Published:Updated:

சென்னை: மனைவியின் சிகிச்சைக்கு சேமித்த பணம் - காவலாளியின் ரூ.4.70 லட்சத்தை மீட்டுக்கொடுத்த போலீஸ்!

மருத்துவச் செலவுக்காக சேமித்த பணத்தைத் திருடிய விக்னேஷ்
மருத்துவச் செலவுக்காக சேமித்த பணத்தைத் திருடிய விக்னேஷ்

சென்னையில் மனைவியின் மருத்துவச் செலவுக்காக சிறுகச் சிறுக காவலாளி சேமித்துவைத்திருந்த 4.70 லட்ச ரூபாய் திருடப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு அந்தப் பணத்தை போலீஸார் மீட்டுக் கொடுத்திருக்கின்றனர்.

நேபாளத்தைச் சேர்ந்தவர் ஷபிலால் (55). இவர், அண்ணாநகர் மேற்குப் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலாளியாகப் பணியாற்றிவருகிறார். அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் தரைதளத்திலிருக்கும் சிறிய அறைதான் ஷபிலாலின் வீடு. அந்த அறையில் மனைவியுடன் அவர் கடந்த 13 ஆண்டுகளாக வசித்துவந்தார். கிடைக்கும் சம்பளத்தில் கணவனும் மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்துவந்தனர். இந்தச் சமயத்தில் ஷபிலாலின் மனைவி கோபிலாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் கோபிலாவுக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பது தெரியவந்தது. அதனால் ஷபிலாலும் கோபிலாவும் மனவேதனையடைந்தனர்.

விக்னேஷ்
விக்னேஷ்
சென்னை: திருட்டு புல்லட் இன்ஜினில் குட்டி கார்... சினிமா ஷூட்டிங்! - இன்ஜினீயர் சிக்கியது எப்படி?

கோபிலாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். அதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகும் என்று கூறியதால் ஷபிலால், தனக்குக் கிடைக்கும் வருமானத்திலிருந்து மாதந்தோறும் சிறிய தொகையை மருத்துவச் செலவுக்காக சேமித்து வைத்தார். அந்தப் பணத்தை வீட்டில் ஒரு துணியில் கட்டிவைத்திருந்தார். அதில் 4.70 லட்ச ரூபாய் இருந்தது. இந்தச் சமயத்தில் கடந்த அக்டோம்பர் மாதம் 2 -ம் தேதி பணம் வைத்திருந்த துணியை ஷபிலால் தேடினார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த பணம் இல்லை. அதோடு இரண்டு சவரன் தங்க நகைகளும் மாயமாகியிருந்தன. அதனால் அதிர்ச்சியடைந்த ஷபிலால், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

உதவி கமிஷனர் சிவக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனியார் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் ட்ரவுசர் அணிந்து இளைஞர் ஒருவர் அடுக்குமாடிக் குடியிருப்பை நோட்டமிடும் காட்சி பதிவாகியிருந்தது. அடுத்து அந்த இளைஞர், சுவர் ஏறிக் குதித்து உள்ளே செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தன. அதைப் பார்த்த போலீஸார், அந்த இளைஞர் யாரென்று விசாரித்தனர்.

திருட்டு நடந்த இடம்
திருட்டு நடந்த இடம்

இந்தச் சமயத்தில் போலீஸார் அண்ணாநகர் மேற்கு, பாடிக்குப்பம் சாலையில் 11-ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் விக்னேஷ் (23), கொளத்தூரைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. விக்னேஷ் மீது திருமங்கலம், அண்ணாநகர், திரு.வி.க நகர், திருமுல்லைவாயல், வில்லிவாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. விக்னேஷிடம் விசாரித்தபோது அவர்தான் ஷபிலால் வீட்டில் பணம், தங்க நகைகளைக் கொள்ளையடித்தார் என்பது தெரியவந்தது.

சென்னை: `பெட் ஷீட்னு நினைச்சேன்!'- காவலாளி தலைமீது ஏறி இறங்கிய ஆடி கார்; தொழிலதிபர் மகள் கைது

இதையடுத்து அவரை போலீஸார் கைதுசெய்து 4.70 லட்சம் ரூபாயையும், தங்கநகைகளையும் பறிமுதல் செய்தனர். மனைவியின் மருத்துவச் செலவுக்காக சேமித்துவைத்திருந்த பணம், நகைகள் திரும்பக் கிடைத்த தகவலை ஷபிலாலுக்கு போலீஸாருக்கு தெரிவித்தனர். அதைக் கேட்டு அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். பிறகு காவல் நிலையத்துக்குச் சென்று பணம், நகைள் கிடைக்க நடவடிக்கை எடுத்த போலீஸாருக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார். சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு ஷபிலாலிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. ஷபிலாலின் சோகக்கதையைக் கேட்ட காவல்துறை அதிகாரிகள், இந்தத் திருட்டு வழக்கைத் திறம்பட விசாரித்து நடவடிக்கை எடுத்த தனிப்படை போலீஸாருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

கைது
கைது
representational image

இது குறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ``கடந்த ஆறு மாதங்களாக திருமங்கலம்,அண்ணாநகர், திரு.வி.க நகர், திருமுல்லைவாயில், வில்லிவாக்கம் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் திறந்திருக்கும் வீடுகளை விக்னேஷ் நோட்டமிடுவார். பிறகு அந்த வீட்டுக்குள் நுழைந்து செல்போன், பணம், நகைகளைக் கொள்ளையடிப்பார். அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்துவந்திருக்கிறார். ஷபிலாலின் வீட்டுக்குள் நுழைந்து செல்போனைத் திருட விக்னேஷ் அதைத் தேடியிருக்கிறார். அப்போதுதான் பணம் வைத்திருந்த துணி, அவரின் கையில் சிக்கியிருக்கிறது. `செல்போன் திருட வந்த இடத்தில் இவ்வளவு பணமா?’ என அதைத் திருடிக்கொண்டு நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சென்றிருக்கிறார் விக்னேஷ். அங்கு விருந்து, மது என பணத்தை விக்னேஷ் செலவழித்திருக்கிறார். அதன் பிறகு சென்னை திரும்பிய சமயத்தில்தான் வாகன சோதனையில் சிக்கிக்கொண்டார்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு