Published:Updated:

சென்னை: சிறுமியைத் திருமணம் செய்த இளைஞர்! - போலீஸில் சிக்கியதால் விஷம் குடித்த ஜோடி

 விஷம்
விஷம் ( representational image )

சென்னையில் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறிய இளைஞர், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது போலீஸாருக்கு தெரியாமல் ஒரே நேரத்தில் இருவரும் விஷம் குடித்தனர்.

சென்னை, அம்பத்தூரை அடுத்த காமராஜர்புரம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (20). தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இவருக்கும், திருமுல்லைவாயலைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு வெளியில் சென்ற சிறுமி, பின்னர் வீடு திரும்பவில்லை. அதனால், அவரின் பெற்றோர் சிறுமியைப் பல இடங்களில் தேடினர். பிறகு திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீஸாரும் சிறுமியைத் தேடினர். இந்தநிலையில் சிறுமியை மீட்டுத் தரக்கோரி, அவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.

காதல்
காதல்
Representational Image

இதையடுத்து திருமுல்லைவாயல் போலீஸார் சிறுமி குறித்து விசாரித்தபோது அவர், சீனிவாசனுடன் இருக்கும் தகவல் கிடைத்தது. சிறுமியையும் சீனிவாசனையும் பிடித்த போலீஸார், இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போதுதான் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறிய சீனிவாசன், அவரைத் திருமணம் செய்திருக்கிறார். பின்னர் சிறுமியை அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த தகவல் தெரியவந்தது.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சீனிவாசனை போலீஸார் கைதுசெய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். மேலும், சிறுமியையும் நீதிமன்றத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றிருக்கின்றனர். அப்போது சிறுமியும் சீனிவாசனும் தாங்கள் மறைத்துவைத்திருந்த விஷத்தை போலீஸாருக்கு தெரியாமல் ஒரே நேரத்தில் சாப்பிட்டு மயக்கமடைந்தனர்.

விஷம்
விஷம்
representational image
மயிலாடுதுறை: வீட்டில் இருந்த சிறுமி; சிறார் வதை கொடுமை! - போக்ஸோ சட்டத்தில் வாலிபர் கைது

அதைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இருவரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சீனிவாசனுக்கும் சிறுமிக்கும் எப்படி விஷம் கிடைத்தது என்று, அவர்கள் இருவரையும் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸாரிடம் உயரதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீனிவாசனும் சிறுமியும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த கட்டுரைக்கு