சென்னை: திருமணம் செய்துகொள்வதாகச் சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர்! - போக்சோவில் கைது

ஒரே பகுதி என்பதால் அஜித் என்ற இளைஞருடன் சிறுமிக்குப் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு சிறுமியைத் திருமணம் செய்ய அஜித், தன்னுடைய சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றபோது போலீஸாரிடம் சிக்கிக்கொண்டார்.
சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர், கடந்த 10-ம் தேதி வீட்டைவிட்டு வெளியில் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதனால் அவரின் அம்மா, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சிறுமியைத் தேடிவந்தனர்.

இந்தநிலையில் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அஜித் என்கிற ஆத்தங்கரை அஜித் (22) என்பவரும் திடீரென மாயமானதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸார் அஜித் குறித்து விசாரித்தனர். அஜித், ஆட்டுத்தொட்டியில் வேலை செய்துவருவது தெரியவந்தது. அதனால் அஜித் வேலை பார்க்கும் இடத்தில் போலீஸார் விசாரித்தனர். அப்போது சின்ன வயதிலிருந்தே அஜித் அங்கு வேலை செய்து வருவதும், அவரின் சொந்த ஊர் திண்டிவனம் அருகிலுள்ள மயிலம் என்பதும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அஜித்தின் செல்போன் சிக்னலை போலீஸார் ஆய்வு செய்தனர். அது மயிலம் பகுதியைக் காட்டியது. உடனடியாக போலீஸார் மயிலத்துக்குச் சென்றனர். அங்கிருந்த அஜித்தையும் சிறுமியையும் போலீஸார் அழைத்துக்கொண்டு சென்னை வந்தனர். சிறுமியிடம் போலீஸார் விசாரித்தபோது, அஜித், தன்னை காதலித்ததாகவும் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்றதாகவும் கூறினார்.

இதையடுத்து போலீஸார் அஜித்தைக் கைதுசெய்தனர். கொரோனா பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 16 வயது சிறுமியை அழைத்துச் சென்றதால் அஜித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``ஒரே பகுதி என்பதால் அஜித்துக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் அது காதலாக மலர்ந்திருக்கிறது. அஜித்தை நம்பி சிறுமி வீட்டைவிட்டு வெளியில் சென்றிருக்கிறார். சிறுமிக்கு கவுன்சலிங் அளித்து அவரைப் பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கிறோம்" என்றனர்.