சென்னை கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் குடியிருக்கும் 16 வயது சிறுமி கடந்த 24.11.2021-ம் தேதி பள்ளிக்குச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதனால் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுமியைத் தேடிவந்தனர். சிசிடிவி கேமரா பதிவு, செல்போன் சிக்னல் ஆகியவற்றைக் கொண்டு சிறுமியைத் தேடியபோது அவர் வெளியூரில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார், சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் விசாரித்தபோது ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (22) என்பவர் குறித்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷை போலீஸார் பிடித்து விசாரித்தனர். சிறுமியையும் சந்தோஷையும் போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்தனர். சிறுமியிடம் விசாரித்தபோது அவர், சில மாதங்களுக்கு முன்ப் சந்தோஷ், சிறுமிக்கு முகநூல் மூலம் அறிமுகமான தகவலைத் தெரிவித்தார். மேலும் இருவரும் செல்போனில் பேசியிருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பின்னர் சிறுமியைக் காதலிப்பதாக சந்தோஷ் கூறியிருக்கிறார். இதையடுத்து அவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறிய சந்தோஷ், வெளியூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதன் பிறகு சிறுமியைத் திருமணம் செய்த சந்தோஷ், அவரை சிறார் வதை செய்துள்ளார். சிறுமி அளித்த தகவலின்படி சந்தோஷை போலீஸார் கைது செய்து அவர்மீது போக்சோ உள்ளிட்ட சில சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர். விசாரணைக்குப் பிறகு சந்தோஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமிக்கு கவுன்சலிங், மருத்துவப் பரிசோதனை அளிக்கப்பட்டது.

இன்னொரு சம்பவம்
சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 6 வயது சிறுமியின் குடும்பத்தினர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதில் சிறுமிக்கு திருமங்கலத்தைச் சேர்ந்த குமார் (55) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து குமாரைக் கைதுசெய்தனர். 6 வயது சிறுமியை அழைத்துச் சென்ற குமார், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிறுமி சத்தம் போட்டதால் அவரை வீட்டு வாசலில் விட்டுவிட்டு குமார் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.