Published:Updated:

`ஓனர் கண்முன்னாலே பணத்தைத் திருடியது எப்படி?'- இரான் கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

எஸ்.மகேஷ்

``டிராவல்ஸ் நிறுவன ஓனர் கண் முன்னால் எப்படி பணத்தைத் திருடினோம்'' என்று இரான் நாட்டைச் சேர்ந்த கொள்ளையர்கள் போலீஸாரிடம் விளக்கம் அளித்துள்ளனர்.

ameer ali
ameer ali

சென்னை ஆயிரம்விளக்கு மாடல் பள்ளி சாலை, குலாம் அப்பாஸ் அலிகான் 9-வது தெருவில் டிராவல்ஸ் மற்றும் பணப் பரிமாற்றம் நிறுவனம் நடத்திவருபவர், ஜெயின்ஷா (38). கடந்த 21-ம் தேதி, இரண்டு வெளிநாட்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள், ஜெயின்ஷாவிடம் 'அமெரிக்க டாலர்களை மாற்ற வேண்டும்' என ஆங்கிலத்தில் பேசியுள்ளனர். உடனே ஜெயின்ஷா, 'எவ்வளவு டாலர்களை மாற்ற வேண்டும்' எனக் கேட்டுள்ளார். அதற்கு வெளிநாட்டு இளைஞர்கள், 'கமிஷன் எவ்வளவு' என்பனபோன்ற விவரங்களைக் கேட்ட பின், ''டாலர்களை மாற்ற வருகிறோம்'' என்று கூறியபடி அவர்கள் இருவரும் வெளியில் சென்றனர்.

மோசன் இலாஹி
மோசன் இலாஹி

இந்தச் சமயத்தில், டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள் 17-ம், 500 ரூபாய் நோட்டுகள் 2-ம் என மொத்தம் 35,000 ரூபாய் மாயமாகியிருந்ததைப் பார்த்த ஜெயின்ஷா, அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் அவர் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சிசிடிவி கேமரா பதிவுகளை அவர் ஆய்வுசெய்தார். அப்போது, டாலரை மாற்றும் விவரங்களைக் கேட்க வந்த வெளிநாட்டு இளைஞர்களில் ஒருவர், கேஷ் கவுன்டர் டிராயரில் இருந்து பணத்தை எடுக்கும் காட்சி பதிவாகியிருந்தது. உடனே ஜெயின்ஷா, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் சிசிடிவி வீடியோ பதிவை ஆதாரமாகக் கொண்டு புகார் அளித்தார். அதோடு, தன் நண்பர்களுக்கும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்துபவர்களுக்கும் வெளிநாட்டு இளைஞர்கள் பணத்தைத் திருடும் வீடியோவை வாட்ஸ்அப்பில் அனுப்பிவைத்திருந்தார்.

புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டியன், ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்தச் சமயத்தில், ஜெயின்ஷாவின் டிராவல்ஸ் நிறுவனத்தில் கைவரிசையைக் காட்டிய வெளிநாட்டு இளைஞர்கள், மீண்டும் இன்னொரு டிராவல்ஸ் நிறுவனத்தில் டாலர்களை மாற்ற வேண்டும் என்று கூறி வந்துள்ளனர். அவர்களைப் பார்த்ததும், சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் அந்த இளைஞர்களிடம் ஜாக்கிரதையாகப் பேசியபடி, ஜெயின்ஷாவுக்குத் தகவல் தெரிவித்தார்.

dollar
dollar

ஜெயின்ஷா, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். ஜெயின்ஷா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் வெளிநாட்டு இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை போலீஸார் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். விசாரணையில், அவர்களின் பெயர் அமிர்அலி (29), மோசன் இலாஹி (29) இருவரும் இரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அவர்களிடமிருந்து இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் 3,500 அமெரிக்க டாலர்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Vikatan

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``அமிர்அலி, மோசன் இலாஹி மற்றும் ஜாஷம் ஆகியோர் இரானிலிருந்து விமானத்தில் டெல்லி வந்துள்ளனர். அங்கிருந்து ரயில்மூலம் சென்னை வந்துள்ளனர். இவர்கள் மூன்றுபேரும் அமெரிக்க டாலர்களை மாற்ற வேண்டும் என டிராவல்ஸ் நிறுவனங்களை அணுகியுள்ளனர். இப்படி வருபவர்களில் ஒருவர், டாலர்களை மாற்றுவது குறித்த விவரங்களைக் கேட்பார். இன்னொருவர், பணம் வைக்கும் இடத்தில் இருப்பவரிடம் பேச்சுக் கொடுப்பார். டாலர்களைக் கொடுத்தால் 2,000 ரூபாய் நோட்டுகள் அல்லது 500 ரூபாய் நோட்டுகளில் எந்த நோட்டுகளைக் கொடுப்பீர்கள் என்று ஆங்கிலத்தில் விசாரிப்பார். அதன்பிறகு, கேஷ் கவுன்டரில் உள்ளவரிடம் 2,000 ரூபாய் நோட்டுகளின் கட்டுகளைக் கொடுங்கள் எண்ணிப்பார்த்துவிட்டு தருகிறேன் என்று சொல்வார். அதை நம்பி ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தால், அவர் கண் முன்னால்தான் இரானைச் சேர்ந்தவரும் எண்ணுவார்.

ameer ali
ameer ali

ஆனால், எண்ணும்போதே பணத்தை டெக்னிக்காக எடுத்துவிடுவார். பிறகு, ரூபாய் நோட்டுகளை டிராவல்ஸ் ஊழியரிடம் கொடுத்துவிட்டு, டாலர்களைக் கொண்டுவருவதாகச் சொல்லி அங்கிருந்து சென்றுவிடுவார்கள். இவர்கள் ரூபாய் நோட்டுகளை எண்ணும்போது, அதை எப்படித் திருடுவார்கள் என்பதைப் பல தடவை இரான் நாட்டைச் சேர்ந்த கொள்ளையர்களிடம் விசாரித்துவிட்டோம். ஆனால் அவர்கள், அந்த டெக்னிக்கை எங்களிடம் சொல்ல முதலில் மறுத்தனர். சென்னையில் எங்கு தங்கியுள்ளீர்கள் என்று கேட்டதற்கு ரயில்வே பிளாட்பாரம் என்று பதிலளித்தனர். மேலும், எந்தக் கேள்வியைக் கேட்டாலும் விம்மி விம்மி அழுதனர். இருப்பினும், அவர்களிடமிருந்து வழக்குக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுள்ளோம்'' என்றார்.

இரான் நாட்டைச் சேர்ந்த அமிர்அலி, மோசன் இலாஹி பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்துள்ளனர். இரானிலிருந்து இந்தியாவுக்கு வரும்போது அமெரிக்க டாலர்களைக் கொண்டு வந்துள்ளனர். அதைத்தான் அவர்களின் முதலீடாக வைத்துக்கொண்டு சென்னையில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களில் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஜெயின்ஷா பணத்தை இழந்ததும் புத்திசாலித்தனமாக சிசிடிவி பதிவை வாட்ஸ்அப்பில் அனுப்பி, மற்றவர்களை உஷார்படுத்திவிட்டார். இல்லையெனில், இரான் கொள்ளையர்கள் தொடர்ந்து பலரிடம் கைவரிசை காட்டியிருப்பார்கள் என்கின்றனர் போலீஸார். மேலும், இவர்கள் இருவரும் டிப்டாப்பாக இருப்பதால், டிராவல்ஸ் நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை.

ameer ali
ameer ali

இந்த வழக்கை விசாரித்த போலீஸாரிடம், ரூபாய் நோட்டுகளை எண்ணும்போது எப்படி இரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் திருடுகிறார்கள் என்ற கேள்வியைக் கேட்டோம். அதற்கு போலீஸார், ``ரூபாய் நோட்டுகளை இரண்டாகப் பிரிப்பார் அமிர்அலி. அதன்பிறகு, கைக்குள் அடங்கும் அளவுக்கு ரூபாய் நோட்டுகளை சுருட்டி கைக்குள் வைத்துவிடுவார். மீதியுள்ள ரூபாய் நோட்டுகளை மட்டும் திரும்பக் கொடுத்துவிடுவார். இந்த டெக்னிக் மூலம்தான் இரான் கொள்ளையர்கள் டிராவல்ஸ் நிறுவனத்தில் கைவரிசை காட்டிவந்துள்ளனர். பணம் திருடுவதை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது'' என்றனர்.

ஜெயின்ஷா அனுப்பிய சிசிடிவி பதிவில், ``இரானைச் சேர்ந்தவர்கள், டிராவல்ஸ் நிறுவனத்தில் டாலர் மாற்றுவது தொடர்பாகப் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, டிராவல்ஸ் நிறுவன ஓனர் ஜெயின்ஷா, கல்லாப்பெட்டியைத் திறந்து ரூபாய் நோட்டுகளை எடுக்கிறார். அப்போது, இரான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், கல்லாப்பெட்டியிலிருந்து ரூபாய் நோட்டுக் கட்டுகளை கையால் எடுக்கிறார். பிறகு, அதை ஓனர் கண் முன்னால் எண்ணுகிறார். அதன்பிறகு, கையை பேன்ட் பாக்கெட்டில் விடுகிறார். இந்தக் காட்சிகள் வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.

ameer ali
ameer ali

இரான் கொள்ளையர்களின் வீடியோ, தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டுள்ளது. இவர்கள் குறித்த தகவல்கள், புகார்கள் இருந்தால் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தை அணுகலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரான் கொள்ளையர்களிடம் ஆங்கிலத்தில் விசாரித்த போலீஸாரிடம், அவர்களின் தாய் மொழியில் பதிலளித்துள்ளனர். இதனால் போலீஸாரே ஒரு கணம் திகைத்துள்ளனர். எப்படியோ, இரான் கொள்ளையர்களைக் கைது செய்து சிறையில் தள்ளிவிட்டோம்'' என நிம்மதிப் பெருமூச்சுவிட்டுள்ளது ஆயிரம் விளக்கு போலீஸ்.