த வீடியோ, போட்டோஸ்களைப் பார்த்த அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். தைரியமாக காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகாரளித்தார். அதோடு ஆபாசத் தகவல்களை அனுப்பிய விமல்ராஜை தாயும் மகளும் சேர்ந்து சென்னைக்கு வரவழைத்து சிக்கவைத்துள்ளனர். விமல்ராஜிடம் விசாரித்தபோது ஆபாசத் தகவல்களை அனுப்பியதை அவர் ஒப்புக் கொண்டார். அவரின் செல்போனிலிருந்து ஆபாசத் தகவல்கள் சென்றதையும் உறுதிப்படுத்தியுள்ளோம்.

செல்போன்
செல்போன்

புகார் கொடுத்த பெண், ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளார். விமல்ராஜுக்கு பெண்ணின் செல்போன் எண்ணை ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் அனுப்பியவர் யார் என்று விசாரித்துவருகிறோம். அது தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். விமல்ராஜின் ஃபேஸ்புக்கில் நட்பாக முதலில் பழகி, அவரைச் சிக்கலில் சிக்க வைத்தவர் யாரென்று விசாரித்துவருகிறோம்’’ என்றனர்.

``அறிமுகம் தெரியாதவர்களிடம் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்ததால், இன்று ஆன்லைன் டெலிவரிபாய் வேலை பார்த்த இளைஞர் சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்’’ என்றார் போலீஸ் உயரதிகாரி ஒருவர்.

அடுத்த கட்டுரைக்கு