Election bannerElection banner
Published:Updated:

சென்னை: டார்கெட் மூதாட்டிகள்! - நூதன முறையில் நகைகளைப் பறிக்கும் இளைஞர் சிக்கியது எப்படி?

மூதாட்டியியிடம் தங்க நகைகள் பறிப்பு
மூதாட்டியியிடம் தங்க நகைகள் பறிப்பு ( representational image )

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மூதாட்டிகளிடம் பேச்சுக் கொடுக்கும் இளைஞர், ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அவர்களை நூதன முறையில் ஏமாற்றி நகைகளைப் பறிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, தாண்டவராயன் தெருவைச் சேர்ந்தவர் வீரசின்னம்மாள் (65). இவர் 15-ம் தேதி மீன் வாங்க தண்டையார்பேட்டை மார்க்கெட்டுக்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், வீரசின்னம்மாளிடம் பேசினார். அப்போது அவர், `நான் உங்கள் மகன் போஸின் நண்பன்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அதை வீரசின்னம்மாளும் நம்பியிருக்கிறார். பின்னர் அந்த இளைஞர், தன்னுடைய மைத்துனருக்கு திருமணம், அதனால் உங்களின் தாலிச் செயினைப்போல புதிதாக ஒரு செயின் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தங்க நகை
தங்க நகை

மகனின் நண்பன் என்று கூறியதால் அந்த இளைஞரிடம், கழுத்தில் அணிந்திருந்த ஏழு சவரன் தாலி செயினை கழற்றிக் காண்பித்திருக்கிறார் வீரசின்னம்மாள். பின்னர் அந்த இளைஞர், வீரசின்னம்மாளிடம் `இதே மாடலை தங்க நகை செய்யும் இடத்தில் காண்பிக்க வேண்டும். அதனால் என்னுடன் வாருங்கள்’ என்று வீரசின்னம்மாளை தன்னுடைய பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறார். நகை செய்யும் இடத்துக்கு அழைத்துச் சென்ற போது, `அங்கு கூட்டமாக இருக்கிறது. கொரோனா என்பதால் நீங்கள் இங்கு காத்திருங்கள், நான் செயினைக் காண்பித்துவிட்டு உடனே வந்துவிடுகிறேன்’ என்று அந்த இளைஞர் கூறியிருக்கிறார். வீரசின்னம்மாளின் தாலி செயினை வாங்கிக்கொண்டு சென்ற அந்த இளைஞர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. அதனால் வீரசின்னம்மாள் அங்கு விசாரித்திருக்கிறார். பின்னர் வீட்டுக்கு வந்து விவரத்தைக் கூறினார்.

சென்னை: `டார்கெட் மூதாட்டிகள்; ஆட்டோவில் கைவரிசை!' - பெண் கொள்ளையர்கள் சிக்கிய பின்னணி

இதையடுத்து நூதன முறையில் ஏழு சவரன் தாலி செயினை பறித்துச் சென்ற இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வீரசின்னம்மாள் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது வீரசின்னம்மாளை இளைஞர் பைக்கில் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்ததது. அந்த இளைஞர் மற்றும் அவர் பயன்படுத்திய பைக் குறித்து போலீஸார் விசாரித்தனர்.

எஃப்.ஐ.ஆர்
எஃப்.ஐ.ஆர்

விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் சிவா என்கிற சிவகுமார் (41). சென்னை கோடம்பாக்கம், பாரதீஸ்வரர் காலனியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து சிவா, போலீஸாரிடம் வீரசின்னம்மாளைப் போலவே இன்னும் இரண்டு மூதாட்டிகளை ஏமாற்றி நகைகளைப் பறித்ததை தெரிவித்தார். இதையடுத்து சிவாவைக் கைதுசெய்த போலீஸார் அவரிடமிருந்து 16.5 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர். சிவா மீது கோடம்பாக்கம், அரும்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், சித்தாலப்பாக்கம், அபிராமபுரம் ஆகிய காவல் நிலையங்களில் மூதாட்டிகளின் கவனத்தை திசைதிருப்பி நகைகளைப் பறித்துச் செல்லும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. விசாரணைக்குப் பிறகு சிவா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``மூதாட்டிகளை மட்டுமே குறிவைத்து அவர்களின் நகைகளை நூதன முறையில் அபகரித்துச் செல்வதை சிவா வழக்கமாக வைத்திருக்கிறார். மக்கள் அதிகமாகக் கூடும் பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகளுக்கு பைக்கில் செல்லும் சிவா, கழுத்தில் நகைகளை அணிந்திருக்கும் மூதாட்டிகளை முதலில் நோட்டமிடுவார். பின்னர் அவர்களைப் பின்தொடர்ந்துச் செல்வார். அப்போது, மூதாட்டிகள் மற்றவர்களிடம் பேசும்போது அவர்களின் குடும்பப் பின்னணியை அறிந்துகொள்வார். அதன் பிறகு அந்த மூதாட்டியைத் தனியாகச் சந்தித்து அன்பாகப் பேசுவார். அப்போது மூதாட்டியின் உடல்நலம் குறித்து விசாரிப்பார்.

கைது
கைது
Representational Image

அதன் பிறகு மூதாட்டியிடம், குடும்பத்தினரின் பெயரைச் சொல்லி உரிமையுடன் பேசுவார். அதன் பிறகு ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அவர்களை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் செல்வார். அங்கு மூதாட்டியிடமிருந்து நகைகளை வாங்கிக்கொண்டு தப்பிச் சென்றுவிடுவார். சிவாவை நம்பி நகைகளைக் கொடுக்கும் மூதாட்டிகளைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு சிவா தலைமறைவாகிவிடுவார்" என்றனர்.

மூதாட்டிகளிடம் அன்பாகப் பேசினால் அவர்களை எளிதாக ஏமாற்றிவிடலாம் என்று சிவா, போலீஸ் விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு