Published:Updated:

வீட்டைவிட்டு வெளியேறிய 16 வயது சென்னை சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - சிக்கிய 3 பெண்கள்

எஸ்.மகேஷ்

வீட்டில் ஏற்பட்ட சண்டை காரணமாக வெளியில் சென்றாள் சிறுமி. அவளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதைப்போல நடித்த பெண்கள், சிறுமிக்கு செய்த கொடுமைகளைக் கேட்டு பெற்றோர், உறவினர்கள், போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நிஷா
நிஷா

வடசென்னையைச் சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றம்) இவர் வீட்டு வேலைகளைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார். ரம்யாவுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். இவரின் 16 வயது மகள், 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.

கடந்த 3-ம் தேதி நள்ளிரவு வீட்டை விட்டு வெளியேறிய அந்த 16 வயது சிறுமி, சில தினங்களாகக் காணவில்லை. இந்த நிலையில், சிறுமியை பல இடங்களில் தேடிய ரம்யா, கடந்த 7-ம் தேதி புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், `பாட்டியிடம் கோபித்துக்கொண்டு தன்னுடைய மகள் வீட்டை விட்டு வெளியில் சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை' என்று ரம்யா கூறியிருந்தார்.

ஜெபினா
ஜெபினா

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சசிபாய், மகாலட்சுமி மற்றும் போலீஸார் ரம்யாவின் மகளைத் தேடினர். இந்த நிலையில் வீட்டுக்கு வந்தார் 16 வயது சிறுமி. அவரிடம் ரம்யா, இவ்வளவு நாள் எங்கு சென்றாய் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்தச் சிறுமி கூறிய தகவல்களைக் கேட்டு ரம்யா மற்றும் அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மகளை அழைத்துக்கொண்டு புளியந்தோப்பு காவல் நிலையத்துக்குச் சென்றார் ரம்யா. அங்கு இன்ஸ்பெக்டர் ரவியிடம் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரமாகக் கூறினார். இதையடுத்து போலீஸ் டீம், சிறுமியை கொடுமைப்படுத்தியவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``16 வயது சிறுமியின் குடும்பம் ஓட்டேரியில் தங்கியிருந்த சமயத்தில் அந்தப்பகுதியைச் சேர்ந்த ஜெபினா என்ற பெண்ணுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, ஜெபினா வீட்டுக்குச் சென்றுள்ளார். அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டிய ஜெபினா, சிறுமிக்கு மதுவாங்கி கொடுத்துள்ளார். ஜெபினாவும் சிறுமியும் மது அருந்தியுள்ளனர்.

இந்தச்சமயத்தில் சிறுமியை பல கோணங்களில் புகைப்படம் எடுத்த ஜெபினா, அந்தப் புகைப்படங்களை வியாசர்பாடியைச் சேர்ந்த முபினா பேகத்துக்கு அனுப்பிவைத்துள்ளார். புகைப்படங்களைப் பார்த்த அவர், சிறுமியை வைத்து சில கணக்குகளைப் போட்டுள்ளார். இதையடுத்து, ஜெபினா வீட்டுக்கு வந்த முபினா பேகம், சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமி, அங்கு செல்ல மறுத்துள்ளார்.

முபினா பேகம்
முபினா பேகம்

அவரை சமாதானப்படுத்திய ஜெபினா, `முபினா பேகத்துடன் நீ சென்றால் இந்த உலகில் சந்தோஷத்தின் உச்சத்துக்குச் செல்லலாம். நீ விரும்பியதை எல்லாம் செய்துகொடுப்பார். அவளும் நானும் ஒன்றுதான்' என்று கூறியுள்ளார். அதன்பிறகே முபினா பேகத்துடன் சிறுமி சென்றார்.

அவரின் வீட்டில் இருந்த சிறுமிக்கு மீண்டும் மது விருந்தளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு சிறுமியை புரசைவாக்கத்தைச் சேர்ந்த நிஷா என்பவரின் வீட்டுக்கு முபினா பேகம் அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியிடம் அன்பாக பழகியுள்ளார் நிஷா. இதனால் நிஷாவை சிறுமி முழுமையாக நம்பியுள்ளார்.

அன்றைய தினம் சிறுமிக்கு மதுவிருந்தளிக்கப்பட்டது. போதையில் இருந்த சிறுமியை நிஷா, ஒரு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு 5 பேர் இருந்துள்ளனர். அவர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன்பிறகும் சிறுமிக்கு தொடர்ந்து அந்தக் கொடுமை மூன்று நாள்களுக்கு நடந்துள்ளது.

Representational image
Representational image

கடந்த 9-ம் தேதி சிறுமியை ஆட்டோவில் அழைத்து வந்து அவரின் வீட்டில் விட்டுவிட்டு நிஷா டீம் தப்பியுள்ளது. இந்தத் தகவலை சிறுமி எங்களிடம் தெரிவித்ததும் ஜெபினா, முபினா பேகம், நிஷா ஆகிய மூன்று பேரை பிடித்தோம். அவரிடம் விசாரித்தபோதும் சிறுமி கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மை என்று தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியைக் காப்பகத்துக்கு அனுப்பிவைத்துள்ளோம். அதோடு மூன்று பெண்களை புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்'' என்றார்.