Published:Updated:

`திருடத்தான் போனேன்...ஆனால்!’ - பாலியல் வழக்கில் போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை இளைஞர்

பாலியல் வழக்கில் கைதான வாலிபர் சுவர் ஏறிக் குதிக்கும் காட்சி
பாலியல் வழக்கில் கைதான வாலிபர் சுவர் ஏறிக் குதிக்கும் காட்சி

4-வது மாடியில் தனியாகப் படுத்திருந்த இளம்பெண்ணை அடித்தும் மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

சென்னை திருமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் நேபாளத்தைச் சேர்ந்த தம்பதியர் குழந்தைகளுடன் தங்கியிருந்தனர். சம்பவத்தன்று இரவு அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலாளி பணிக்குக் கணவர் சென்றுவிட்டார். வாசலில் அவர், பணியில் இருந்தார். குழந்தைகள், கார் பார்க்கிங் பகுதியில் தூங்கினர். காவலாளியின் மனைவி மட்டும் 4-வது மாடியில் லிஃப்ட் அருகில் உள்ள தனியறையில் படுத்திருந்தார்.

ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன்

அப்போது, காவலாளியின் மனைவியைக் கத்தி முனையில் மிரட்டிய சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பாதிக்கப்பட்ட அந்தப்பெண், தனக்கு நடந்த கொடுமைகளை கண்ணீர் மல்க, கணவரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன்பேரில் உதவி கமிஷனர் சிவக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், பாண்டியராஜ், தலைமைக் காவலர்கள் ஜெபமணி, ரவி, ஜோசப் மற்றும் போலீஸார் ஜெயக்குமார், பரத் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படை போலீஸார் சம்பவம் நடந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள சிசிடிவி பதிவுகளை முதலில் ஆய்வு செய்தனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம், பெண்காவலர்கள் மூலம் சம்பவம் குறித்த முழுவிவரங்களையும் சேகரித்தனர்.

ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன்

போலீஸார் விசாரித்துக்கொண்டிருக்கும்போதுதான், அண்ணாநகர் ஹெச் பிளாக் முதல் தெருவில் அன்றைய தினம் இரவு ராமகிருஷ்ணன் 4 இடங்களில் சுவர் ஏறிக் குதிக்கும் சிசிடிவி காட்சி திருமங்கலம் போலீஸாருக்குக் கிடைத்தது. அதனால் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் ராமகிருஷ்ணன் ஈடுபடுவதற்கு முன் அண்ணாநகர் பகுதியில் திருட முயற்சி செய்தது தெரியவந்தது. இவர் மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட ராமகிருஷ்ணன், வெளியில் வந்து மீண்டும், திருடச் சென்றபோதுதான் தனியறையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

`பால்பாக்கெட்களை விநியோகம் செய்ய அண்ணா நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குச் செல்வேன். அப்போதுதான் சம்பவம் நடந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றேன். அதனால் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடுகள் குறித்த விவரம் எனக்கு தெரியும். திருடுவதற்காக காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து மொட்டை மாடிக்குச் சென்றேன். அப்போது 4வது மாடியில் லிஃப்ட் பக்கத்தில் உள்ள தனியறையின் கதவு திறந்திருந்தது.

ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன்

உள்ளே சென்றபோது தனியாக இளம் பெண் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். அவரின் ஆடைகள் விலகியிருந்தன. அதைப் பார்த்ததும் மனம் மாறியது. உடனே அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்தேன். கண்விழித்த அவர் என்னோடு போராடினார். மேலும், அவர் சத்தம் போட முயன்றார். உடனே அவரின் வாயை ஒரு கையால் பொத்தினேன். இன்னொரு கையால் அவரை சரமாரியாகத் தாக்கினேன். கத்தி முனையில் அவரை மிரட்டினேன். அதனால் அந்தப் பெண் உயிருக்குப் பயந்து அமைதியானார். இதையடுத்து அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றேன்' என்று விசாரணையில் ராமகிருஷ்ணன் கூறியதாக போலீஸார் கூறுகிறார்கள்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``புகார் கொடுத்த 24 மணி நேரத்துக்குள் ராமகிருஷ்ணனைக் கைது செய்துள்ளோம். சிசிடிவி காட்சிகள் இல்லையெனில் அவரைக் கைது செய்யக் காலதாமதம் ஏற்பட்டிருக்கும். இந்த வழக்கில் அண்ணாநகர் தலைமைக் காவலர் ஜெபமணி மிகவும் உறுதுணையாக இருந்தார். சிசிடிவி காட்சிகளைப் பார்த்ததும் ராமகிருஷ்ணன் குறித்த வழக்கு பின்னணிகளை விரிவாகத் தனிப்படையினருக்குத் தெரிவித்தார்.

சுவர் ஏறிக் குதிக்கும் ராமகிருஷ்ணன்
சுவர் ஏறிக் குதிக்கும் ராமகிருஷ்ணன்

அதன்அடிப்படையிலும் சிசிடிவியாலும் ராமகிருஷ்ணன், சிக்கிக்கொண்டார். ராமகிருஷ்ணனால் தாக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்குக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு